கொலை செய்யப்பட்டவனைக் குறித்த காரியம்

1. “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற தேசத்தில் உள்ள வயலில் ஒரு மனிதன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் கண்டறிந்தால், அவனைக் கொன்றது யார் என்று யாருக்கும் தெரிய வில்லை என்றால்,

2. உங்களது தலைவர்களும், நீதிபதிகளும் அந்த இடத்திற்கு வந்து கொல்லப்பட்ட நபரைச் சுற்றிலும் உள்ள ஊர்களின் தொலைவை அளந்து பார்க்க வேண்டும்.

3. மரித்துக்கிடப்பவனுக்கு அருகிலுள்ள ஊர் எது என்பதை நீங்கள் அறிந்தவுடன், அந்த ஊரின் தலைவர்கள், அவர்களது மந்தையிலிருந்து ஒரு மாட்டினைக் கொண்டுவரச் செய்ய வேண்டும். அந்த மாடானது கன்று இல்லாத கிடாரியாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, எவ்விதப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படாத மாடாக அது இருக்க வேண்டும்.

4. அந்த ஊரின் தலைவர்கள் அந்த மாட்டை அந்த ஊரின் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுவர வேண்டும். அந்தப் பள்ளத்தாக்கானது உழுதிட முடியாமலும், எவ்விதப் பயிரையும் பயிர் செய்ய முடியாத நிலமாகவும் இருக்க வேண்டும். பின் அந்த தலைவர்கள் அந்த மாட்டின் தலையைப் பள்ளத்தாக்கில் விழுமாறு வெட்டிப் போடவேண்டும்.

5. லேவியின் சந்ததியினரான ஆசாரியர்கள் அத்தருணத்தில் அங்குச் செல்லவேண்டும். (உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு சேவைச் செய்வதற்கும், அவருடைய நாமத்தால் ஜனங்களை ஆசீர்வதிக்கவும் இந்த ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவர்களும் அத்தருணத்தில் வந்திருக்க வேண்டும். ஏனெனில், அவர்களே யாருடைய மனதும் புண்படாதவாறு சரியாக விசாரித்து அதற்கேற்ற முடிவை சகல வழக்கிற்கும் ஏற்ற தீர்ப்பாக அளிப்பார்கள்.)

6. கொலை செய்யப்பட்ட மனிதனுக்கு அருகிலுள்ள ஊரின் தலைவர்கள் எல்லோரும், பள்ளத்தாக்கில் கழுத்து வெட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டக் கிடாரின்மேல் தங்கள் கைகளை கழுவிட வேண்டும்.

7. பின்பு, அந்தத் தலைவர்கள் சொல்ல வேண்டியது: ‘நாங்கள் இந்த மனிதனைக் கொல்லவில்லை. இது நடந்ததையும் நாங்கள் பார்க்கவில்லை.

8. கர்த்தாவே, இஸ்ரவேலரை காப்பாற்றும், நாங்கள் உமது ஜனங்கள். இப்போதும் எங்கள்மேல் குற்றம் இல்லாத இரத்தப் பழியைச் சுமத்தாமல் காப்பீராக. ஏதுமறியாத மனிதனைக் கொல்லுகின்ற குற்றத்தை சுமத்தாது காப்பீராக,’ இவ்வாறு அவர்கள் குற்றமற்ற ஒருவனைக் கொல்லும் குற்றத்தைச் செய்தவர்களாகமாட்டார்கள்.

9. இவ்வாறாக, நீங்கள் சரியானவற்றை செய்வதன் மூலம் உங்களுக்குள்ளிருந்து அந்த குற்றத்தை விலக்குவீர்கள்.

போரில் கைதான பெண்கள்

10. “நீங்கள் உங்கள் எதிரிகளுக்கு எதிராகச் சண்டையிடும்போது, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடம் அவர்களைத் தோல்வியடையச் செய்யும்போது, நீங்கள் அந்தப் பகைவர்களைச் சிறைப்பிடித்து வந்திருக்கலாம்.

11. அந்த கைதிகளில் உள்ள ஒரு அழகியப் பெண்ணைக் கண்டு, அவளை உங்களில் ஒருவன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால்,

12. அவளை அவன் வீட்டிற்கு அழைத்து வரவேண்டும். அவள் தன் தலையை மொட்டையடித்து தன் நகங்களை வெட்டிக்கொள்ள வேண்டும்.

13. அவள் அணிந்திருந்த போர்க் கைதிக்குரிய ஆடைகளை நீக்கிவிடவேண்டும். அவள் தான் இழந்த தந்தை, தாயை எண்ணி உங்கள் வீட்டில் ஒரு மாதம் முழுவதும் துக்கம் கொண்டாட வேண்டும். அதற்குப் பின்பு அவன் அவளிடம் சென்று அவளுக்குக் கணவனாக வாழலாம். அவள் அவனுக்கு மனைவியாக இருப்பாள்.

14. அவளோடு வாழ்வது அவனுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றால், அவன் அவளை விவாகரத்து செய்து, அவள் இஷ்டம்போல் அவளை வாழ அனுமதித்து விடவேண்டும். நீங்கள் அவளை விற்க முடியாது. நீங்கள் அவளை அடிமையாக நடத்தவும் கூடாது. ஏனென்றால் உங்களில் ஒருவன் அவளோடு ஏற்கெனவே தாம்பத்திய உறவு கொண்டாயிற்று.

மூத்த மகன்

15. “ஒருவன் இரண்டு மனைவிகளைப் பெற்றிருந்து, அவன் ஒருத்தி மேல் மட்டும் மற்றவளைவிட அன்பு செலுத்திட, இரண்டு மனைவிகளும் அவனது குழந்தைகளைப் பெற்றிருக்க, அதில் முதல் குழந்தை, இவன் அதிகம் நேசிக்காத மனைவியின் குழந்தையாக இருக்கலாம்.

16. தந்தையானவன் தனது சொத்தினை தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில் தான் நேசிக்காமல் வெறுக்கிற மனைவியிடத்தில் பிறந்த முதல் பிள்ளைக்கு சேஷ்ட புத்திர சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டுமே தவிர தான் விரும்பும் மனைவியிடத்தில் பிறந்த குழந்தைக்குக் கொடுக்ககூடாது.

17. அவன் தான் நேசிக்காத மனைவியிடம் பிறந்த முதல் மகனை தனது குடும்பத்தின் மூத்த பிள்ளையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அவன் தனது மூத்த மகனுக்கு தன்னுடைய எல்லாவற்றிலும் இரண்டு பங்கினைக் கொடுக்க வேண்டும். ஏனென்றால், அந்த குழந்தையே மூத்த பிள்ளைக்கான உரிமையைப் பெறுகிறது.

கீழ்ப்படிய மறுக்கும் பிள்ளைகள்

18. “தன் தந்தையின் சொல்லையும், தாயின் சொல்லையும் கேட்காமலும், அவர்களுக்கு அடங்காமலும் கீழ்ப்படிய மறுக்கின்ற தண்டனைக்குரிய மகன் ஒருவனுக்கு இருந்தால் அவனை தண்டித்தும் இன்னும் அவர்கள் சொன்னபடிக் கேட்க மறுப்பவனாய் இருந்தால்,

19. அவனது தந்தையும், தாயும் அவனை அழைத்துக்கொண்டு, அந்த ஊர் தலைவர்களிடம் வந்து, ஊர் கூடுமிடத்தில் வந்து நிற்கவேண்டும்.

20. அவர்கள் நகரத் தலைவர்களிடம்: ‘எங்களது மகன் எங்களுக்குக் கீழ்ப்படிய மறுத்து, எங்களுக்கு அடங்காதவனாக இருக்கிறான். நாங்கள் அவனிடம் செய்யச் சொல்வது எதையும் அவன் செய்வதில்லை. அவன் அளவுக்கு அதிகமாகக் குடிக்கவும், சாப்பிடவும் செய்கிறான்’ என்று சொல்ல வேண்டும்.

21. பின் ஊரிலுள்ளவர்கள் அந்த மகனை மரிக்கும்வரை கற்களால் அடிப்பார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் மத்தியில் உள்ள இந்த தீமையை விலக்கிவிடுங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அதைக் கேட்டுப் பயப்படுவார்கள்.

கொலைக் குற்றவாளிகள் கொல்லப்படுவதும், தூக்கில் இடப்படுவதும்

22. “ஒருவன் மரணதண்டனை பெறத்தக்க பாவம் செய்த குற்றவாளியாக இருக்கலாம், ஜனங்கள் அவனைக் கொன்ற பிறகு அவனது உடலை மரத்திலே தொங்கவிட வேண்டும்.

23. இரவு முழுவதும் அவனது உடலை மரத்திலேயே தொங்கவிடக் கூடாது. அந்த நாளிலேயே அவனை நீங்கள் அடக்கம் செய்திட வேண்டும். ஏனென்றால், மரத்தின்மேல் தூக்கிலிடப்பட்ட அவன் தேவனால் சபிக்கப்பட்டவன். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தை நாசபடுத்தக் கூடாது.

உபாகமம் அதிகாரங்கள்:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34

(Visited 1 times, 1 visits today)