ஆதியில் கொண்டிருந்த அன்பு

ரேச்சலினால் நம்பவே முடியவில்லை, திரும்ப திரும்ப தன் கையில் ஜொலிக்கும் அந்த விலையேறப்பெற்ற கல்லை, திரும்ப திரும்ப பார்த்து, தன் தந்தையிடம், ‘அப்பா இதை எனக்கா கொடுக்கிறீர்கள்’ என்று பலமுறை கேட்டாள். தன் தந்தை தனக்கு ஒரு வைர மோதிரத்தை பரிசாக கொடுத்ததை அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

‘ஆம் மகளே, இதை உனக்குத்தான் தந்தேன். அதை சந்தோஷமாய் வாங்கி அணிந்து கொண்டு, உன் நினைவில் எப்போதும் என் அன்பை நினைத்து கொள்’ என்று தந்தை அவளிடம் அன்புடன் கூறினார். ரேச்சல் தன் தந்தையின் கழுத்தை கட்டி கொண்டு, ‘நான் உங்களை நேசிக்கிறேன் டாடி’ என்று முத்தமிட்டாள். தன் தகப்பன் எவ்வளவு நல்லவர், எத்தனையாய் தன்னை நேசிக்கிறார் என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தாள்.

தகப்பன் வைர மோதிரத்தை கொடுத்த சில மாதங்கள், அவள் அதை தன் உயிரை போல நேசித்தாள். அதை எடுத்து அநேக நேரம் உற்று பார்த்து கொண்டேயிருந்தாள். பின் தனக்கு அதை கொடுத்த தகப்பனின் அன்பை தனக்கு தெரிந்த அனைவருக்கும் சொல்ல ஆரம்பித்தாள்.

அவளது செய்கையில் தகப்பனுக்கு தான் எப்படி நன்றி கடன் பட்டிருக்கிறாள் என்பதை வெளி காட்ட ஆரம்பித்தாள். மற்றவர்களை நேசித்து, அதன் மூலம் தன் தந்தையின் அன்பு இப்படித்தான் என்று மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முயன்றாள். எப்பொழுதும் அவள் இருதயம் முழுவதும் தகப்பபனின் அன்பால் நிறைந்திருந்தபடியால், அவருடைய புகழை பாடி, களிகூர்ந்தாள்.

ஆனால் நாளாக, நாளாக அவளிடம் இருந்து வைர மோதிரத்தின் மேல் இருந்த மோகம் குறைய ஆரம்பித்தது. வைரத்தின் மதிப்பு கொஞ்சமும் குறையவில்லை என்றாலும், அவளுக்கு அதன் மீதிருந்த நாட்டம் குறைய ஆரம்பித்தது.

அவள் இன்னும் மற்றவர்களிடம் அன்பு செலுத்தி, தன் தகப்பனின் அன்பை கூறினாலும், முதலில் இருந்ததை போன்று முழு இருதயத்தோட செய்யாமல், கடமைக்காக செய்ய ஆரம்பித்தாள். ஒரு நாள், அவளுடைய தோழி, அவளிடம் ‘உன் தகப்பன் கொடுத்த வைர மோதிரத்தை பற்றி எனக்கு சொல்வாயா’ என்று கேட்டபோது, அவளால் முன்பு இருந்ததை போல உற்சாகத்தோடு சொல்ல முடியவில்லை.

அப்போது தான் உணர ஆரம்பித்தாள், தன் தகப்பன் மேல் தனக்கு முன்பிருந்த அன்பை போல இப்போது இல்லை என்பதை உணர தொடங்கியபோது, தன் தகப்பனின் அறைக்கு சென்று கதவை தட்டினாள், தகப்பனும் அறிந்திருந்தார், அவளுக்கு அந்த மோதிரத்தின் மேல் முன்பிருந்த உற்சாகமும் நேசமும் இல்லை என்று. அவளை அழைத்து, ‘ வா நாம் திரும்ப அந்த மோதிரத்தை சேர்ந்து பார்ப்போம்’ என்றழைத்து, இருவரும் சேர்ந்து, அதை பார்த்தபோது, அவளுடைய உள்ளத்தில் அன்பு பொங்க ஆரம்பித்தது.

கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. எத்தனை அருமையான பொக்கிஷத்தை என் தகப்பன் எனக்கு கொடுத்திருக்கிறார், நான் அதை மறந்து ஜீவித்து விட்டேனே என்று நினைத்த போது அவள் மனம் வருந்த ஆரம்பித்தது. தன் தகப்பனின் கரத்தை பிடித்து, ‘அப்பா, நான் இந்த அன்பை நான் என்றும் மறக்காதிருக்க உதவி செய்யுங்கள்’ என்று அவரை வேண்டி கொண்டாள்.

நாமும் அந்த ரேச்சலை போல நமக்கு தேவன் தந்த அந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பை பெற்று கொண்ட நாட்களில் நாம் கொண்டிருந்த சந்தோஷமும், அதை குறித்து அநேகரிடம் பகிர்ந்த கொண்ட காரியங்களும் நம்மால் மறக்க முடியாது.

கர்த்தரை மிகவும் அதிகமாய் நேசித்தோம். ஆனால், காலங்கள் கடந்து சென்றபோது, அன்று இருந்த ஆனந்தம் இப்போது ஒரு கடமையாக மாறி இருப்பதை நம்மால் உணர முடிகிறதல்லவா? இரட்சிப்பின் சந்தோஷமும் ஆனந்தமும் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே இருந்தாலும் நம்முடைய உணர்வுகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதல்லவா?

நம்முடைய உணர்வுகளில் மாற்றம் ஏற்பட்டாலும், தேவனுடைய அன்பு மாறாததாக, அவருடைய இரட்சிப்பு மாறாததாக, அவர் நமக்கு கொடுத்த கிருபை வரங்கள் என்றும் மாறாததாகவே இருக்கிறது. நாம் மீண்டும் ஆதியில் கொண்டிருந்த அன்பிற்கு திரும்ப வருவோமா?

‘ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு’ (வெளிப்படுத்தின விசேஷம் 2:4) என்று இயேசுகிறிஸ்து நம்மிடத்தில் குறையை காண்கிறவராக இல்லாதபடி, அவரிடத்தில் நாம் ஆதியில் கொண்டிருந்த அன்பில் மீண்டும் நிலைத்து, அவர் நமக்கு கொடுத்த கிருபை வரங்களை பிரயோஜனப்படுத்தி அவருக்கு மகிமையாக ஜீவிப்போமாக.

அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.
(மத்தேயு 13:44)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 4 times, 1 visits today)

Leave a Reply

You do not have to leave an email address in order to reply.