அன்பில்லாதவன் தேவனை அறியான்

ஜார்ஜ் ஒயிட் பீல்ட் உலக புகழ்பெற்ற பிரபலமான சுவிசேஷகர். 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பெரிய எழுப்புதல் உண்டானபோது இவருடைய ஊழியமும் அதில் பெரும் பங்காயிருந்தது. இங்கிலாந்து நகரங்களின் வீதிகளில் நின்றுகொண்டு இவர் கொடுத்த சுவிசேஷ செய்தியின் மூலம் அநேகர் மனம் திரும்பி இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டனர்.

ஓயிட்பீல்ட் ஒரு முறை குதிரை வண்டியில் பிரயாணப்பட்டுபோய் கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு பெண் அதே குதிரை வண்டியில் ஏறினாள். சிறிது தூர பிரயாணத்திற்கு பிறகு தனக்கு எதிரே அமர்ந்திருந்த ஊழியரிடம் அப்பெண், ‘நீங்கள் தான் சுவிசேஷகர் ஒயிட் பீல்டா? உங்களை பார்த்தால் அவர் போல் தெரிகிறதே’ என்று கேட்டாள்.

அவரும் அந்த பெண்ணிடம் ‘ ஆமாம் நான்தான் நீங்கள் கூறுகிறவர்’ என பதிலளித்தார். உடன்தானே அந்த பெண் சற்றும் தாமதிக்காமல், குதிரை வண்டி ஓட்டுநரை பார்த்து, ‘இப்போழுதே வண்டியை நிறுத்துங்கள். நான் கீழே இறங்கி கொள்கிறேன். இந்த ஆளோடு நான் பயணம் செய்ய விரும்பவில்லை’ என கூறி வண்டியை விட்டு கீழே இறங்கினாளாம். அச்சமயம் அப்பெண்ணிடம் ஒயிட் பீல்ட் இப்படியாக ஒரு கேள்வி கேட்டார், ‘என் அன்பு சகோதரியே, நீங்கள் வெறுக்கும் இந்த ஜார்ஜ் ஒயிட் பீல்ட் பரலோகத்தில் இருப்பாரென்றால், அங்கும் இருக்க மாட்டேன், நரகத்திற்கு செல்கிறேன் என்று கூறுவீர்களானால் நீங்கள் இப்பொழுது எடுத்த முடிவு சரி என்பேன்’ என்றாராம்.

என்ன காரணத்தாலோ அப்பெண்ணுக்கு ஊழியர் மேல் அத்தனை பகையுணர்வு. அவரோடு ஒரே வண்டியில் பயணிக்க முடியாத அளவிற்கு அவளது இருதயத்தை சாத்தான் விரோதத்தால் நிரப்பியிருந்தான். பரிசுத்த வேதாகமத்திலும் பகையுணர்வினால் நிறைந்த அநேகரை காணலாம். தன் சகோதரனான ஆபேலை கொலை செய்யும் அளவிற்கு பகையால் நிரம்பின காயீன், தாவீதை பகைத்த சவுல் என அநேகரை காணலாம்.

சாதனை படைக்காமல் சாதனையாளராக முடியாது. ஆனால் வேதத்தின்படி கொலை செய்யாமலே கொலை பாதகனாக விடலாம். நாம் பகையுணர்வினால் காயீனைப்போல கொலை செய்யாமல் இருக்கலாம். ஆனால் பிறரை உள்ளத்தில் நெருப்பாய் பகைப்பது தேவனுடைய பார்வையில் கொலைப்பாதகமே!

ஒரு மனிதனின் இருதயத்தில் காணப்படும் விரோதம், கோபம், வெறுப்பு, கசப்பு, பகைமை இவற்றின் மொத்த உருவம் அவனை கொலை செய்ய தூண்டி விடுகிறது. இதற்கு சட்டபப்படி தண்டனை உண்டு. ஆனால் மனதிலுள்ள பகையுணர்விற்கு உலக சட்டத்தின்படி தண்டனை கிடையாது. ஆனால் தேவ சட்டத்தின்படி கொலையாளியாய் தீர்ப்பிடப்படுகிறோம்.

பிரியமானவர்களே, நீங்கள் காயீன் ஆபேலை போல் ஒரே வயிற்றில் பிறந்த சகோதரராயிருக்கலாம், ஒரே தேவனை தொழுது கொள்ளலாம், ஒரே ஆலயத்திற்கு செல்லாம், காணிக்கயையும் படைக்கலாம். ஆனால் உள்ளத்தில் உடன் பிறந்தவர் மீதோ, சபையாரின் மீதோ அயலகத்தார் மீதோ நமக்கு வெறுப்பு உண்டா? உலக பார்வைக்கு, சாந்த சொரூபியைப் போலவும், உள்ளத்தில் கொலையாளியாகவும் காணப்படுகிறோமா?

ஒரு சிலர், ஊழியக்காரர்களுக்கு விழுந்து விழுந்து உபசாரம் செய்வார்கள். காணிக்கையை அள்ளி அள்ளி கொடுப்பார்கள், ஆனால் தேவையில் இருக்கும் சொந்த சகோதாகளுக்கோ, சகோதரிகளுக்கோ உறவினர்களுக்கோ ஒரு நயா பைசா தர மாட்டார்கள்! கர்த்தர் அதை ஏற்று கொள்வார் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை! ‘ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்’ (யாக்கோபு 2: 15-17).

கர்த்தரும் ‘நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து’ (மத்தேயு 5:23-24) என்று சொன்னாரே!

முதலாவது, நமது சொந்த சகோதர சகோதரிகளை நேசிக்க கற்று கொள்வோம், பின் கர்த்தருக்கு செய்யும் எந்த காரியத்தையும் கர்த்தர் அங்கீகரிப்பார். அல்லாதபடி, நம் இருதயத்தில் சகோதர சகோதரிகளை வெறுக்கிறவர்களாக வாழ்வோமானால், நாம் கர்த்தருக்கென்று செய்யும் எந்த தியாகத்தினாலும், செய்கைகளினாலும் பயனில்லை!

தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.  (1 யோவன் 3:15)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 4 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *