மோசே மரணமடைதல்
1. மோசே நேபோ மலைமீது ஏறினான். மோசே மோவாபிலுள்ள யோர்தான் சமவெளியிலிருந்து பிஸ்காவின் உச்சிக்குச் சென்றான். இது எரிகோவிலிருந்து யோர்தான் ஆற்றுக்கு எதிர்புறத்தில் உள்ளது. கர்த்தர் மோசேக்கு கீலேயாத் முதல் தாண்வரையுள்ள அனைத்து நாடுகளையும் காட்டினார்.
2. கர்த்தர் அவனுக்கு நப்தலி, எப்பிராயீம், மற்றும் மனாசேயின் நாடுகள் எல்லாவற்றையும் காட்டினார். அவர் அவனுக்கு மத்தியதரைக் கடல் வரையுள்ள யூதா நாடு முழுவதையும் காட்டினார்.
3. கர்த்தர் மோசேக்கு பாலைவனத்தையும், பேரீச்ச மரங்களின் நகரம் என்னும் சோவார் முதல் எரிகோவரையுள்ள பள்ளத்தாக்கையும் காட்டினார்.
4. கர்த்தர் மோசேயிடம், “நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு வாக்களித்த நாடு இதுதான். நான் அவர்களிடம் சொன்னேன் ‘நான் இந்த நாட்டை உங்கள் சந்ததிகளுக்குத் தருவேன். அந்த நாட்டை நீ பார்க்கும்படி செய்வேன். ஆனால் அங்கே உன்னால் போகமுடியாது’” என்று கூறினார்.
5. பின்னர் கர்த்தருடைய தாசனாகிய மோசே மோவாப் நாட்டில் மரித்தான். கர்த்தர் மோசேயிடம் இவை நிகழும் என்று சொல்லியிருந்தார்.
6. கர்த்தர் மோசேயை மோவாபில் அடக்கம் செய்தார். இது பெத்பேயோருக்கு எதிர்புறத்தில் உள்ள பள்ளத்தாக்கிலே உள்ளது. ஆனால் இன்றுவரை மோசேயின் கல்லறை எங்கே இருக்கிறது என்று எவருக்கும் தெரியாது.
7. மோசே மரணமடையும்போது 120 வயதுடையவனாக இருந்தான். அவன் எப்பொழுதும்போல் பலமுள்ளவனாக இருந்தான். அவனது கண்கள் அப்பொழுதும் நன்றாக இருந்தது.
8. இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்காக 30 நாட்கள் அழுதனர். அவர்கள் துக்ககாலம் முடியும்வரை மோவாபிலுள்ள யோர்தான் சமவெளியில் தங்கினார்கள்.
யோசுவா புதிய தலைவனாகுதல்
9. யோசுவாவின்மேல் மோசே தனது கைகளை வைத்து அவனைப் புதிய தலைவனாக நியமித்திருந்தான். பிறகு நூனின் மகனான யோசுவா ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்டான். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவாவிற்குக் கீழ்ப்படியத் தொடங்கினார்கள். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தவற்றை எல்லாம் அவர்கள் செய்தனர்.
10. இஸ்ரவேல் மோசேயைப் போன்று இன்னொரு தீர்க்கதரிசியைப் பெறவில்லை. கர்த்தர் மோசேயை நேருக்கு நேர் தெரிந்து வைத்திருந்தார்.
11. எகிப்து நாட்டில் அற்புதங்களைச் செய்வதற்கு கர்த்தர் மோசேயை அனுப்பினார். பார்வோன், அவனது அதிகாரிகள் மற்றும் எகிப்திலுள்ள அனைத்து ஜனங்களும் அந்த அற்புதங்களைப் பார்த்தனர்.
12. மோசே செய்ததுபோன்று வேறு எந்த தீர்க்கதரிசியும் சகல வல்லமையும், பயங்கரமும் கொண்ட செயல்களைச் செய்யவில்லை. அவன் செய்ததை இஸ்ரவேலில் உள்ள எல்லா ஜனங்களும் பார்த்தனர்.
உபாகமம் அதிகாரங்கள்:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34