யாக்கோபு தன் மகன்களை ஆசீர்வதித்தல்

1. பின்பு யாக்கோபு தன் அனைத்து பிள்ளைகளையும் அழைத்து, “பிள்ளைகளே! என்னிடம் வாருங்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்கிறேன்.

2. “சேர்ந்து வாருங்கள், கவனியுங்கள். யாக்கோபின் பிள்ளைகளே. இஸ்ரவேலாகிய உங்கள் தந்தை சொல்வதைக் கேளுங்கள்.

ரூபன்

3. “ரூபனே! என் முதல் மகனே! நீ எனக்கு முதல் பிள்ளை. எனது மனித சக்தியின் முதல் அடையாளம் நீயே. நீயே வல்லமையும் மரியாதையும் உள்ள மகனாக விளங்கியிருக்கலாம்.

4. ஆனால் உனது உணர்ச்சிகளை வெள்ளம்போல உன்னால் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கிறது. எனவே நீ மரியாதைக்குரியவனாக இருக்கமாட்டாய். நீ உன் தந்தையின் படுக்கையில் அவர் மனைவிகளுள் ஒருத்தியோடு படுத்தவன். நீ எனது படுக்கைக்கே அவமானம் தேடித் தந்தவன்.

சிமியோனும் லேவியும்

5. “சிமியோனும் லேவியும் சகோதரர்கள். அவர்கள் வாள்களால் சண்டையிடுவதை விரும்புவார்கள்.

6. இரகசியமாகப் பாவம் செய்யத் திட்டமிடுவார்கள். அவர்களின் திட்டங்களில் என் ஆத்துமா பங்குகொள்ள விரும்பவில்லை. அவர்களின் இரகசியக் கூட்டங்களை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். கோபமாக இருக்கும்போது மனிதர்களைக் கொல்லுகிறார்கள், மிருகங்களை வேடிக்கைக்காகவே துன்புறுத்துகிறார்கள்.

7. அவர்களின் கோபமே ஒரு சாபம். அது வலிமையானது. அவர்கள் பைத்தியமாகும்போது கொடூரமானவர்களாகிறார்கள். யாக்கோபின் பூமியிலே அவர்கள் சொந்த பூமியைப் பெறமாட்டார்கள். அவர்கள் இஸ்ரவேல் முழுவதும் பரவி வாழ்வார்கள்.

யூதா

8. “உன்னை உன் சகோதரர்கள் போற்றுவார்கள். நீ உன் பகைவர்களை வெல்வாய். உன் சகோதரர்கள் உனக்கு அடிபணிவார்கள்.

9. யூதா ஒரு சிங்கத்தைப் போன்றவன். என் மகனே, தான் கொன்ற மிருகத்தின் மேல் நிற்கும் ஒரு சிங்கத்தை போன்றவன் நீ. நீ ஓய்வெடுக்கும்போது உன்னை எவரும் தொந்தரவு செய்யமுடியாது.

10. யூதாவின் குடும்பத்தில் வருபவர்கள் அரசர் ஆவார்கள். சமாதான கர்த்தர் வரும்வரை உன்னை விட்டு செங்கோல் நீங்குவதில்லை. ஏராளமான ஜனங்கள் அவனுக்கு அடிபணிந்து சேவை செய்வார்கள்.

11. அவன் தன் கழுதையைத் திராட்சைக் கொடியில் கட்டி வைப்பான். அவன் தன் இளைய கழுதையை சிறந்த திராட்டைக் கொடியில் கட்டி வைப்பான். அவன் சிறந்த திராட்சைரசத்தை ஆடைவெளுக்கப் பயன்படுத்துவான்.

12. அவன் கண்கள் திராட்சைரசத்தினால் சிவப்பாகும். அவன் பற்கள் பாலால் வெளுக்கும்.

செபுலோன்

13. “இவன் கடற்கரையில் வசிப்பான். அவனது துறைமுகம் கப்பல்களுக்கு ஏற்றதாக இருக்கும். அவனது எல்லை சீதோன்வரை இருக்கும்.

இசக்கார்

14. “இசக்கார் ஒரு கழுதையைப்போல கடினமாக உழைப்பான். இரண்டு பொதியின் நடுவே படுத்திருப்பவனைப் போன்றவன்.

15. தன் ஓய்விடத்தை நன்றாக இருக்கும்படி பார்த்துக்கொள்வான். தன் பூமியை செழிப்பாக வைத்துக்கொள்வான். அடிமையைப்போல வேலை செய்ய சம்மதிப்பான்.

தாண்

16. “தாண் இஸ்ரவேல் குடும்பத்தில் ஒருவனாக தன் சொந்த ஜனங்களையே நியாயம்தீர்ப்பான்.

17. இவன் சாலையோரத்தில் அலையும் பாம்பைப் போன்றவன். இவன் பாதையிலேபடுத்திருக்கும் பாம்பைப் போன்று பயங்கரமானவன். இப்பாம்பு ஒரு குதிரையின் காலை கடிக்கிறது, சவாரி செய்தவன் கீழே விழுகிறான்.

18. “கர்த்தாவே நான் உமது இரட்சிப்புக்காகக் காத்திருக்கிறேன்.

காத்

19. “ஒரு கொள்ளைக் கூட்டம் காத்தைத் தாக்கும். ஆனால் அவர்களை அவன் துரத்திவிடுவான்.

ஆசேர்

20. “இவனது நிலம் அதிகமாக விளையும். ஒரு அரசனுக்கு வேண்டிய உணவு பொருட்களைத் தருவான்.

நப்தலி

21. “இவன் சுதந்திரமாக ஓடுகிற மானைப் போன்றவன். அவன் வார்த்தைகள் குழந்தைகளைப் போன்று அழகானவைகள்.”

யோசேப்பு

22. “இவன் வெற்றி பெற்றவன். இவன் பழத்தால் மூடப்பட்ட திராட்சைக்கொடியைப் போன்றவன். நீரூற்றுக்கருகிலும் வேலிக்குள்ளும் இருக்கிற கொடியைப் போன்றவன்.

23. பலர் அவனுக்கு எதிராகப் போரிடுவார்கள். வில் வீரர்களே அவன் பகைவர்.

24. ஆனால் அவன் பலம் வாய்ந்த வில்லாலும் திறமையான கைகளாலும் சண்டையில் வென்றான். அவன் யாக்கோபின் வல்லவரும், மேய்ப்பரும், இஸ்ரவேலின் பாறையும் ஆனவரிடமிருந்தும் உன் பிதாவின் தேவனிடமிருந்தும் வலிமை பெற்றான்.

25. தேவன் உன்னை ஆசீர்வதிக்கிறார். சர்வ வல்லமையுள்ள தேவன் வானத்திலிருந்தும், கீழே ஆழத்திலிருந்தும் உன்னை ஆசீர்வதிக்கட்டும். ஸ்தனங்களுக்கும், கர்ப்பங்களுக்குமுரிய ஆசிகளை அவர் உனக்கு வழங்கட்டும்.

26. எனது பெற்றோர்களுக்கு எவ்வளவோ நன்னமைகள் ஏற்பட்டன எனினும் எனது ஆசீர்வாதங்கள் அவற்றைவிட மேலானது. உனது சகோதரர்கள் உன்னை எதுவுமில்லாமல் விட்டுவிட்டுப் போனார்கள். ஆனால், இப்போது எனது ஆசீர்வாதங்களையெல்லாம் மலையின் உயரம்போல் கூட்டித் தருகிறேன்.

பென்யமீன்

27. “பென்யமீன் ஒரு பசித்த நரி போன்றவன். காலையில் கொன்று தின்பான். மாலையில் மிஞ்சியதைப் பகிர்ந்துகொள்வான்.”

28. இவர்கள் அனைவரும் இஸ்ரவேலின் 12 குடும்பத்தினர். இவ்வாறு யாக்கோபு அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருக்குப் பொருத்தமான ஆசீர்வாதங்களைக் கொடுத்தான்.

29. பின் இஸ்ரவேல் ஒரு ஆணையிட்டான். “நான் மரிக்கும்போது என் ஜனங்களோடு இருக்க விரும்புகிறேன். என் முற்பிதாக்களோடு நான் அடக்கம் செய்யப்பட வேண்டும். அந்தக் கல்லறை ஏத்தியரிடம் வாங்கிய எப்பெரோனில் உள்ளது.

30. அந்தக் குகை மம்ரேக்கு அருகில் மக்பேலா எனும் இடத்தில் வயலில் உள்ளது. இது கானான் நாட்டில் உள்ளது. இதனை ஆபிரகாம் எப்ரோனிடமிருந்து விலைக்கு வாங்கி கல்லறையாக மாற்றிவிட்டார்.

31. ஆபிரகாமும் அவன் மனைவி சாராளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். ஈசாக்கும் அவர் மனைவி ரெபெக்காளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். நான் என் மனைவி லேயாளையும் அதே குகையில் அடக்கம் பண்ணினேன்.

32. அந்தக் குகை இருக்கும் நிலம் ஏத்தின் மகன்களிடமிருந்து வாங்கப்பட்டது” என்றான்.

33. யாக்கோபு பேசி முடித்ததும் படுத்தான். கால்களைக் கட்டிலின்மேல் மடக்கியபடியே மரணமடைந்தான்.

ஆதியாகமம் அதிகாரங்கள்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50

(Visited 17 times, 1 visits today)