செலோப்பியாத்தின் மகள்கள்

1.செலோப்பியாத் ஏபேரின் மகன். ஏபேர் கிலெயாத்தின் மகன். கிலெயாத் மாகீரின் மகன். மாகீர் மனாசேயின் மகன். மனாசே யோசேப்பின் மகன். செலோப்பியாத்திற்கு ஐந்து மகள்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என் பவையாகும்.

2. இந்த ஐந்து பேரும் ஆசரிப்புக் கூடாரத்திற்குச் சென்று அங்கே மோசே, ஆசாரியனாகிய எலெயாசார், தலைவர்கள் மற்றும் ஜனங்கள் முன்னால் நின்றனர். அந்த ஐந்து பேரும்,

3. “நாங்கள் பாலை வனத்தின் வழியாகப் பயணம் செய்தபோது எங்கள் தந்தை மரித்துப்போனார். அவரது மரணம் ஒரு இயற்கை மரணம். அவர் கோராவின் குழுவைச் சேர்ந்தவரல்ல. (கோரா கர்த்தருக்கு எதிராக மாறியவன்.) ஆனால் எங்கள் தந்தைக்கு ஆண் பிள்ளைகள் இல்லை.

4. எங்கள் தந்தையின் பெயர் சொல்ல ஆண் வாரிசுகள் இல்லை. எங்கள் தந்தையின் பெயர் தொடர்ந்து வழங்கப்படாதது சரியல்ல. அவருக்கு ஆண் குழந்தைகள் இல்லாததால் அவரது பெயர் முடிந்து போகிறது. ஆகையால் எங்கள் தந்தையின் சகோதரர்கள் பெற்ற நிலங்களில் ஒரு பங்கை எங்களுக்கும் தருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று முறையிட்டார்கள்.

5. இதனால் என்னச் செய்யலாம் என்று மோசே கர்த்தரிடம் கேட்டான்.

6. கர்த்தர் மோசேயிடம்,

7. “செலோப்பியாத்தின் மகள்கள் கூறுவது சரிதான். அவர்கள் தம் தந்தையின் சகோதரர்களோடு தங்கள் பங்கைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே இவர்களின் தந்தைக்குரிய நிலத்தை இவர்களுக்கே கொடுக்கவும்.

8. “இஸ்ரவேல் ஜனங்களுக்கு இந்தச் சட்டத்தையும் ஏற்படுத்து: ‘ஒருவேளை ஒருவனுக்கு ஆண்பிள்ளை இல்லாவிடில் அவன் மரித்தபின் அவனுக்குரிய அனைத்தும் அவனது பெண் பிள்ளைகளுக்கு உரியதாகும்.

9. ஒருவனுக்கு பெண் குழந்தைகளும் இல்லாவிட்டால் அவனுக்குரிய அனைத்தும் அவனது சகோதரர்களுக்கு உரியதாகும்.

10. ஒருவனுக்குச் சகோதரர்களும் இல்லாவிட்டால் அவனுக்குரிய அனைத்தும் அவனது தந்தையின் சகோதரர்களுக்கு உரியதாகும்.

11. ஒருவனது தந்தைக்கும் சகோதரர்கள் இல்லாவிட்டால் பிறகு அவன் குடும்பத்திலுள்ள நெருங்கிய உறவினருக்கு அவனுக்குரிய அனைத்தும் உரியதாகும். இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு சட்டமாக வேண்டும்’” என்றார்.

புதிய தலைவராக யோசுவா

12. பிறகு கர்த்தர் மோசேயிடம், “யோர்தான் நதிக்குக் கிழக்கேயுள்ள பாலைவனப் பகுதியில் உள்ள மலைகள் ஒன்றின் மீது ஏறிச்செல். அங்கே நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அளித்த பூமியை நீ பார்க்கலாம்.

13. நீ அந்த நாட்டைப் பார்த்த பிறகு, நீயும் உனது சகோதரன் ஆரோனைப்போன்று மரித்துப் போவாய்.

14. சீன் என்னும் பாலைவனத்தில் தண்ணீர் விஷயமாக இஸ்ரவேல் ஜனங்கள் கலகம் செய்ததை நினைத்துப்பார். நீயும் உனது சகோதரன் ஆரோனும் நான் கூறியபடி செய்யவில்லை. நான் பரிசுத்தமானவர் என்பதை ஜனங்களுக்குக் காட்டி என்னை கனப்படுத்தாமல் விட்டு விட்டீர்கள்.” (இது சீன் என்னும் பாலைவனத்தில், காதேஸ் என்ற இடத்தில் மேரிபா தண்ணீருக்காக நிகழ்ந்தது.)

15. மோசே கர்த்தரிடம்,

16. “ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது கர்த்தராகிய உமக்கு நன்கு தெரியும். கர்த்தாவே! இந்த ஜனங்களுக்கு ஒரு புதிய தலைவனைத் தேர்ந்தெடுத்து விட வேண்டும் என்று உம்மை வேண்டிக்கொள்கிறேன்.

17. இந்த ஜனங்களை இந்த நாட்டிலிருந்து அழைத்துப் போய் புதிய நாட்டில் சேர்க்கும் புதிய தலைவனை கர்த்தர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். அதற்குப் பின்பு இந்த ஜனங்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போன்று ஆகமாட்டார்கள்” என்றான்.

18. எனவே கர்த்தர் மோசேயிடம், “நூனின் மகனான யோசுவாவே புதிய தலைவன். அவன் மிகவும் ஞானம் உள்ளவன். அவனைப் புதிய தலைவனாக்கு.

19. முதலில் அவனை ஆசாரியனாகிய எலெயாசார் முன்பும் மற்ற ஜனங்கள் முன்பும் நிறுத்து. பிறகு அவனைத் தலைவனாக ஏற்படுத்து.

20. “நீ அவனைத் தலைவனாக்குவதை ஜனங்கள் காணும்படி செய். அப்போது ஜனங்கள் அவனுக்கு அடங்கி நடப்பார்கள்.

21. யோசுவா எதைப்பற்றியாவது முடிவு எடுக்க வேண்டுமானால், அவன் ஆசாரியனாகிய எலெயாசார் முன் நிற்கவேண்டும். எலெயாசார் ஊரிமைப் பயன்படுத்தி கர்த்தருடைய பதிலை அறிந்துகொள்வான். பின் கர்த்தர் சொல்வதை யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் செய்ய வேண்டும். அவன், ‘போருக்குப் போங்கள்’ என்று சொன்னால் அவர்கள் போருக்குப் போவார்கள். அவன் ‘வீட்டிற்குப் போங்கள்’ என்று சொன்னால், அவர்கள் வீட்டிற்குப் போவார்கள்” என்றார்.

22. கர்த்தருடைய வார்த்தைகளுக்கு மோசே கீழ்ப்படிந்தான். இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் முன்பு நிறக்குமாறு யோசுவாவிடம் மோசே கூறினான்.

23. பின் தனது கையை அவன்மேல் வைத்து அவனைப் புதிய தலைவனாக ஆக்கினான். அவன் இதனை கர்த்தர் சொன்னபடியே செய்து முடித்தான்.

எண்ணாகமம் அதிகாரங்கள்:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

(Visited 12 times, 1 visits today)