கானான் நாட்டின் எல்லைகள்
1.மோசேயிடம் கர்த்தர் பேசினார். அவர்,
2. “இஸ்ரவேல் ஜனங்களிடம் இந்த கட்டளைகளைக் கூறு: நீங்கள் கானான் நாட்டிற்கு போய்க்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் கானான் நாடு முழுவதையும் பெற்றுக்கொள்வீர்கள்.
3. தெற்குப் பக்கம் ஏதோம் அருகிலுள்ள சீன் பாலைவனத்தின் ஒரு பகுதியைப் பெறுவீர்கள். உங்களது தெற்கு எல்லையானது கிழக்கே இருக்கிற சவகடலின் கடைசியில் தொடங்கும்.
4. இது ஸ்கார்ப்பியன் கணவாயின் தெற்காகக் கடந்து செல்லும். சீன் பாலைவனத்தின் வழியாக, காதேஸ்பர்னேவுக்கும் பிறகு ஆத்சார் ஆதாருக்கும், பின் அங்கிருந்து அஸ்மோனாவுக்கும் செல்லும்.
5. அஸ்மோனிலிருந்து எல்லையானது எகிப்து நதியில் போய், பிறகு அது மத்தியத்தரைக் கடலில் போய் முடியும்.
6. மத்தியத்தரைக் கடல் உங்களது மேற்கு எல்லையாக இருக்கும்.
7. உங்கள் வடக்கு எல்லையானது மத்தியத்தரைக் கடலில் தொடங்கி, லெபனானில் உள்ள ஓர் மலைக்குச் செல்லும்.
8. ஓர் என்னும் மலையிலிருந்து, இது லெபோ ஆமாத்திற்குப் போகும். பிறகு சேதாத்திற்குப் போகும்.
9. பின்னர் அவ்வெல்லையானது, சிப்ரோனுக்குப் போய் ஆத்சார் ஏனானிலே முடியும். அதுதான் உங்கள் வடக்கு எல்லையாகும்.
10. உங்கள் கிழக்கு எல்லையானது ஏனானிலே தொடங்கி, அது சேப்பாமுக்குப் போகும்,
11. சேப்பாமிலிருந்து ஆயினுக்குக் கிழக்கிலுள்ள ரிப்லாவிற்குப் போகும். எல்லையானது தொடர்ந்து கலிலேயா ஏரிக்குத் தொடரும்.
12. பிறகு அந்த எல்லையானது யோர்தான் நதிவரைத் தொடரும். அது மரணக் கடலில் போய் முடியும். இவை தான் உங்கள் நாட்டைச் சுற்றியுள்ள எல்லைகள் ஆகும்” என்றார்.
13. எனவே, மோசே இந்த கட்டளைகளை இஸ்ரவேல் ஜனங்களிடம் கொடுத்தான். “அதுதான் நீங்கள் பெறப்போகிற நாடு. இதனைச் சீட்டுக்குலுக்கல் மூலமாக 9 கோத்திரங்களுக்கும் மனாசேயின் பாதி குடும்பத்திற்கும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.
14. ரூபன் மற்றும் காத்தின் கோத்திரத்தினரும் மனாசேயின் பாதிக் குடும்பத்தினரும் ஏற்கெனவே தங்கள் நாட்டைப் பெற்றுள்ளனர்.
15. அந்த இரண்டரைக் கோத்திரத்தினரும் எரிகோவின் அருகில் யோர்தானுக்குக் கிழக்கே உள்ள நாடுகளைப் பெற்றுள்ளனர்” என்றான்.
16. பிறகு கர்த்தர் மோசேயோடு பேசினார்.
17. அவர், “நாட்டைப் பங்கு வைக்க ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனான யோசுவாவும்,
18. கோத்திரங்களின் தலைவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒரு தலைவர் இருப்பார். அவர்கள் நாட்டைப் பங்கு போட்டுக் கொடுப்பார்கள்.
19. பின் வருபவை அந்த தலைவர்களின் பெயர்களாகும்:யூதாவின் கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகனான காலேபு;
20. சிமியோனின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகனான சாமுவேல்;
21. பென்யமீனின் கோத்திரத்திலிருந்து கிஸ்லோனின் மகனான எலிதாது;
22. தாணின் கோத்திரத்திலிருந்து யொக்லியின் மகனான புக்கி;
23. யோசேப்பின் மகனான மனாசேயின் கோத்திரத்திலிருந்து எபோதின் மகனாகிய அன்னியேல்:
24. எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து சிப்தானின் மகனாகிய கேமுவேல்;
25. செபுலோனின் கோத்திரத்திலிருந்து பர்னாகின் மகனாகிய எலிசாப்பான்;
26. இசக்காரின் கோத்திரத்திலிருந்து ஆசானின் மகனாகிய பல்த்தியேல்;
27. ஆசேரின் கோத்திரத்திலிருந்து செலோமியின் மகனான அகியூத்;
28. நப்தலியின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகனான பெதாக்கேல்” என்றார்.
29. இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் கானான் தேசத்தைப் பங்கிடும்படி கர்த்தர் இவர்களைத் தெரிந்தெடுத்தார்.
எண்ணாகமம் அதிகாரங்கள்:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36