எக்காளங்களின் பண்டிகை

1. “ஏழாவது மாதத்தின் முதல் நாளில் ஒரு சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. அந்நாளில் எக்காளம் ஊதவேண்டும்.

2. அப்போது நீங்கள் தகனபலி தரவேண்டும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதுள்ள எவ்வித குறையும் இல்லாத 7 ஆட்டுக்குட்டிகளையும் பலி தரவேண்டும்.

3. அதோடு உணவுபலியும் தரவேண்டும். அதில் காளையோடு 24 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஆட்டுக்கடாவோடு 16 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தர வேண்டும்.

4. ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் 8 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும்.

5. அதோடு பாவப்பிரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் உங்களை சுத்தப்படுத்த கொடுக்க வேண்டும்.

6. இப்பலிகள் வழக்கமான மாதப்பிறப்பின் நாளின் சர்வாங்க தகன பலியோடு சேரவேண்டும். அத்துடன் தானியக் காணிக்கையும் தர வேண்டும். இது தினந்தோறும் அளிக்கப்படும் தகனபலி, தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேர்ந்திருக்க வேண்டும். இப்பலிகள் விதிகளின்படி அமைந்திருக்க வேண்டும். இப்பலிகள் நெருப்பில் தகனம் செய்யப்பட வேண்டும். இந்த நறுமணம் கர்த்தருக்குப் பிரியமானது.

பாவப்பரிகார நாள்

7. “ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளில் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அந்த நாளில் எந்த உணைவையும் உண்ணக் கூடாது. அன்று வேறு வேலைகள் எதையும் செய்யக் கூடாது.

8. நீங்கள் அன்றைக்குத் தகனபலி தர வேண்டும். அவற்றின் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் 1 காளையையும் 1 ஆட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய 7 ஆட்டுக்குட்டிகளையும் தர வேண்டும். இவை பழுதற்றதாக இருக்கவேண்டும்.

9. இத்துடன் உணவுப்பலி தரவேண்டும். காளையோடு 24 கிண்ணம் மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஆட்டுக் கடவோடு 16 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும்.

10. ஒவ்வொரு ஆட்டுக்குட்டியோடும் 8 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும்.

11. அத்துடன் உங்களைப் பரிசுத்தப்படுத்த பாவப்பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் பலி தரவேண்டும். இது வழக்கமான தினப் பலி, தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு கூடுதலான ஒன்றாக அமையும்.

அடைக்கல கூடாரப் பண்டிகை

12. “ஏழாவது மாதத்தின் பதினைந்தாவது நாளில் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். இது அடைக்கல கூடாரப் பண்டிகை எனப்படும். அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. கர்த்தருக்காக அந்நேரத்தில் ஏழு நாட்களை சிறப்பு விடுமுறை நாட்களாகக் கொண்டாடவேண்டும்.

13. நீங்கள் தகன பலியையும் தரவேண்டும். அவை நெருப்பில் தகனிக்கப்படவேண்டும். அந்த மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் 13 காளைகளையும் 2 ஆட்டுக்கடாக்களையும் 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக் குட்டிகள் ஒரு வயதுடையதாக இருப்பதுடன், எவ்வித குறைபாடும் இல்லாததாகவும் இருக்கவேண்டும்.

14. இதோடு உணவுப்பலியும் தரவேண்டும். ஒவ்வொரு காளைக்கும் 24 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஒவ்வொரு ஆட்டுக்கடாவுக்கும் 16 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும்.

15. ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கும் 8 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும்.

16. ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் நீங்கள் இவற்றோடு தனியே தரவேண்டும். இவை தினந்தோறும் அளிக்கப்படும் தகனபலி, தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேர்த்துத் தரவேண்டும்.

17. “இந்த விடுமுறையின் இரண்டாவது நாளில் 12 காளைகளையும், 2 ஆட்டுக் கடாக்களையும், 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதுடையதாகவும், எவ்வித குறையும் இல்லாததாகவும், இருக்கவேண்டும்.

18. நீங்கள் இந்த மிருகங்களுக்கு ஏற்ற சரியான தானியக் காணிக்கையையும் தரவேண்டும். அதோடு பானங்களின் காணிக்கையும் காளையோடும், ஆட்டுக்கடாவோடும், ஆட்டுக்குட்டிகளோடும் தரவேண்டும்.

19. பாவநிவாரணப் பலியாக ஒரு ஆட்டுக்கடாவையும் தரவேண்டும். இவை தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேர்க்கையாக இருக்கவேண்டும்.

20. “இந்த விடுமுறையின் மூன்றாவது நாளில் நீங்கள் 11 காளைகளையும், 2 ஆட்டுக்கடாக்களையும், 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதும் எவ்வித குறையும் இல்லாததாகவும் இருக்கவேண்டும்.

21. நீங்கள் இந்தக் காளை, கடா மற்றும் ஆட்டுக்குட்டிகளோடு சரியான அளவில் தானியக் காணிக்கையும் பானங்களின் காணிக்கையும் கொடுக்கவேண்டும்.

22. நீங்கள் பாவப் பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் கொடுக்க வேண்டும். இவை தினந்தோறும் கொடுக்கப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேரவேண்டும்.

23. “இந்த விடுமுறையின் நான்காவது நாளில் நீங்கள் 10 காளைகளையும், 2 வெள்ளாட்டுக் கடாக்களையும், 14 ஆட்டுக் குட்டிகளையும் தர வேண்டும். குட்டிகள் ஒரு வயதும், எவ்விதக்குறையும் இல்லாததாகவும் இருக்க வேண்டும்.

24. இந்தக் காளைகள், கடாக்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றோடு சரியான அளவில் தானியக் காணிக்கையும், பானங்களின் காணிக்கையும் கொடுக்கவேண்டும்.

25. பாவப்பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் தரவேண்டும். இவை தினந்தோறும் கொடுக்கப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையுடன் கூடுதலான ஒன்றாகச் செலுத்த வேண்டும்.

26. “இந்த விமுறையின் ஐந்தாவது நாளில் நீங்கள் 9 காளைகளையும், 2 ஆட்டுக் கடாக்களையும், 14 ஆட்டுகுட்டிகளையும் கொடுக்க வேண்டும். ஆட்டுக் குட்டிகள் ஒரு வயதும், எவ்விதக் குறைகளும் இல்லாததாகவும் இருக்கவேண்டும்.

27. நீங்கள் இவற்றுக்குச் சரியான அளவில் தானியக் காணிக்கையும், பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும், ஆட்டுக்கடாக்களோடும் ஆட்டுக் குட்டிகளோடும் கொடுக்க வேண்டும்.

28. நீங்கள் இவற்றோடு ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் பாவப்பரிகாரப் பலியாகத் தரவேண்டும். இவை தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு கூடுதலான ஒன்றாக அமையும்.

29. “இந்த விடுமுறையின் ஆறாவது நாளில் நீங்கள் 8 காளைகளையும் 2 ஆட்டுக் கடாக்களையும் 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதுடையதாகவும், எவ்விதக் குறையும் இல்லாததாகவும் இருக்க வேண்டும்.

30. நீங்கள் இவற்றுக்குச் சரியான அளவில் தானியக் காணிக்கையும் பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும், ஆட்டுக்கடாக்களோடும், ஆட்டுக் குட்டிகளோடும் கொடுக்க வேண்டும்.

31. நீங்கள் இவற்றில் ஒரு வெள்ளாட்டுக் கடாவைப் பாவப்பரிகாரப் பலியாக செலுத்த வேண்டும். இவை தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

32. “இந்த விடுமுறையின் ஏழாவது நாளில் நீங்கள் 7 காளைகளையும் 2 ஆட்டுக் கடாக்களையும் 14 ஆட்டுக் குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதுடையதாகவும், குறை இல்லாததாகவும் இருக்க வேண்டும்.

33. நீங்கள் இதற்கு ஏற்ற சரியான அளவுடையதாக தானியக் காணிக்கையும் பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும், ஆட்டுக் கடாக்களோடும், ஆட்டுக் குட்டிகளோடும் தர வேண்டும்.

34. நீங்கள் ஒரு வெள்ளாட்டுக் கடாவைப் பாவப்பரிகாரப் பலியாகக் கொடுக்கவேண்டும். இது வழக்கமாக தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கையும் மற்றும் பானங்களின் காணிக்கைக்கும் சேர்க்கையாகும்.

35. “இந்த விடுமுறையின் எட்டாவது நாளில் ஒரு மிகச் சிறப்பான கூட்டம் நடைபெறும். அந்நாளில், நீங்கள் எவ்வித வேலையும் செய்ய வேண்டாம்.

36. நீங்கள் ஒரு தகன பலி கொடுக்கவேண்டும். இதை நெருப்பில் தகனம் செய்யவேண்டும். அதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் 1 காளையையும், 1 வெள்ளாட்டுக்கடாவையும், 7 ஆட்டுக் குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஓராண்டு வயதும் எவ்விதக் குறையும் இல்லாததாயும் இருக்க வேண்டும்

37. இவற்றுக்கு ஏற்ற சரியான அளவில் தானியக் காணிக்கையையும் பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும் ஆட்டுக் கடாக்களோடும் ஆட்டுக் குட்டிகளோடும் கொடுக்க வேண்டும்.

38. நீங்கள் பாவப் பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் தரவேண்டும். இவை வழக்கமாகத் தினந்தோறும் தரப்படும் தானியம் மற்றும் பானங்களின் காணிக்கைகளோடு கூடுதலான ஒன்றாக அமையும்.

39. “சிறப்பான விடுமுறைகளில் நீங்கள் தகனபலித் தரவேண்டும். அதோடு தானியக் காணிக்கை, பானங்களின் காணிக்கை, மற்றும் சமாதான பலிகளையும் தரவேண்டும். நீங்கள் இவற்றை கர்த்தருக்கு தரவேண்டும். இப்பலிகள் நீங்கள் கொடுக்க விரும்பும் சிறப்பான அன்பளிப்புகளுக்குச் சேர்க்கையாக இருக்கும். இவற்றை விசேஷ வாக்குறுதிகளைச் செய்யும்போதும் கொடுக்கவேண்டும்” என்றார்.

40. இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே கர்த்தர் ஆணையிட்ட அனைத்தையும்பற்றி கூறினான்.

எண்ணாகமம் அதிகாரங்கள்:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

(Visited 1 times, 1 visits today)