கோகாத் குடும்பத்தின் வேலைகள்
1.கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும்,
2. “கோகாத்தின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்களின் மொத்த ஆண்களின் தொகையை எண்ணிக் கணக்கிடு. (கோகாத்தின் கோத்திரமானது லேவியர் கோத்திரத்தின் ஒரு பகுதியாகும்.)
3. 30 வயது முதல் 50 வயது வரையுள்ள, படையில் பணியாற்றக்கூடிய ஆண்களைக் கணக்கிடு. இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்வார்கள்.
4. ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள மிகப் பரிசுத்தமானப் பொருட்களைக் கவனித்துக்கொள்வதே இவர்களின் வேலை.
5. “இஸ்ரவேல் ஜனங்கள் புதிய இடங்களுக்குப் பயணம் செய்யும்போது, ஆரோனும் அவனது மகன்களும் ஆசரிப்புக் கூடாரத்தின் உள்ளேச் செல்லவேண்டும். அவர்கள் திரையை கீழே எடுத்து, அதனால் பரிசுத்த உடன்படிக்கைப் பெட்டியை மூட வேண்டும்.
6. அதன்மேல் அழகான தோலினாலான மூடியால் மூடவேண்டும். அதன் மேல் கெட்டியான நீலத்துணியை விரித்து, தண்டுகளை வளையத்தினுள் செலுத்தி, பரிசுத்தப்பெட்டியை மூட வேண்டும்.
7. “பிறகு ஒரு நீலத்துணியைப் பரிசுத்த மேஜையின்மேல் விரிக்க வேண்டும். அதன் மேல் தட்டுக்களை வைத்து, கரண்டி, கோப்பை, மற்றும் பானங்களின் காணிக்கைக்கான ஜாடியை வைக்க வேண்டும். அதோடு சிறப்பான அப்பத்தையும் அதன் மேல் வைக்க வேண்டும்.
8. பின் அதன்மேல் சிவப்புத் துணியை வைத்து, அதனை மெல்லிய தோல் மூடியால் மூடவேண்டும். பிறகு மேஜை தண்டுகளையும் வளையத்தினுள் கட்டிவிட வேண்டும்.
9. “குத்து விளக்குத் தண்டையும் அதிலுள்ள அகல்களையும் நீலத் துணியால் மூட வேண்டும். விளக்கு எரிவதற்கு உதவுகின்ற அனைத்துப் பொருட்களையும், எண்ணெய் பாத்திரங்களையும் மூடி வைக்க வேண்டும்.
10. பிறகு இவை அனைத்தையும் மெல்லிய தோலால் மூடிக்கட்டி, ஒரு தண்டோடு இணைக்க வேண்டும். இது இவற்றைத் தூக்கிச் செல்ல உதவியாக இருக்கும்.
11. “அவர்கள் தங்க பலிபீடத்தின் மேல் நீலத் துணியை மூடி, அதன் மேல் மெல்லிய தோலை மூடவேண்டும். அதில் தண்டுகளை வளையத்தோடு இணைத்துக் கட்ட வேண்டும்.
12. “பிறகு பரிசுத்த இடத்தில் தொழுதுகொள்வதற்குப் பயன்படும், அனைத்து சிறப்புப் பொருட்களையும் சேகரிக்க வேண்டும். அவற்றை நீலத்துணியில் சுருட்ட வேண்டும். பிறகு அதனை மெல்லியத் தோலால் மூடிக்கட்டவேண்டும். இவற்றைத் தூக்கிச் செல்வதற்கு வசதியாக ஒரு தண்டோடு கட்டிக்கொள்ள வேண்டும்.
13. “வெண்கலத்தாலான பலீபீடத்தில் உள்ள சாம்பலை சுத்தப்படுத்த வேண்டும். பிறகு அதனை நீலத் துணியால் மூட வேண்டும்.
14. பின் தொழுதுகொள்வதற்கான அனைத்துப் பொருட்களையும் சேகரிக்க வேண்டும். நெருப்புத்தட்டு, குறடு, சாம்பல் எடுக்கும் கரண்டி, கலசங்கள் போன்றவைகளை அவர்கள் வெண்கலத்தாலான பலிபீடத்தின் மேல் வைக்க வேண்டும். பின் மெல்லியத் தோலால் பலிபீடத்தை மூடவேண்டும். இவற்றைத் தூக்கிச் செல்ல வசதியாக தண்டுகளை வளையங்களில் மாட்டிக்கொள்ளவேண்டும்.
15. “ஆரோனும் அவனது மகன்களும், பரிசுத்த இடத்திலுள்ள பரிசுத்தமான பொருட்களையெல்லாம் மூடிவைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கோகாத் கோத்திரத்தில் உள்ளவர்கள், இவற்றைத் தூக்கிச் செல்ல வேண்டும். இம்முறையில் இவர்கள் மரிக்காதபடிக்கு பரிசுத்தமான இடத்தைத் தொடாதிருக்கக்கடவர்கள்.
16. “ஆசாரியன் ஆரோனின் மகனான எலெயாசார் பரிசுத்தக் கூடாரத்தின் பொறுப்புக்குரியவன். பரிசுத்த இடத்திற்கும், அதிலுள்ள பொருட்களுக்கும் அவனே பொறுப்பானவன். விளக்குக்குரிய எண்ணெய்க்கும், நறுமணப் பொருட்களுக்கும், தினந்தோறும் செலுத்தப்படும் பலிகளுக்கும், அபிஷேக எண்ணெய்க்கும் அவனே பொறுப்பானவன்” என்றார்.
17. மேலும் கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும்,
18. “கவனமாக இருங்கள். கோகாத் கோத்திரம் அழிந்துபோகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
19. அவர்கள் மகா பரிசுத்த இடத்தின் அருகில் செல்லும்போது மரிக்காமல் இருப்பதற்காக, நீங்கள் அவர்களுக்காக இவற்றைச் செய்யவேண்டும். ஆரோனும் அவனது மகன்களும் உள்ளே போய்க் கோகாத்தியர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஒவ்வொரு ஆணுக்கும் அவனது வேலையும், அவன் சுமக்க வேண்டியவற்றையும் நியமிக்க வேண்டும்.
20. நீங்கள் இவற்றைச் செய்யாவிட்டால் கோகாத்தியர்கள் உள்ளே போய் பரிசுத்த பொருட்களை ஒரு வேளை பார்த்துவிடலாம். அவ்வாறு ஒரு வினாடி பார்த்தாலும், அவர்கள் மரிக்க நேரிடும்” என்று கூறினார்.
கெர்சோன் குடும்பத்தாருக்குரிய வேலைகள்
21. கர்த்தர் மோசேயிடம்,
22. “கெர்சோன் குடும்பத்தில் உள்ள அனைத்துԔ ஜனங்களையும் எண்ணிக் கணக்கிடு. அவர்களைக் குடும்ப வாரியாகவும், கோத்திரங்களாகவும் பட்டியலிடு.
23. படையில் பணியாற்றக் கூடிய 30 வயது முதல் 50 வயது வரையுள்ள ஆண்களையும் கணக்கிடுக. இவர்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்தைக் கவனிக்கும் வேலையுண்டு.
24. “இவைதான் கெர்சோன் வம்சத்தாரின் வேலைகள். அவர்கள் கீழ்க்கண்டவற்றைச் சுமக்க வேண்டும்:
25. பரிசுத்த கூடாரத்தின் திரைகளையும், அதோடு ஆசாரிப்புக் கூடாரத்தையும், அதன் மூடியையும், அவற்றைப் போர்த்தியுள்ள மெல்லியத் தோல் மூடியையும், ஆசாரிப்புக் கூடார வாசல் திரையையும் சுமந்து செல்ல வேண்டும்.
26. அவர்கள் பரிசுத்தக் கூடாரத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்தின் தொங்கு திரைகளையும், பலிபீடத்தின் திரையையும், பிரகாரத்ததின் வாசல் திரையையும், அதோடு கயிறுகளையும், திரைக்குப் பயன்படும் மற்ற பொருட்களையும் சுமக்க வேண்டும். இவற்றுக்காகச் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் கெர்சோனியர்கள் செய்யவேண்டும்.
27. கெர்சோனியர்கள் சுமத்தல் மற்றும் மற்ற வேலைகளையும் செய்யும்போது ஆரோனும் அவனது மகன்களும் இவ்வேலைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சுமக்க வேண்டிய பொருட்களைப்பற்றி அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
28. ஆசரிப்புக் கூடாரத்துக்காக கெர்சோனிய கோத்திரம் செய்ய வேண்டிய பணிகள் இவைதான். ஆசாரியனான ஆரோனின் மகனான இத்தாமார் இந்த வேலைகளுக்குப் பொறுப்பானவன்.
மெராரி குடும்பத்தின் வேலைகள்
29. “மெராரி கோத்திரத்தில் உள்ள எல்லாக் கோத்திரங்களையும், எண்ணிக் கணக்கெடுக்க வேண்டும்.
30. படையில் பணியாற்றக் கூடிய 30 முதல் 50 வயது வரையுள்ள ஆண்களைக் கணக்கிடு. இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்காக, ஒரு சிறப்பான பணியைச் செய்ய வேண்டும்.
31. நீங்கள் பயணம் செய்யும்போது, ஆசரிப்புக் கூடாரத்திற்கான மரச் சட்டங்களை, இவர்களே சுமந்து செல்ல வேண்டும். அதோடு பாதங்களையும், தாழ்ப்பாள்களையும், தூண்களையும்.
32. பிரகாரத் தூண்களையும் சுமக்க வேண்டும். பிரகாரத்திலுள்ள மற்ற பாதங்கள், முளைகள், கயிறுகள், அவற்றுக்கான சகல கருவிகள் ஆகியவற்றையும் சுமக்க வேண்டும். அதோடு, அதைச் சார்ந்த அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். அவர்களின் பெயரைப் பட்டியலிட்டு, ஒவ்வொருவரிடமும் அவர்கள் எதைச் சுமந்து செல்ல வேண்டும் என்பதையும் சொல்லுங்கள்.
33. இவைதான் மெராரி வம்சத்தினர் ஆசரிப்புக் கூடாரத்திற்காகச் செய்ய வேண்டிய பணிகளாகும். ஆசாரியனான ஆரோனின் மகனாகிய இத்தாமார் இதற்கான பொறுப்புடையவன்” என்றார்.
லேவியர் குடும்பங்கள்
34. கோகாத்தியர்களையும், மற்ற இஸ்ரவேல் தலைவர்களையும் மோசேயும் ஆரோனும் எண்ணிக் கணக்கிட்டனர். அவர்களைக் குடும்ப வாரியாகவும், கோத்திரங்கள் வாரியாகவும் கணக்கிட்டனர்.
35. படையில் பணியாற்றக்கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்கள் அனைவரையும் அவர்கள் கணக்கிட்டனர். இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு வேலைகளைச் செய்யும்படி நியமிக்கப்பட்டனர்.
36. கோகாத்திய கோத்திரத்தில் 2,750 ஆண்கள் இவ்வேலையைச் செய்ய தகுதியுடையவர்களாக இருந்தனர்.
37. எனவே, ஆசரிப்புக் கூடாரத்திற்க்கான சிறப்பு வேலைகளைச் செய்ய கோகாத்திய கோத்திரத்தினர் நியமிக்கப்பட்டனர். கர்த்தர் மோசேயிடம் சொன்னபடியே, மோசேயும், ஆரோனும் இதனைச் செய்தனர்.
38. கெர்சோனிய கோத்திரத்தினரும் எண்ணி கணக்கிடப்பட்டனர்.
39. படையில் பணியாற்றும் தகுதியுடைய 30 முதல் 50 வயது வரையுள்ள ஆண்கள் எண்ணப்பட்டனர். அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்டனர்.
40. கெர்சோன் கோத்திரத்தில் தகுதி கொண்டவர்களாக 2,630 ஆண்கள் இருந்தனர்.
41. எனவே, கெர்சோன் கோத்திரத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, ஆசரிப்புக் கூடாரத்தின் சிறப்பு வேலைகள் கொடுக்கப்பட்டன. கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி மோசேயும், ஆரோனும் செய்து முடித்தனர்.
42. மெராரி குடும்பத்திலும், கோத்திரங்களிலும் உள்ள ஆண்கள் கணக்கிடப்பட்டனர்.
43. அவர்களில் படையில் பணியாற்றக்கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்கள் அனைவரும் எண்ணப்பட்டனர். அந்த ஆண்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்கான சிறப்பு வேலைகளைச் செய்ய நியமிக்கப்பட்டனர்.
44. மெராரி கோத்திரத்தில் தகுதி கொண்டவர்களாக 3,200 ஆண்கள் இருந்தனர்.
45. எனவே, மெராரி கோத்திரத்தில் உள்ள இந்த ஆண்கள், இச்சிறப்பு வேலைகளுக்கு நியமிக்கப்பட்டனர். கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி மோசேயும் ஆரோனும் செய்து முடித்தனர்.
46. எனவே மோசே, ஆரோன், இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் ஆகியோர் லேவியரின் கோத்திரத்தில் உள்ளவர்களையும் எண்ணிக் கணக்கிட்டனர். அவர்கள் ஒவ்வொரு குடும்பவாரியாகவும், கோத்திர வாரியாகவும் கணக்கிடப்பட்டனர்.
47. படையில் பணியாற்றக் கூடிய 30 முதல் 50 வயதுவரையுள்ள ஆண்களும் எண்ணிக் கணக்கிடப்பட்டனர். இவர்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்தின், சிறப்பு வேலைகள் தரப்பட்டன. அவர்கள் தங்கள் பயணத்தின்போது, ஆசரிப்புக் கூடாரத்தைச் சுமக்கும் வேலையைச் செய்தனர்.
48. அவர்களின் மொத்த எண்ணிக்கை 8,580.
49. எனவே, கர்த்தர் மோசேயிடம் சொன்னப்படி, ஒவ்வொரு ஆண்மகனும், கணக்கிடப்பட்டான். ஒவ்வொருவனுக்கும் அவன் செய்யவேண்டிய வேலை ஒதுக்கப்பட்டது. அவன் எதனைச் சுமந்து செல்லவேண்டும் என்பதும் சொல்லப்பட்டது. இவை யாவும் கர்த்தர் கட்டளையிட்டபடியே நடைபெற்றது.
எண்ணாகமம் அதிகாரங்கள்:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36