உயிருள்ள கடல்

இஸ்ரவேலிலே இரண்டு வகையான கடல்கள் உண்டு. ஒன்று கின்னரேத் அல்லது கலிலேயாக் கடல். மற்றொன்று சவக்கடல். கலிலேயாக்கடல், உயிருள்ளதாக, எல்லா உயிரினங்களும் அதில் வாழ்பவையாக, அநேகரை போஷிப்பதாக, இஸ்ரவேலின் பயிர் வகைகளுக்கு நீர் பாய்ச்சுவதாக, எப்போதும் தண்ணீர் அதில் பாய்ந்துக் கொண்டிருப்பதாக, செழுமையாக, உயிருள்ளதாக உள்ளது. இதன் தண்ணீர் யோர்தான் பள்ளத்தாக்கு வழியாக சவக்கடலில் போய் விழுகிறது. மற்றொருகடலாகிய சவக்கடலோ உயிரற்றதாக, ஒரு ஜீவனும் அதில் வாழாதபடிக்கு அதிகமாய் உப்பேறியதாக நீர் பாசன வசதிக்கு பிரயோஜனமற்றதாக உள்ளது.

அதன் நீர் எங்கும்பாய்ந்துச் செல்லாவிட்டாலும், அதன் பரப்பு சுருங்கிக் கொண்டே வருகிறது. வருடத்திற்கு ஒரு மீட்டர் அதன் கனநீர் சுருங்கி வருகிறது. அதனுடைய நீர் ஆவியாக மாறி காற்றோடு கலந்து விடுகிறது.

எந்தக்கடல் அதிகமாக கொடுக்கிறதோ, அது உயிருள்ளதாக மாறுகிறது. எப்போது நாம் நம்முடைய வாழ்க்கையில் கொடுக்கிறவர்களாக மாறுகிறோமோ, அப்பொது, மிகவும் அதிகமாக நாம் பெருகுவோம். நம்முடைய அன்பை, நமது வாழ்க்கையை, நமது செல்வத்தை நமது எல்லாவற்றையும் கர்த்தருக்காக நாம் செலவழிக்கும்போது, நம்முடைய வாழ்க்கையை உயிருள்ளதாக, செழுமையுள்ளதாக தேவன் மாற்றுகிறார்.

இயேசுகிறிஸ்து இதற்கு நல்ல உதாரணமாக இருக்கிறார். அவர் தமக்கென்று உள்ளதெல்லாவற்றையும் மற்றவர்களுக்கு கொடுத்தார். தமது வாழ்வையே அவர் ஒப்புக் கொடுத்தார். அவருடய கடைசி சொட்டு இரத்தத்தயும் நமக்காக சிந்தி, தமது ஜீவனையே அவர் ஒப்புக் கொடுத்ததால், தேவன் அவரை உயிரோடு எழுப்பி, எத்தனையோ தலைமுறை மானிடர் அவராலே நித்திய ஜீவனை பெற்று பரலோகத்தில், வாழும் பாக்கியத்தை பெறுகிறார்கள்.

அதே சமயம் நாம் எதையும் கொடுக்காமல், எல்லாவற்றையும் நமக்கென்று வைத்திருந்தால், ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அதினால் என்ன பிரயோஜனம்? சவக்கடலைப் போல எந்த உயிரினத்திற்கும் பிரயோஜனமில்லாமல், காற்றோடு ஆவியாக கலந்துப் போய் விடுவதுதான் கிடைக்கும் லாபம்.

அதுப்போல அநேக கிறிஸ்தவர்கள், எத்தனையோ கிறிஸ்தவ செய்திகளை கேட்டு அதை தங்களுக்குள்ளே வைத்துக்கொண்டு இருப்பதால், அது அவர்களுக்கும் பிரயோஜனமில்லை. மற்றவர்களுக்கும் பிரயோஜனமில்லை, தாங்கள் தேவனிடம்பெற்றுக் கொண்ட சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்ளும்போது அது மற்றவர்களுக்கும் பிரயோஜனமாயிருக்கும், கர்த்தர் இன்னும் உங்களுக்கு கொடுப்பார். உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். (மத்தேயு 25:29) என்று இயேசுக்கிறிஸ்துக் கூறினார்.

கொடுங்கள், அப்போது நீங்கள் வாழ்வீர்கள், மற்றவர்களும் உங்களால் வாழ்வார்கள், தேவன் இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பார். அன்பு கூருங்கள், தேவனுடைய அன்பு உங்களில் நிரம்பி வழியும். கொடுக்கமாட்டோம் என்று உங்களுக்கென்று வைத்தீர்களானால், உங்களுக்குள்ளதும் இழந்துப் போக வேண்டிய நிலைமை வரும். என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.

ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம் (1யோவான் 3:17:18)

 

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 2 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *