அறுவடை காலம்

ஒரு சிலந்தி பூச்சி நெற்பயிரின் வயலில் தன் கூட்டை கட்டி வாழ்ந்து வந்தது. அந்த கூட்டில் சிக்கும் சிறு பூச்சிகளை தன் இரையாக உண்டு தன் காலத்தை சந்தோஷமாக கழித்து வந்தது. ஒரு நாள் ஒரு சிறு பூச்சி அதில் மாட்டி கொண்டது. சிலந்தி அதை இரையாக்க முயன்றபோது, அந்த பூச்சி சிலந்தியிடம், நீ என்னை சாப்பிடாமல் விட்டுவிட்டால், நீ உன் உயிரை காப்பாற்றி கொள்ளும்படியான ஒரு முக்கிய செய்தியை உனக்கு சொல்லுவேன்’ என்றது. சிலந்தி ஒரு சிரிப்பு சிரித்து விட்டு, ‘என்ன செய்தி’ என்று கேட்டது. அதற்கு அந்த பூச்சி, ‘நீ இந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு போய்விடு. அறுவடை காலம் வருகிறது’ என்றது.

அப்போது, சிலந்தி ‘நீ என்னிடம் கதை விடுகிறாய், அறுவடை அது இது என்று, என்னிடமிருந்து தப்பித்து கொள்ள நீ சும்மா ஏதோ கதை விடுகிறாய்’ என்றது. அதற்கு அந்த சிறுப்பூச்சி, ‘இல்லை, இது உண்மை, நான் சொல்வதை கேள், இந்த வயலின் எஜமானர் அறுவடை செய்ய சீக்கிரம வரப்போகிறார். ஆகவே இந்த இடத்திலிருந்து நீ வேகமாய் சென்று விடு. முதிர்ந்து நிற்கும் அந்த கதிர்களை பார், எஜமானர் ஒரு பெரிய மெஷினை கொண்டு வந்து, கதிர்களை கொய்வார். அப்போது நீ கொல்லப்படுவாய், ஆகவே நீ போய்விடு’ என்று கூறியது.

சிலந்தியோ, ‘எனக்கு அறுவடை மீதோ, ஒரு பெரிய இயந்திரம் வந்து அவைகளை கொய்து எடுக்கும் என்றோ நம்பிக்கை இல்லை, நான் இங்கு வந்தது முதல் எல்லாம் அப்படியே தான் இருக்கிறது, ஒரு மாற்றமும் இல்லை, நான் சந்தோஷமாக காலத்தை கழித்து வருகிறென். உனக்கு அது பொறுக்கவில்லை, நீ சொல்வதை நான் கேட்க விரும்பவில்லை, சும்மா கதை பேசி கொண்டிருக்காதே’ என்று சொல்லி இந்த சிறுப்பூச்சியை இரையாக விழுங்கி விட்டது.

அடுத்தநாள், மழையோ காற்றோ இல்லாமல் சூரியன் உதித்து, எல்லாம் நன்றாக இருந்தது. சிலந்தி வலையில் சிக்கிய ஒரு பூச்சியை உண்டுவிட்டு, குட்டி தூக்கம் போட ஆரம்பித்த போது, ஏதோ ஒரு இயந்திரம் அருகில் வரும் சத்தம் கேட்டது. ஒரு நிமிடத்தில் அதன் கூடும் சிலந்தியும் அழிந்து போனது.

கர்த்தருடைய வருகையின் நாட்கள் மிகவும் சமீபித்து விட்டது. ஆனால் உலக மக்களோ எதுவுமே நடக்க போவதில்லை என்பதை போல் தங்கள் இஷ்டப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘என்னுடைய சிறுவயதிலிருந்து இயேசுகிறிஸ்து சீக்கிரம் வரப்போகிறார் என்று கேட்டு கொண்டிருக்கிறேன், இதுவரை வரவில்லை, என்னுடைய பிள்ளைகளும் இதோ கிறிஸ்து வரப்போகிறார் என்பதை கேட்டு கொண்டிருக்கிறார்கள், ஒருவேளை எல்லாமே கட்டுக்கதையோ’ என்று நினைப்பவர்களும் உண்டு.

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். அதை உணராமல், கிறிஸ்து எங்கே வரப்போகிறார் என்று நிர்விசாரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம் ஏராளம்.

காலத்தின் போக்கை பாருங்கள், ஜனவரி மாதம் முதலாம் நாளே எகிப்தில் பிரச்சனை ஆரம்பமானது. கிறிஸ்தவர்கள் கூடி புது வருட ஆராதனையை செலுத்தி கொண்டிருக்கும்போதே அவர்கள் மேல் தற்கொலை படையை சேர்ந்த ஒருவனின் குண்டு வெடித்து, ஆராதித்து கொண்டிருந்த 21 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்கள். இப்போது நான் எழுதி கொண்டிருக்கும்போது, எகிப்தில் மில்லியன் மக்கள் கூடி எகிப்திய அதிபரை பதவியை விட்டு விலக கோரி போராடி கொண்டிருக்கிறார்கள். மத்திய கிழக்கு பகுதியிலேயே அமைதியாக இருந்த ஒரு நாடு எகிப்து நாடாகும். இஸ்ரவேல் தேசத்திற்கு ஒரு நல்ல நண்பனாக முபாரக் இருந்து வந்தார்.

இப்போது அவர் பதவி விலக நேரிட்டால், இஸ்ரவேல் தேசத்தை எதிரியாக நினைக்கும் ஒரு கூட்டத்தினர் பதவி ஏற்க நேரிடும். அதனால் இஸ்ரவேலருக்கும் ஆபத்து. கடைசி காலம் நெருங்கி விட்டபடியால், அவர்களுக்கு எதிராக ஒரு அணியாக புறப்பட மத்திய கிழக்கு நாடுகள் ஒன்று சேரும் காலம் நெருங்கி விட்டது. கர்த்தரின் வருகை சீக்கிரம் என்பதை இவை வெளிப்படுத்துகின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் கர்த்தரின் வருகை மிகவும் சமீபம் என்று வெளிப்படுத்தி கொண்டே இருக்கின்றன. நாம் ஆயத்தப்பட வேண்டும். மற்றவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும்.

விலையேறப்பெற்ற இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, இரட்சிக்கப்பட்டு, முழுக்கு ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்தமாய் வாழ்ந்து அவருடைய வருகைக்கு ஆயத்தப்பட வேண்டும். ‘ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்று தம்மிடம் வந்து தம்மை போற்றி பேசிய நிக்கோதேமு என்ற பரிசேயனிடம், இயேசுகிறிஸ்து பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் – (யோவான் 3:3) மறுபடியும் பிறந்தால், அதாவது இயேசுகிறிஸ்துவின் இரத்ததத்தால் கழுவப்பட்டு பாவ மன்னிப்பு பெற்றால், தேவனுடைய ராஜ்யத்தை காணமட்டுமே முடியும்.

ஆனால், ‘ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்’ – (யோவான் 3:5) என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். ஒருவன் ஜலத்தினாலும் அதாவது, முழுக்கு ஞானஸ்நானம் எடுத்தும், ஆவியினாலும் அதாவது பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தினாலும் பிறந்திருக்க வேண்டும்.

அவனே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும் என்று திட்டவட்டமாக மெய்யாகவே மெய்யாகவே என்று இரண்டு முறை கூறி இயேசு அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறார். கர்த்தர் சொன்ன வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படிந்து அவருடைய வருகைக்கு நாம் ஆயத்தபட வேண்டியது மிகவும் அவசியமல்லவா?

நாம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவோம், அவருடைய ஆசீர்வாதத்தை பெற்று கொள்வோம். கர்த்தரின் வருகை மிகவும் சமீபமாயிருக்கிறது. மாரநாதா! ஆமென் அல்லேலூயா!

முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்’ 

(2 பேதுரு 3,4,9)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 4 times, 3 visits today)