யாக்கோபின் இறுதிச் சடங்கு

1. இஸ்ரவேல் மரித்ததும் யோசேப்பு மிகவும் துக்கப்பட்டான். அவன் தன் தந்தையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது முத்தமிட்டான்.

2. பிறகு யோசேப்பு தன் வேலைக்காரர்களுக்கு அவனது தந்தையின் உடலை அடக்கத்திற்கு தயார் செய்யும்படி ஆணையிட்டான். (அவர்கள் அனைவரும் மருத்துவர்கள்.) அடக்கம் செய்வதற்கு ஏற்ற முறையில் அதனைத் தயார்படுத்தினர். எகிப்திய முறையில் அவ்வாறு செய்தனர்.

3. சரியான முறையில் தயார் செய்ய 40 நாட்கள் ஆகும். அந்தபடியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்கள் அவனுக்காக 70 நாட்கள் துக்கம் கொண்டாடினர்.

4. 70 நாட்கள் ஆனதும் துக்க நாட்கள் முடிந்தன. எனவே யோசேப்பு பார்வோன் மன்னனின் அதிகாரிகளோடு பேசினான். “இதனை பார்வோன் மன்னனுக்குச் சொல்லுங்கள்.

5. ‘என் தந்தை மரணத்தை நெருங்கும்போது அவருக்கு நான் ஒரு வாக்குக் கொடுத்தேன். அவரை கானான் நாட்டில் ஓரிடத்தில் அடக்கம் செய்வதாக ஒப்புக்கொண்டேன். அதுவே அவர் விரும்பிய குகை. எனவே, நான் போய் அவரை அடக்கம் செய்ய எனக்கு அனுமதி வேண்டும். பின்னர் நான் உங்களிடம் திரும்பி வருவேன்’” என்றான்.

6. பார்வோனும், “உன் வாக்கைக் காப்பாற்று. போய் உன் தந்தையை அடக்கம் செய்” என்றான்.

7. எனவே யோசேப்பு அடக்கம் செய்யக் கிளம்பினான். பார்வோனின் மூப்பர்களும் (தலைவர்களும்) எகிப்திலுள்ள முதியவர்களும் யோசேப்போடு சென்றார்கள்.

8. யோசேப்பின் குடும்பத்தினரும், அவனது சகோதரர்களின் குடும்பத்ததினரும் தந்தையின் குடும்பத்தினரும் அவனோடு சென்றார்கள். குழந்தைகளும் மிருகங்களும் மட்டுமே கோசேன் பகுதியில் தங்கினார்கள்.

9. அவர்கள் பெருங்கூட்டமாகப் போனார்கள். வீரர்களும் இரதங்களிலும் குதிரைகளிலும் ஏறிப் போனார்கள்.

10. அவர்கள் கோரான் ஆத்தாத் நதியின் கீழ்க்கரையில் உள்ள கோசேன் ஆத்தாதிற்கு வந்தனர். அங்கே இஸ்ரவேலுக்கு இறுதிச் சடங்குகளையெல்லாம் செய்தனர். இது ஏழு நாட்கள் நடந்தது.

11. கானான் நாட்டிலுள்ள ஜனங்களெல்லாம் இந்தச் சடங்கில் கலந்துகொண்டனர். அவர்களோ, “அந்த எகிப்தியர்கள் பெரிய துக்கமான சடங்கைக் கொண்டுள்ளனர்” என்றனர். இப்போது அந்த இடத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்று பெயர் வழங்குகிறது.

12. யாக்கோபின் மகன்கள் தந்தை சொன்னபடியே செய்தனர்.

13. அவர்கள் அவனது உடலை கானானுக்குள் எடுத்துச் சென்று மக்பேலாவில் அடக்கம் செய்தனர். இந்தக் குகை ஆபிரகாம் ஏத்தின் ஜனங்களிடமிருந்து வாங்கிய நிலத்தில் மம்ரேக்கு அருகில் இருந்தது. ஆபிரகாம் இதனைக் கல்லறைக்காகவே வாங்கியிருந்தான்.

14. யோசேப்பு தன் தந்தையை அடக்கம் செய்த பிறகு, அவனோடு அனைவரும் எகிப்துக்குத் திரும்பிப் போனார்கள்.

சகோதரர்கள் யோசேப்புக்குப் பயப்படுதல்

15. யாக்கோபு மரித்தபிறகு யோசேப்பின் சகோதரர்கள் மிகவும் கவலைப்பட்டனர். அவர்கள் பயந்தார்கள். அவர்கள் யோசேப்புக்கு தாங்கள் செய்த தீமையை எண்ணிப் பயந்தனர். “நாம் யோசேப்பிற்குச் செய்த தீமைக்காக அவன் இப்போது நம்மை வெறுக்கலாம். நம் தீமைகளுக்கெல்லாம் அவன் பழி தீர்க்கலாம்” என்று அவர்கள் பேசிக்கொண்டனர்.

16. எனவே அவனது சகோதரர்கள் அவனுக்குக் கீழ்க்கண்ட செய்தியை அனுப்பினர்: “தந்தை மரிப்பதற்கு முன்னால் உனக்கு ஒரு செய்தி சொல்லும்படி சொன்னார்.

17. அவர், ‘யோசேப்புக்கு நீங்கள் முன்பு செய்த தீமையை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்ளுங்கள்’ என்றார். எனவே நாங்கள் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் உனக்குச் செய்த தீமைக்கு எங்களை மன்னித்துவிடு. நாங்கள் தேவனின் அடிமைகள். அவர் உனது தந்தைக்கும் தேவன்” என்றனர். இந்தச் செய்தி யோசேப்பை மிகவும் துக்கப்படுத்தியது. அவன் அழுதான்.

18. அவனது சகோதரர்கள் அவனிடம் சென்று பணிந்து வணங்கினார்கள். “நாங்கள் உன் வேலைக்காரர்கள்” என்றனர்.

19. பிறகு யோசேப்பு, “பயப்படவேண்டாம், நான் தேவன் அல்ல. உங்களைத் தண்டிக்க எனக்கு உரிமையில்லை.

20. எனக்குக் கேடு செய்ய நீங்கள் திட்டம்போட்டீர்கள் என்பது உண்மை. ஆனால் உண்மையில் தேவன் நன்மைக்குத் திட்டமிட்டிருக்கிறார். நான் பலரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது தேவனின் திட்டம். இன்னும் அவரது திட்டம் அதுதான்.

21. எனவே அஞ்ச வேண்டாம். நான் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பொறுப்பேற்றுக்கொள்வேன்” என்றான். இவ்வாறு யோசேப்பு தன் சகோதரர்களுக்கு இனிமையாகப் பதில் சொன்னான். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

22. யோசேப்பு தொடர்ந்து எகிப்தில் தன் தந்தையின் குடும்பத்தோடு வாழ்ந்தான். அவனுக்கு 110 வயதானபோது மரணமடைந்தான்.

23. யோசேப்பு உயிரோடு இருக்கும்போதே எப்பிராயீமுக்குப் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்தனர். மனாசேக்கு மாகீர் என்ற மகன் இருந்தான். மாகீரின் பிள்ளைகளையும் யோசேப்பு பார்த்தான்.

யோசேப்பின் மரணம்

24. மரணம் நெருங்கியதும் யோசேப்பு தன் சகோதரர்களிடம், “எனது மரண நேரம் நெருங்கிவிட்டது. தேவன் உங்களை கவனித்துக்கொள்வார் என்பதை நான் அறிவேன். உங்களை இந்த நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்வார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு தேவன் கொடுப்பதாகச் சொன்ன நாடுகளை உங்களுக்குக் கொடுப்பார்” என்றான்.

25. பின் யோசேப்பு இஸ்ரவேல் ஜனங்களிடம் ஒரு வாக்குறுதிச் செய்தான். அவன், “நான் மரித்த பிறகு என் எலும்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தேவனால் வழி நடத்தப்பட்டு புதிய பூமிக்குப் போகும்போது அதையும் கொண்டு செல்லுங்கள்” இதைப்பற்றி வாக்குறுதி செய்யுங்கள் என்றான்.

26. யோசேப்பு எகிப்திலேயே மரணமடைந்தான். அப்போது அவனுக்கு 110 வயது. மருத்துவர்கள் அவனது உடலை அடக்கம் செய்வதற்காகத் தயார் செய்தனர். அதனை ஒரு பெட்டியில் வைத்தார்கள்.

ஆதியாகமம் அதிகாரங்கள்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50

(Visited 42 times, 1 visits today)