உபத்திரவத்திலும் உன்னதரின் கிருபை

ஒரு சிறுவன் தன் தோட்டத்தில் பட்டு பூச்சி புழுவை வளர்த்து வந்தான். அது தன்னை சுற்றிலும் பட்டு நூலால் கடினமான கூட்டை கட்டி உள்ளே இருந்தது. சில நாட்களுக்கு பின் அது பட்டு பூச்சியாக மாறி வெளியே வர முயற்சி எடுத்தது. கூட்டிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதாக இல்லை. பல மணி நேரங்கள் பொறுமையோடு போராடி தான் வெளியே வர வேண்டும்.

ஆனால் அந்த சிறுவனுக்கோ பொறுமையில்லை. பட்டாம் பூச்சி படும் கஷ்டத்தையும் அவனால் தாங்க முடியவில்லை. ஆகவே ஒரு கூரிய பிளேடினால் மெதுவாக கூட்டை வெட்டி, பட்டு பூச்சியை சுலபமாக வெளியே எடுத்து விட்டான். ஆனால் அந்த பட்டு பூச்சியினால பற்க்க முடியவில்லை. அதனுடைய சரீரம் பெரிதாக இருந்தபடியால் கீழே விழுந்து விட்டது. முடிவில் அதை எறும்புகள் இழுத்து சென்றன.

அச்சிறுவனின் தகப்பன் சொன்னார், ‘மகனே அந்த பூச்சி கூட்டிலிருந்து வெளிவர பொறுமையோடு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அதன் தசை நார்களையும், நரம்புகளையும் பெலப்படுத்தும். பல மணி நேரங்கள் அது வெளிவர பாடுபடுவதால் அதன் உடல் வற்றி எடை குறைந்து பறந்து செல்ல வசதியாக இருக்கும். அது சகல முயற்சியும் செய்து தானாகவே வெளியே வந்திருந்தால் பரிபூரண வளர்ச்சியடைந்திருக்குமே! நீயோ அதன் வாழ்க்கையையே கெடுத்து விட்டாயே’ என்றார்.

இதுபோலத்தான், ஒரு நோயாளியின் சரீரத்தில் எந்த ஒரு வருத்தத்தையும் உருவாக்ககூடாது என ஒரு மருத்துவர் நினைத்தால் அந்த நோயாளி ஒரு போதும் சுகமடைய முடியாது. ஊசிகளையும், மருந்துகளையும் எடுத்து கொள்வதும், உரிய அறுவை சிகிச்சைகளை செய்வதும் நோயாளியை வருத்தமடையவே செய்யும்.

இருப்பினும் சுகமடைய வேண்டுமானால் அவற்றை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். அது போல நாம் என் வாழ்வில் ஒரு சிறு கஷ்டமும் வரக்கூடாது என்று எண்ணினால், நாம் ஒரு போதும் ஆவிக்குரிய வாழ்வில் பூரணமடையவே முடியாது. தேவனுடைய திட்டமும் நம் வாழ்வில் நிறைவேறவே முடியாது. பிறருக்கு பயனுள்ள ஒரு வாழ்க்கையும் நாம் வாழ முடியாது. ஆகவே நாம் பாடுகளை பொறுமையாய் சகித்தும், துன்பத்தில் துவண்டு விடாமலும், பொறுமையாய் தேவனிடமிருந்து ஆவிக்குரிய பாடங்களை கற்று கொள்ள பிரயாசப்பட வேண்டும்.

வேதத்திலே, சாலமோன் ராஜா சகல சம்பூரணத்திலும் திளைத்து வாழ்ந்தார். எந்த பாடுகளுமற்ற பஞ்சு மெத்தை வாழ்வே வாழ்ந்தார். ஆனால் இன்று நாம் பின்பற்றக்கூடிய எந்த குணநலன்களும் அவரிடம் காணப்படவில்லை. ஆனால் தாவீதின் வாழ்விலே தடுக்கி விழுந்தால் துன்பம், எப்போதும் தன்னை விரட்டும் ஒரு கும்பல், அந்த துன்ப பெருக்கிலே தேவனை உறுதியாய் சார்ந்து கொண்டார். இயேசுவை ‘தாவீதின் குமாரன்’ என அழைக்கும் பாக்கியத்தை பெற்றார்.

பிரியமானவர்களே, ‘தேவனே பாடுகளையும், துன்பங்களையும் தாரும்’ என நாம் ஜெபிக்க் வேண்டியதல்லை, ஆனால் தேவன் பாடுகளின் வழியாய் நம்மை நடத்தும்போது பொறுமையாய் கற்று கொள்வோம். அச்சூழ்நிலைகளே நம்மில் பொறுமை, சாந்தம் நற்குணத்தை உருவாக்கும். கிறிஸ்துவுக்குள் நம்மை பூரணப்பட்டவர்களாக நிறுத்தும்.

இயேசுகிறிஸ்து பாடுகளே இல்லாத ஒரு வாழ்க்கையை நமக்கு வாக்களிக்கவில்லை, அவர் சொன்னார், ‘உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்’ என்றார் (யோவான் 16:33 பின்பாகம்).

அவர் உலகத்தை ஜெயித்தபடியால், அவருடைய பிள்ளைகளாகிய நாமும் உலகத்தை ஜெயிக்கிறவர்களாக, உபத்திரவத்தின் ஊடே வெற்றி கொள்கிறவர்களாக மாறமுடியும். உலகத்தின் மக்கள் துன்பம் வரும் நேரத்தில் சோர்ந்து போவார்கள், ஆனால் நாமோ, துன்பங்களையே ஏணிப்படிகளாக வைத்து, ஜெயத்தின் மேல் ஜெயம் பெற்று முன்னேறுவோம். ஏனெனில் நமக்கு முன்பாக நம் இயேசு அந்த பாதையில் நடந்து சென்று நமக்கு வழியை காட்டி விட்டபடியால், நாம் தொடர்ந்து வெற்றி நடை போடுவோம். ஆமென் அல்லேலூயா!

  ..என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். .அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக வேலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். – (1 பேதுரு 1:6-7)

 

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 7 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *