பிற சட்டங்கள்
1. “உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் ஆடாவது மாடாவது வழிதப்பிச் செல்வதைக் கண்டால், நீங்கள் அதைக் காணாதவர்போல் இருந்துவிடாதீர்கள். அதை உரியவர்களிடம் திருப்பிக்கொண்டு போய் ஒப்படைக்க வேண்டும்.
2. ஒருவேளை, அதன் சொந்தக்காரர் உங்களுக்கு அருகில் குடியில்லாதவராகவோ, அல்லது உங்களுக்கு அறிமுகமில்லாதவராகவோ இருந்தால் நீங்கள் அதை உங்கள் வீட்டுக்குக் கொண்டுசென்று, உரியவர் தேடிவரும்வரை உங்களிடமே வைத்திருந்து அவரிடம் திரும்பக் கொடுக்க வேண்டும்.
3. அது போன்றே அவர்களது கழுதைனயக் கண்டாலும், அவர்களது ஆடைகளையோ மற்றும் எந்தப் பொருளானாலும் சரி, நீங்கள் அவற்றைக் கண்டுபிடித்தால், அவற்றைக் காணாததுபோல் இராமல் உரியவர்களுக்கு உதவவேண்டும்.
4. “உங்களின் பக்கத்து வீட்டுக்காரரின் கழுதையாவது, மாடாவது சாலையில் விழுந்து கிடப்பதை நீங்கள் பார்த்தால், அதைப் பார்க்காதது போல் சென்றுவிடாமல், நீங்கள் அவருடன் சேர்ந்து தூக்கிவிட உதவிசெய்ய வேண்டும்.
5. “ஒரு பெண், ஆணின் உடைகளை அணியக் கூடாது. அதுபோல் ஒரு ஆண் பெண்ணின் ஆடைகளை அணியக்கூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் இதை மிகவும் வெறுக்கின்றார்.
6. “பாதைவழியே நீங்கள் நடந்து செல்லும்போது மரத்தில் அல்லது தரையில் ஏதேனும் ஒரு பறவைக் கூட்டைக் கண்டால், அதில் தாய்ப்பறவையானது தன் குஞ்சுகளையாவது, முட்டைகளையாவது அடைகாப்பதைக் கண்டால், நீங்கள் அந்தத் தாய்ப் பறவையை அதன் குஞ்சுகளைவிட்டு பிரிக்கக் கூடாது.
7. நீங்கள் உங்களுக்காக குஞ்சுகளை வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தாய்ப் பறவையைப் போக விட்டுவிட வேண்டும். இந்த நியாயங்களுக்குக் கீழ்ப்படிந்தால் நீங்கள் நன்றாயிருப்பதுடன் நீண்ட காலமும் வாழலாம்.
8. “நீங்கள் புது வீடு கட்டும்போது உங்களின் மாடித்தளத்தைச் சுற்றிலும் சிறிய சுவர் எழுப்ப வேண்டும். அப்படிச் செய்தால் அந்த மாடியிலிருந்து விழுந்து மரித்தவனின் கொலைப்பழியை நீங்கள் சுமக்க வேண்டியதில்லை.
நீங்கள் ஒன்று சேர்க்கக் கூடாதவை
9. “நீங்கள் உங்கள் திராட்சைத் தோட்டத்திலேயே பிற தானியங்களையும் விதைக்கக் கூடாது. ஏனென்றால், நீங்கள் விதைத்த பயிர்களையும், திராட்சைத் தோட்டத்தின் பலனையும் பரிசுத்தமற்றதாக ஆக்கிவிடுவீர்கள். அதனால் அவை பயனற்றவையாகிவிடும். அவற்றில் எதனையும் நீங்கள் பயன்படுத்த முடியாது.
10. “நீங்கள் மாட்டையும் கழுதையையும் பிணைந்து உழக்கூடாது.
11. “நீங்கள், ஆட்டு ரோமத்தாலும் பஞ்சு நூலாலும் கலந்து நெய்த ஆடையை அணியக்கூடாது.
12. “நீங்கள் அணிந்து கொள்கின்ற உங்களது மேல் சட்டையின் நான்கு ஓரங்களிலும், நூல்குஞ்சங்களாலான தொங்கல்களைச் செய்திடவேண்டும்.
திருமணச் சட்டங்கள்
13. “ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து அவளுடன் பாலின உறவு கொண்ட பின்பு, அவளை விரும்பவில்லை என்று முடிவுசெய்து,
14. அவன் அவள் மீது பொய்யாக, ‘நான் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து, அவளோடு பாலின உறவுகள் வைத்துக்கொள்ளும்போது அவள் கற்பில்லாதவள் என்பதைக் கண்டேன்’ என்று கூறி அதன் மூலம், ஜனங்கள் மத்தியில் அவள் மீது கெட்ட எண்ணங்களை உருவாக்கினால்,
15. அந்தப் பெண்ணின் தாயும் தந்தையும் தன் மகள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரத்துடன் ஊர் கூடும் இடத்திற்கு வந்து, அவ்வூரின் தலைவர்கள் முன்பு நிற்கவேண்டும்.
16. பெண்ணின் தந்தை ஊரின் தலைவர்களிடம், ‘என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகத் திருமணம் செய்து கொடுத்தேன், ஆனால் இப்போது இவன் அவளை வெறுத்து,
17. “நான் உன் மகளிடம் கற்புத் தன்மை இருப்பதைக் காணவில்லை” என்று என் மகளுக்கு எதிரான பொய்களைக் கூறிவிட்டான். ஆனால், இதோ என் மகள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரம்’ என்று கூறி தன் மகளின் முதலிரவுப் படுக்கையின் மேல் விரித்த விரிப்புத் துணியைக் காட்டுவார்.
18. பின் அவ்வூர்த் தலைவர்கள் அவனைப் பிடித்துத் தண்டிப்பார்கள்.
19. அவனிடமிருந்து அபராதமாக 100 வெள்ளிக் காசுகளை வாங்கி பெண்ணின் தந்தையிடம் கொடுக்கவேண்டும். (ஏனெனில், அவள் கணவன் இஸ்ரவேல் பெண்ணுக்கு அவமானத்தைக் கொண்டுவந்தான்.) பின் அந்தப் பெண் அவனுக்கு தொடர்ந்து மனைவியாக இருக்க வேண்டும். அவன் தன் வாழ்நாள் முழுவதும் அவளை விவாகரத்து செய்யக் கூடாது.
20. “ஆனால், அவன் கூறியபடி அவனது மனைவி கற்புத்தன்மை இல்லாதவள் என்பது உண்மையாக இருந்தால், அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அவள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரத்தை நிரூபிக்கவில்லையென்றால்,
21. ஊர்த் தலைவர்கள் அந்தப் பெண்ணை அவளது தந்தை வீட்டு வாசலுக்கு முன்பாகக் கொண்டு வந்து, ஊர் ஜனங்கள் அவளைக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும். ஏனென்றால், இஸ்ரவேலில் அந்தப் பெண் அவமானமான செயல் ஒன்றைச் செய்துள்ளாள். தன் தந்தை வீட்டில் ஒரு வேசியைப் போன்ற செயலைச் செய்த பாவியாக இருந்துள்ளாள். உங்கள் மத்தியில் இந்தத் தீமையை இப்படியே விலக்கிட வேண்டும்.
பாலுறவுப் பாவங்கள்
22. “ஒருவன் மற்றவனது மனைவியுடன் தகாத பாலுறவுகொள்வது கண்டு பிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட இருவரும் தகாத உறவு கொண்ட அந்தப் பெண்ணும் ஆணும் ஆகிய இருவரும் மரிக்கவேண்டும். நீங்கள் இந்தத் தீயச் செயலை இஸ்ரவேலிலிருந்து இவ்வாறே விலக்கிவிட வேண்டும்.
23. “ஒருவனுக்குத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ள கற்புள்ள பெண் ஒருத்தியை வேறொருவன் சந்தித்து அவளுடன் பாலுறவு தொடர்பு வைத்துக்கொள்வது நகரில் நடந்ததென்றால்,
24. பின் நீங்கள் அவ்விருவரையும் நகர எல்லையின் பொது இடத்திற்குக் கொண்டுவந்து அவர்களைக் கற்களால் எறிந்து கொல்ல வேண்டும். நீங்கள் அவனைக் கொல்வது எதற்கென்றால், அவன் அடுத்தவனது மனைவியைக் கற்பழித்தப் பாவத்திற்காக. அவளைக் கொல்வது எதற்கென்றால், அவள் இந்நகரத்தில் அவ்வாறு நடக்கும்போது, அதிலிருந்து தப்பிக்க யாரையும் கூக்குரலிட்டு அழைக்காமல் இருந்ததால். உங்கள் மத்தியிலிருந்து இப்படிப்பட்ட தீமையை இவ்வாறு விலக்கிட வேண்டும்.
25. “ஆனால், ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெளி இடங்களில் கண்ட ஒருவன் அவளைப் பலவந்தமாகப் பிடித்துக் கற்பழித்ததாக அறிந்தால், அவனை மட்டும் கொன்றுவிட வேண்டும்.
26. அந்தப் பெண்ணை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவள், மரிக்கும் தண்டனையைப் பெறும் அளவிற்கு ஏதும் செய்துவிடவில்லை. இது ஒரு நபர் தன் பக்கத்து வீட்டுக்காரனை தீடீரெனத் தாக்கி அவனைக் கொல்வதற்குச் சமமானது.
27. வெளி இடத்திலே அவன் அவளைக் கண்டதும் அவளைத் தன் பலத்தினால் பிடிக்க, அவள் தனக்கு உதவிட கூக்குரலிட்டபோதும் அவளைக் காப்பாற்ற அங்கு யாரும் இல்லாததால் அவளைத் தண்டிக்க வேண்டாம்.
28. “ஒருவன், இன்னும் திருமணம் நிச்சயிக்கப்படாத ஒரு கன்னிப் பெண்ணை பலவந்தமாகப் பிடித்து கற்பழிப்புச் செய்ததை மற்ற ஜனங்கள் பார்த்துவிட்டால்,
29. அவன் அவளது தந்தைக்கு 50 வெள்ளிக் காசுகளை கொடுக்கவேண்டும். அவன் அவளைக் கற்பழித்த பாவத்தினால், அவளே அவனது மனைவியாவாள். அவன் வாழ்நாள் முழுவதிலும் அவளை விவாகரத்து செய்திட முடியாது.
30. “எவனும் தன் தந்தையின் மனைவியுடன் பாலின உறவு வைத்துக்கொள்வதால், அவரது மானத்தை வெளிப்படுத்தக்கூடாது.”
உபாகமம் அதிகாரங்கள்:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34