தேவன் ஆபிராமை அழைக்கிறார்
1. கர்த்தர் ஆபிராமிடம், “நீ உனது ஜனங்களையும், நாட்டையும், தந்தையின் குடும்பத்தையும்விட்டு வெளியேறி நான் காட்டும் நாட்டுக்குப் போ.
2. நான் உன் மூலமாக ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன். நான் உன்னை ஆசீர்வதிப்பேன். உனது பெயரைப் புகழ்பெறச் செய்வேன். ஜனங்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்க உன் பெயரைப் பயன்படுத்துவர்.
3. உன்னை ஆசீர்வதிக்கிற ஜனங்களை நான் ஆசீர்வதிப்பேன். உன்னை சபிப்பவர்களை நான் சபிப்பேன்.நான் உன் மூலம் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களையும் ஆசீர்வதிப்பேன்” என்றார்.
ஆபிராம் கானானுக்குப் போகிறான்
4. எனவே, ஆபிராம் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஆரானை விட்டுப் போனான். லோத்து அவனோடு சென்றான். அப்போது ஆபிராமுக்கு 75 வயது.
5. ஆபிராம் ஆரானை விட்டு போகும்போது தன் மனைவி சாராயையும், தன் சகோதரனுடைய மகனான லோத்தையும், எல்லா அடிமைகளையும், ஆரானில் அவனுக்குச் சொந்தமான அனைத்தையும் எடுத்துக்கொண்டு போனான். அவர்கள் ஆரானை விட்டுக் கானானை நோக்கிப் பயணம் செய்தனர்.
6. ஆபிராம் கானான் தேசத்தின் வழியாகப் பயணம் செய்து சீகேம் நகரம் வழியே மோரேயில் இருக்கும் பெரிய மரங்கள் உள்ள இடத்திற்கு வந்தான். அக்காலத்தில் அங்கு கானானியர் வாழ்ந்தனர்.
7. கர்த்தர் ஆபிராமுக்குக் காட்சியளித்து, “நான் உன் சந்ததிக்கு இத்தேசத்தைக் கொடுப்பேன்” என்றார். கர்த்தர் காட்சியளித்த இடத்தில் ஆபிராம் கர்த்தரைத் தொழுகைசெய்ய ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
8. பின் ஆபிராம் அந்த இடத்தை விட்டு பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போனான். அங்கு அவன் கூடாரம் போட்டான். பெத்தேல் நகரம் மேற்காக இருந்தது. ஆயீ நகரம் அதற்குக் கிழக்கே இருந்தது. அங்கு ஒரு பலிபீடத்தை கர்த்தருக்கு அமைத்து கர்த்தரைத் தொழுதுகொண்டான்.
9. மீண்டும் ஆபிராம் பயணம் செய்து பாலைவனப் பகுதிக்குச் சென்றான்.
எகிப்தில் ஆபிராம்
10. அந்நாட்களில் பூமியில் பஞ்சம் ஏற்பட்டது. மழை இல்லாததால் உணவுப் பொருட்களும் விளையாமல் இருந்தது. எனவே ஆபிராம் எகிப்திற்கு பிழைப்பதற்காகப் போனான்.
11. தன் மனைவி சாராய் மிகவும் அழகாக இருக்கிறாள் என்று எண்ணிய அவன், எகிப்தை நெருங்குவதற்கு முன் சாராயிடம், “நீ வெகு அழகான பெண் என்பது எனக்குத் தெரியும்.
12. எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது அவர்கள், ‘இவள் இவனுடைய மனைவி’ என்று பேசுவார்கள் பிறகு உன்னை அடைய விரும்பி என்னைக் கொன்றுவிடுவார்கள்.
13. அதனால் நான் அவர்களிடம் நீ என் சகோதரி என்று கூறுவேன். பிறகு அவர்கள் என்னைக் கொல்லமாட்டார்கள். நான் உன் சகோதரன் என்பதால் அவர்கள் என் மீது கருணையோடு இருப்பார்கள். இவ்வகையில் நீ என் உயிரைக் காப்பாற்றலாம்” என்றான்.
14. எனவே ஆபிராம் எகிப்துக்குப் போனான். அங்குள்ள ஜனங்கள் சாராய் மிகவும் அழகானவளாக இருப்பதைப் பார்த்தனர்.
15. சில எகிப்தின் தலைவர்களும் அவளைப் பார்த்தனர். அவள் மிகவும் அழகான பெண் என்று அவர்கள் பார்வோனிடம் கூறினர். அவர்கள் அவளை பார்வோனுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
16. ஆபிராமை சாராயின் சகோதரனாக எண்ணி பார்வோனும் ஆபிராமிடம் அன்பாக இருந்தான். பார்வோன் அவனுக்கு ஆடுகள், மாடுகள், பெண் வேலையாட்கள், கழுதைகள், ஒட்டகங்கள் என்று பலவற்றைக் கொடுத்தான்.
17. பார்வோன் ஆபிராமின் மனைவியை எடுத்துக்கொண்டான். எனவே பார்வோனும் அவனது வீட்டில் உள்ளவர்களும் கொடிய வியாதியுறுமாறு கர்த்தர் சபித்துவிட்டார்.
18. எனவே பார்வோன் ஆபிராமை அழைத்தான். அவன், “நீ எனக்கு மிகக் கெட்ட காரியத்தைச் செய்துள்ளாய்! சாராய் உன் மனைவி என்று சொல்லாமல்,
19. அவளை உன் சகோதரி என்று ஏன் சொன்னாய்? நான் அவளை எடுத்துக்கொண்டதால் அவள் எனது மனைவியாக இருந்திருப்பாளே. ஆனால் இப்பொழுது உன் மனைவியை உனக்கு நான் திரும்பிக் கொடுக்கிறேன். அவளை அழைத்துகொண்டு போய்விடு” என்றான்.
20. பிறகு, பார்வோன் தன் வீரர்களிடம், ஆபிராமை நாட்டைவிட்டு வெளியே அனுப்புமாறு கட்டளையிட்டான். எனவே, ஆபிராமும் அவனது மனைவியும் அவர்களுக்குச் சொந்தமானவற்றை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர்.
ஆதியாகமம் அதிகாரங்கள்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50