சட்டத்திற்குக் கீழ்ப்படிபவர்களுக்கான ஆசீர்வாதங்கள்
1. “இப்போதும், நான் இன்று உங்களுக்குச் சொன்ன உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையெல்லாம் நீங்கள் கவனமாகக் கடைப்பிடிப்பீர்களேயானால், உங்கள் தேவனாகிய கர்த்தர் பூமியில் உள்ள எல்லா ஜனங்களையும் விட உங்களை உயர்த்தி வைப்பார்.
2. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிவீர்களேயானால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு வரும்:
3. “நகரத்திலும் வயலிலும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
4. கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உங்களுக்குப் பல குழந்தைகளைக் கொடுப்பார். அவர் உங்கள் நிலத்தை ஆசீர்வதிப்பார். அவர் உங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுப்பார். அவர் உங்கள் மிருகங்களை ஆசீர்வதிப்பார். அவற்றுக்கு நிறைய குட்டிகளைப் பெருகச்செய்வார். அவர் உங்களது அனைத்து கன்றுகளையும் மற்றும் ஆட்டுக் குட்டிகளையும் ஆசீர்வதிப்பார்.
5. கர்த்தர் உங்களது கூடைகளையும், பாத்திரங்களையும் ஆசீர்வதித்து அவற்றில் உணவை நிரப்புவார்.
6. கர்த்தர் உங்களை எல்லா நேரங்களிலும் நீங்கள் செய்கிற அனைத்திலும் ஆசீர்வதிப்பார்.
7. “உங்களுக்கு எதிராகச் சண்டைச் செய்ய வருகிற உங்கள் பகைவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் பகைவர்கள் உங்களுக்கு எதிராக ஒரு வழியாக வருவார்கள், ஆனால் அவர்கள் வேறுபட்ட ஏழு வழிகளில் ஓடுவார்கள்.
8. “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் களஞ்சியங்களை நிரப்புவார். நீங்கள் செய்கிற அனைத்தையும் அவர் ஆசீர்வதிப்பார். உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர் உங்களுக்குக் கொடுத்த நாட்டை ஆசீர்வதிப்பார்.
9. கர்த்தர் உங்களைத் தமக்கென்று சிறந்த பரிசுத்த ஜனங்களாக, தாம் வாக்குறுதி அளித்தபடி ஆக்குவார். நீங்கள் உங்களது தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் கர்த்தர் இதனைச் செய்வார்.
10. பிறகு எல்லா நாட்டினரும் கர்த்தருடைய பெயரால் நீங்கள் அழைக்கப்படுவதைக் கேட்பார்கள். அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்.
11. “கர்த்தர் உங்களுக்கு அநேக நன்மைகளைச் செய்வார். அவர் உங்களுக்குப் பல பிள்ளைகளைத் தருவார். உங்களது பசுக்களுக்குப் பல கன்றுகளை அவர் தருவார். உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நிலத்தில் அவர் உங்களுக்கு நல்ல விளைச்சலைத் தருவார்.
12. கர்த்தர், தமது வளமான ஆசீர்வாதங்களை வைத்துள்ள சேமிப்பு அறையினைத் திறப்பார். உங்கள் நிலத்திற்குத் தேவையான மழையைச் சரியான காலத்தில் அனுப்புவார். நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார். நீங்கள் பல நாடுகளுக்குக் கடன்கொடுக்கிற அளவிற்குப் பணம் பெறுவீர்கள். அவர்களிடமிருந்து எதையும் கடனாகப் பெறுகிற தேவை உங்களுக்கு நேரிடாது.
13. கர்த்தர் உங்களை வாலாக இல்லாமல் தலையாக ஆக்குவார். நீங்கள் கீழாக இல்லாமல் மேலாவீர்கள். இன்று நான் சொல்கிறபடி உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளைக் கேட்டால், இது நிகழும். நீங்கள் கவனமாக இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
14. நான் இன்று உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளிலிருந்து நீங்கள் விலகிப் போகாமல் இருக்க வேண்டும். நீங்கள் வலது புறமாகவோ, இடது புறமாகவோ திரும்பவேண்டாம். நீங்கள் மற்ற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றி அவற்றுக்கு சேவை செய்யக்கூடாது.
சட்டங்களுக்குக் கீழ்ப்படியாவிட்டால் எற்படும் சாபங்கள்
15. “ஆனால் நீ உனது தேவனாகிய கர்த்தர் சொல்கின்றவற்றைக் கவனிக்காமல் இருந்தால், நான் இன்று உனக்கு சொல்கின்றபடி அவரது சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமல் இருந்தால், பிறகு இத்தீமைகள் எல்லாம் உனக்கு ஏற்படும்:
16. “நகரிலும், வயலிலும் கர்த்தர் உன்னைச் சபிப்பார்.
17. கர்த்தர் உனது கூடைகளையும், பாத்திரங்களையும் சபிப்பார். அவற்றில் உணவு இல்லாமல் போகும்.
18. கர்த்தர் உன்னைச் சபிப்பார். உனக்கு அதிகக் குழந்தைகள் இல்லாமல் போகும். அவர் உனது நிலத்தைச் சபிப்பார். உனக்கு நல்ல விளைச்சல் கிடைக்காமல் போகும். அவர் உனது மிருகங்களைச் சபிப்பார். அவை குட்டிகள் அதிகம் இல்லாமல் போகும். அவர் உனது எல்லா கன்றுக்குட்டிகளையும் ஆட்டுக்குட்டிகளையும் சபிப்பார்.
19. கர்த்தர் எல்லா நேரங்களிலும் நீ செய்கின்ற எல்லாவற்றையும் சபிப்பார்.
20. “நீ தீமைசெய்து கர்த்தரை விட்டுவிலகிப் போனால், பிறகு அவர் உனக்கு தீமைகள் ஏற்படும்படிச் செய்வார். நீ செய்கிற எல்லாவற்றிலும் உனக்கு விரக்தியும், கஷ்டமும் ஏற்படும்படிச் செய்வார். நீ விரைவாகவும் முழுவதுமாகவும் அழிக்கப்படும்வரை கர்த்தர் இதனைத் தொடர்ந்து செய்வார். அவர் இதனைச் செய்வார். ஏனென்றால், நீ அவரை விட்டு விலகிப்போனாய்.
21. நீ பெறப்போகும் நாட்டிலிருந்து நீ அழிந்து முடிந்து போகும்வரை, உனக்கு கர்த்தர் பயங்கரமான நோய்கள் ஏற்படும்படிச் செய்வார். 22 கர்த்தர் உன்னை நோய்களாலும், காய்ச்சல் மற்றும் வீக்கங்களாலும் தண்டிப்பார். கர்த்தர் உனக்குப் பயங்கரமான வெப்பத்தை அனுப்புவார். உனக்கு மழை இல்லாமல் போகும். உனது பயிர்கள் வெப்பத்தாலும், நோயாலும் பட்டுப் போகும். நீ அழிக்கப்படும்வரை இத்தீமைகள் எல்லாம் நிகழும்.
23. வானத்தில் மேகங்கள் இராது. வானம் பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத்தைப் போல் இருக்கும். உனக்குக் கீழுள்ள பூமியானது கெட்டியான இரும்பைப்போன்று இருக்கும்.
24. கர்த்தர் மழையை அனுப்பமாட்டார். வானத்திலிருந்து மணலும், புழுதியுமே விழும். நீ அழிகிறவரை இது கீழே வந்து கொண்டிருக்கும்.
25. “உனது பகைவர்கள் உன்னைத் தோற்கடிக்கும்படி கர்த்தர் செய்வார். உனது பகைவரோடு சண்டையிட நீ ஒரு வழியில் போவாய். ஆனால் நீ வேறுபட்ட ஏழு வழிகளில் தப்பி ஓடுவாய். உனக்கு ஏற்படும் இந்த தீமைகள் எல்லாம் பூமியிலுள்ள எல்லா ஜனங்களையும் பயப்படுத்தும்.
26. உங்களது மரித்த உடல்கள் காட்டு மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாகும். உங்கள் மரித்த உடல்களிலிருந்து அவற்றை எவராலும் பயமுறுத்தி விரட்ட முடியாது.
27. “கர்த்தர் எகிப்தியர்களுக்கு அனுப்பியது போன்று பருக்களால் உன்னைத் தண்டிப்பார். அவர் உன்னைக் குணமாக்க முடியாதபடியுள்ள மூல வியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் தண்டிப்பார்.
28. கர்த்தர் உன்னைப் புத்தி மயங்க வைத்தும் தண்டிப்பார். அவர் உன்னைக் குருடாக்கியும் குழப்புவார்.
29. பகல் வெளிச்சத்தில், குருடனைப்போல் உனது வழியை தடவிப்பார்த்துச் செல்வாய். நீ செய்கிற எல்லாவற்றிலும் தோற்றுப் போவாய். ஜனங்கள் மீண்டும், மீண்டும் உன்னைத் தாக்கி உன்னிடமுள்ளவற்றைத் திருடிக்கொள்வார்கள். அங்கு எவராலும் உன்னைக் காப்பாற்ற முடியாது.
30. “நீ ஒரு பெண்ணை நியமித்துக்கொள்வாய், ஆனால் இன்னொருவன் அவளோடு பாலின உறவுகொள்வான். நீ ஒரு வீட்டைக் கட்டுவாய். ஆனால் அதில் நீ இருக்கமாட்டாய். நீ திராட்சைச் செடிகளைப் பயிர் செய்வாய். ஆனால் அவற்றிலிருந்து எதையும் நீ சேகரிக்கமாட்டாய்.
31. ஜனங்கள் உனக்கு முன்னாலேயே உனது பசுக்களைக் கொல்வார்கள். ஆனால் அவற்றின் இறைச்சியை நீ தின்னமாட்டாய். ஜனங்கள் உனது கழுதைகளை எடுத்துக்கொள்வார்கள் அவர்கள் அவற்றை உனக்குத் திரும்பக் கொடுக்கமாட்டார்கள். உனது பகைவர்கள் உனது ஆட்டு மந்தையை எடுத்துக்கொள்வார்கள். அங்கே எவரும் உன்னைக் காப்பாற்ற இருக்கமாட்டார்கள்.
32. “மற்ற ஜனங்கள் உனது மகன்களையும், மகள்களையும் எடுத்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். நாள்தோறும் உனது பிள்ளைகளை எதிர்ப்பார்த்திருப்பாய். உனது கண்கள் பலவீனமாகிக் குருடாகும்வரை நீ பார்த்துக்கொண்டிருப்பாய். ஆனால் உன்னால் அவர்களைக் காணமுடியாது. தேவன் உனக்கு உதவிசெய்யமாட்டார்.
33. “நீ அறிந்திராத நாடு உனது விளைச்சல் எல்லாவற்றையும், மற்றும் நீ உழைத்துப் பெற்ற எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும். ஜனங்கள் உன்னை மோசமாக நடத்துவார்கள். ஜனங்கள் உன்னைப் பழிப்பார்கள்.
34. நீ பார்க்கின்றவை அனைத்தும் உனக்குப் பைத்தியத்தை ஏற்படுத்தும்.
35. கர்த்தர் உன்னைக் குணப்படுத்தமுடியாத கொடிய எரிபந்தப் பருக்களினால் தண்டிப்பார். அப்பருக்கள் உனது முழங்கால்களிலும், கால்களிலும் இருக்கும். அப்பருக்கள் உனது உள்ளங்கால்கள் முதல் உச்சந்தலைவரை உடம்பின் எல்லாப் பாகங்களிலும் இருக்கும்.
36. “நீ அறிந்திராத நாட்டிற்கு உன்னையும், உனது அரசனையும் கர்த்தர் அனுப்புவார். நீயும் உனது முற்பிதாக்களும் இதற்கு முன்னால் இந்நாட்டைப் பார்த்திருக்கவில்லை. அங்கே நீ பொய்த் தெய்வங்களுக்கு சேவை செய்வாய். அவை மரத்தாலும், கல்லாலும் செய்யப்பட்டிருக்கும்.
37. கர்த்தர் உங்களை அனுப்பிய நாடுகளில் உங்களுக்கு ஏற்படுகின்ற தீயவற்றைப் பார்த்து அங்குள்ள ஜனங்கள் அதிர்ச்சி அடைவார்கள். அவர்கள் உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள். அவர்கள் உங்களைப்பற்றி மோசமாகப் பேசுவார்கள்.
தோல்வியின் சாபம்
38. “உங்கள் வயல்கள் ஏராளமாக தானியங்ளை விளைவித்தாலும், உங்களது அறுவடை சிறியதாக இருக்கும். ஏனென்றால், வெட்டுக்கிளிகள் உங்கள் அறுவடையைத் தின்றுவிடும்.
39. நீ திராட்சைச் செடிகளைப் பயிர்செய்வாய். அவற்றுக்காகக் கடினமாக வேலை செய்வாய். ஆனால், நீ திராட்சைப் பழங்களைப் பறிக்கமாட்டாய். திராட்சைரசத்தையும் குடிக்கமாட்டாய். ஏனென்றால், புழுக்கள் அவற்றைத் தின்றுவிடும்.
40. உனது நிலத்தில் ஒலிவ மரங்கள் எங்கெங்கும் வளர்ந்திருக்கும். ஆனால், நீ பயன்படுத்திட ஒலிவ எண்ணெயைப் பெறமாட்டாய். ஏனென்றால், ஒலிவ மரங்களில் பிஞ்சுகள் கீழே விழுந்து அழுகிப்போகும்.
41. உனக்கு மகன்களும், மகள்களும் இருப்பார்கள், ஆனால் நீ அவர்களைப் பாதுகாக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்படுவார்கள்.
42. வெட்டுக் கிளிகள் உனது வயலில் உள்ள விளைச்சலையும், மரங்களையும் அழித்துவிடும்.
43. உங்களிடையே வாழ்கிற பிற நாட்டு ஜனங்கள் மேலும் மேலும் அதிகாரத்தைப் பெறுவார்கள். நீயோ உனக்கிருந்த அதிகராத்தையும் இழப்பாய்.
44. பிற நாட்டுக்காரர்கள் உனக்குக் கடன்தர பணம் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்குக் கடன் கொடுக்க உன்னிடம் பணம் இருக்காது. (தலை உடலைக் கட்டுப்படுத்துவது போன்று) அவர்கள் உன்னைக் கட்டுப்படுத்துவார்கள். நீ வாலைப் போன்று இருப்பாய்.
45. “இந்த சாபங்கள் எல்லாம் உனக்கு வரும். நீ அழியும்வரை இவை உன்னைத் துரத்திப் பிடிக்கும். ஏனென்றால், நீ உனது தேவனாகிய கர்த்தர் சொன்னவற்றைக் கவனிக்கவில்லை. அவர் கொடுத்த சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் நீ அடிபணியவில்லை.
46. உன்னையும் உனது சந்ததிகளையும் தேவன் நியாயந்தீர்த்திருக்கிறார் என்று ஜனங்களுக்கு இந்த சாபங்கள் காட்டும். உங்களுக்கு ஏற்படுகிற பயங்கரத்தைப்பற்றி ஜனங்கள் வியப்படைவார்கள்.
47. “உனது தேவனாகிய கர்த்தர் உனக்குப் பல ஆசீர்வாதங்களைக் கொடுத்தார். ஆனால் நீ அவருக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கொண்ட மனதோடு சேவை செய்யவில்லை.
48. ஆகவே கர்த்தர் அனுப்பிவைத்த உனது பகைவர்களுக்கு நீ சேவை செய்வாய். நீ பசியும், தாகமும், நிர்வாணமும், ஏழ்மையும் அடைவாய். கர்த்தர் உன்மீது நீக்க முடியாத சுமையை வைப்பார். அவர் உன்னை அழிக்கும்வரை அந்தச் சுமையை நீ சுமப்பாய்.
பகை நாட்டிற்குரிய சாபம்
49. “கர்த்தர் தொலைதூரத்திலிருந்து உன்னோடு சண்டையிட ஒரு நாட்டை வரவழைப்பார். அவர்களது மொழியை உன்னால் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் விரைந்து வருவார்கள். வானிலிருந்து ஒரு கழுகு வருவதுபோன்று வருவார்கள்.
50. அந்த ஜனங்கள் கொடூரமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் முதியவர்களைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அவர்கள் இளங்குழந்தைகளிடம் இரக்கம் காட்டமாட்டார்கள்.
51. அவர்கள் உங்களது மிருகங்களையும் நீங்கள் வளர்த்த உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொள்வார்கள். உன்னை அழிக்கும்வரை அவர்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் உன்னிடம் தானியம், திராட்சை ரசம், எண்ணெய், பசுக்கள், ஆடுகள் அல்லது மாடுகள் எதையும் விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் உன்னை அழிக்கும்வரை எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள்.
52. “அந்த நாடு உனது நகரங்களைச் சுற்றி முற்றுகையிட்டுத் தாக்கும். உனது நகரங்களைச் சுற்றியுள்ள உயரமும் உறுதியும் கொண்ட சுவர்கள் உங்களைக் காப்பாற்றும் என்று நீ நினைத்தால், அந்தச் சுவர்கள் கீழே விழும், உனது தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த நாட்டிலுள்ள நகரங்கள் எல்லாவற்றையும் பகைவர்கள் முற்றுகையிடுவார்கள்.
53. நீ மிகவும் துன்பப்படுவாய். பகைவர்கள் உனது நகரங்களை முற்றுகையிடுவார்கள், உனக்கு உணவு கிடைக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். நீ மிகுந்த பசியை அடைவாய். உங்கள் சொந்த மகன்களையும் மகள்களையும் தின்னும்படியும் உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுத்த பிள்ளைகளைத் தின்னும்படியும் உங்களுக்கு அதிக பசி இருக்கும்.
54. “உங்களில் மிக சாந்தமும் இரக்கமும் கொண்டவன் கொடூரமானவனாக ஆவான். அவன் பிறருக்கும், தான் மிகவும் நேசித்த தன் மனைவிக்கும் கொடியவன் ஆவான். அவன் உயிரோடுள்ள தன் பிள்ளைகளுக்கும் கொடியவன் ஆவான்.
55. அவனுக்கு எந்த உணவும் இல்லாதபடியால் தன் சொந்தப் பிள்ளைகளையே புசிப்பான். அவன் அந்த உணவை வேறு யாரோடும் தன் சொந்தக் குடும்பத்தினரோடும்கூட பகிர்ந்துக்கொள்ள மாட்டான். உனது பகைவர்கள் உன் நகரங்களை முற்றுகையிட்டு உன்னைத் துன்புறுத்தும்போது இந்த கொடூரங்களெல்லாம் ஏற்படும்.
56. “உங்கள் மத்தியில் மிகுந்த சாந்தமும் இரக்கமுமுள்ள பெண்ணும்கூடக் கொடியவள் ஆவாள். அவள் மிகவும் சாந்தமும், அவளது கால்கள் தரையில்படாத அளவிற்கு நளினமுள்ளவளாகவும் இருக்கலாம். ஆனால் அவள் தன் மிகுந்த அன்புக்குரிய கணவனுக்குக் கொடியவள் ஆவாள். அவள் தனது சொந்த மகனுக்கும், மகளுக்கும்கூடக் கொடியவள் ஆவாள்.
57. அவள் மறைவாக ஒரு குழந்தையைப் பெறுவாள். அக்குழந்தையோடு அவளது உடலிலிருந்து வெளிவரும் அனைத்தையும் அவள் புசிப்பாள். உன் பகைவன் உனது நகரங்களை முற்றுகையிட்டு உன்னைத் துன்புறுத்தும்போது இத்தீயவை எல்லாம் நிகழும்.
58. “நீ இந்தப் புத்தகத்திலுள்ள அனைத்து கட்டளைகளுக்கும் போதனைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். நீ உனது தேவனாகிய கர்த்தருடைய அற்புதமும் பயங்கரமுமான பெயருக்கு மதிப்பளிக்க வேண்டும். நீ கீழ்ப்படியாவிட்டால் பிறகு
59. கர்த்தர் உனக்கும் உனது சந்ததிகளுக்கும் மிகுந்த துன்பங்களைக் கொடுப்பார். உன் துன்பங்களும் நோய்களும் பயங்கரமானதாக இருக்கும்.
60. எகிப்தில் நீ பல துன்பங்களையும் நோய்களையும் பார்த்தாய். அவை உன்னை அஞ்சும்படி செய்தன. உனக்கு அத்துன்பங்களையெல்லாம் கர்த்தர் கொண்டு வருவார்.
61. இந்தப் போதனைகளின் புத்தகத்தில் எழுதப்படாத துன்பங்களையும், நோய்களையும் கர்த்தர் உனக்குக் கொண்டுவருவார். நீ அழிக்கப்படும்வரை கர்த்தர் இதனைத் தொடர்ந்து செய்வார்.
62. நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப் போன்று அதிக எண்ணிக்கையுடையவர்களாக இருக்கலாம். ஆனால் உங்களிடம் சிலரே மீதியாகவிடப்படுவீர்கள். ஏனென்றால், நீ உனது தேவனாகிய கர்த்தருக்குச் செவிசாய்க்கவில்லை.
63. “கர்த்தர் உனக்கு நல்லவராக இருப்பதிலும் உனது நாட்டை வளர்ச்சி அடைய செய்வதிலும் மகிழ்ந்தார். அதே வழியில் உன்னை அழிப்பதிலும் அதம்பண்ணுவதிலும் மகிழ்ச்சியடைவார். நீ அந்த நாட்டை உனக்குச் சொந்தமானதாக ஆக்கப்போகிறாய், ஆனால் ஜனங்கள் அந்த நாட்டைவிட்டு உன்னை அப்புறப்படுத்துவார்கள்.
64. கர்த்தர் உங்களை உலக நாட்டு குடிகளினிடையில் சிதறடிப்பார். அங்கே நீ கல்லாலும், மரத்தாலும் ஆன பொய்த் தெய்வங்களுக்கு சேவை செய்வாய். அவர்கள் உன்னாலும் உனது முற்பிதாக்களாலும் ஆராதிக்கப்படாத பொய்த் தெய்வங்கள்.
65. “இந்நாட்டு குடிகளுக்குள்ளே நீ சமாதானத்தைப் பெறமாட்டாய், உனக்கு ஓய்வு கொள்ள இடமிருக்காது. கர்த்தர் உனது மனம் முழுவதையும் கவலைகளால் நிரப்புவார். உனது கண்கள் சோர்வை உணரும். நீ மிகுந்த மனசஞ்சலம் அடைவாய்.
66. நீ எப்பொழுதும் ஆபத்துக்களுக்கிடையில் பயத்தோடு இருப்பாய். நீ இரவும், பகலும் பயப்படுவாய். நீ உனது வாழ்க்கையைப் பற்றிய உறுதி இல்லாமல் இருப்பாய்.
67. காலையில் நீ, ‘எப்பொழுது சாயங்காலம் வருமோ’ என்றும், மாலையில் ‘இது காலையாக இருக்க விரும்புகிறேன்’ என்றும் சொல்லுவாய். ஏனென்றால், உன் மனதில் பயம் இருக்கும். நீ தீயவற்றைப் பார்ப்பாய்.
68. கப்பல்களில் கர்த்தர் உன்னை மீண்டும் எகிப்திற்கு அனுப்புவார். உங்களை மீண்டும் அனுப்பமாட்டேன் என்று நான் சொன்னேன். ஆனால், கர்த்தர் உங்களை அனுப்புவார். எகிப்தில் உங்கள் பகைவர்களுக்கு நீங்களே உங்களை அடிமைகளாக விற்பீர்கள். ஆனால் உங்களை யாரும் வாங்கமாட்டார்கள்.”
உபாகமம் அதிகாரங்கள்:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34