சுத்தப்படுத்துவதைப் பற்றிய விதிமுறைகள்

1. கர்த்தர் மோசேயிடம்,

2. “நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளையிடுவதாவது: அவர்கள் தங்கள் முகாம்களை நோய்கள் பரவாதபடி வைத்துக்கொள்ளவேண்டும். அவர்களில் யாராவது ஒருவனுக்குத் தொழுநோய் இருந்தால், அவனை முகாமை விட்டு அனுப்பிவிட வேண்டும் என்று சொல். முகாமில் யாருக்காவது (இரத்தப் போக்கான) விலக்கு தீட்டு இருந்தால் அவர்களையும் அனுப்பிவிட வேண்டும் என்று சொல். முகாமில் யாராவது பிணத்தைத் தொட்டு அதனால் தீட்டாகியிருந்தால் அவனையும் வெளியே அனுப்பி விடவேண்டும்.

3. ஆணா, பெண்ணா என்பது பற்றிக் கவலைப்படாமல் அந்த நபரை வெளியேற்ற வேண்டும். அதனால் மற்றவர்களுக்கு அந்த நோயும், தீட்டும் ஏற்படாமல் இருக்கும். நானும் உங்கள் முகாமில் உங்களோடு வாழ்வேன்” என்றார்.

4. எனவே இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் இத்தகையவர்களை முகாமைவிட்டு வெளியேற்றினர். கர்த்தர் மோசேயிடம் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தனர்.

தவறுக்குச் செலுத்தும் அபராதம்

5. கர்த்தர் மோசேயிடம்,

6. “இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவன் இன்னொருவனுக்குத் தீமை செய்திருந்தால் (ஒருவன் இன்னொருவனுக்குத் தீமை செய்வது என்பது உண்மையில் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்வதாகும்) அவன் தண்டனைக்கு உரியவன்.

7. எனவே அவன் தான் செய்த பாவத்தைப் பற்றி ஜனங்களிடம் சொல்ல வேண்டும். பின் அதற்கான அபராதத் தொகையையும் செலுத்த வேண்டும். அதில் ஐந்தில் ஒரு பாகத்தையும் சேர்த்து பாதிக்கப்பட்டவனுக்குக் கொடுக்கவேண்டும்.

8. பாதிக்கப்பட்டவன் ஒருவேளை மரித்து போயிருந்தாலோ, அத்தொகையை ஏற்றுக்கொள்ள அவனுக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாமலிருந்தாலோ, அவன் அத்தொகையை கர்த்தருக்குச் செலுத்த வேண்டும். அவன் அம்முழுத்தொகையையும் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். அந்த ஆசாரியன் அவனது பாவநிவிர்த்திக்காக ஆட்டுக் காடாவை பலியாகச் செலுத்த வேண்டும். அதனைப் பலியிடுவதன் மூலம் ஜனங்கள் செய்த பாவமானது நிவிர்த்தி செய்யப்படுகிறது. மீதி பணத்தை, ஆசாரியன் வைத்துக்கொள்ள வேண்டும்.

9. “இஸ்ரவேலனாக இருக்கும் ஒருவன் தேவனுக்கு இதுபோல் சிறப்பான அன்பளிப்புகளைச் செலுத்தினால் ஆசாரியன் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அது அவனுக்கு உரியது.

10. ஒருவன் இது போன்ற சிறப்பு காணிக்கைகளை கொடுக்காமலும் இருக்கலாம். ஆனால் ஆசாரியனுக்குக் கொடுக்கப்பட்ட எதுவும் அவனுக்கு உரியதாகிவிடும்” என்று கூறினார்.

சந்தேகம்கொள்ளும் கணவர்கள்

11. கர்த்தர் மோசேயிடம்,

12. “ஒருவனின் மனைவி அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கலாம்.

13. அவள் இன்னொருவனோடு பாலின உறவு வைத்துக்கொண்டு அதனைக் கணவனுக்குத் தெரியாமல் மறைத்துவிடலாம். அவள் தனது செயலில் பிடிபடாமல் அவளுக்கு எதிராக எந்த சாட்சியும் இல்லாமல் இருக்கலாம். எனவே, அவள் செய்த பாவம் அவளது கணவனுக்குத் தெரியாமல் போய்விடலாம். அவளும் தன் கணவனுக்குத் தன் பாவம் பற்றி சொல்லாமல் இருக்கலாம்.

14. ஆனால், அவளது கணவன் தனது மனைவி தனக்குத் துரோகம் செய்கிறாளோ என்று சந்தேகப்படலாம். அவள் தனக்கு உண்மையானவளாகவும், சுத்தமானவளாகவும் இல்லை என்று அவன் நினைக்கலாம்.

15. இவ்வாறு நிகழ்ந்தால், அவன் தன் மனைவியை ஆசாரியனிடம் அழைத்துச் செல்லவேண்டும். அப்போது, அவன் காணிக்கையாக ஒரு எப்பா அளவான வாற் கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைக் கொடுக்க வேண்டும். அவன் அந்த வாற்கோதுமை மாவிலே எண்ணெயோ, நறுமணப் பொருளோ போடக்கூடாது. இது கர்த்தருக்குத் தானிய காணிக்கையாக இருக்கும். கணவன் சந்தேகம் அடைந்ததால் அதற்குப் பரிகாரமாக இப்பலி அமைகின்றது. தனது மனைவி தனக்கு உண்மையில்லாதவளாக இருந்தாள் என்று அவன் எண்ணியதை இப்பலி காட்டும்.

16. “ஆசாரியன் அந்தப் பெண்ணை கர்த்தரின் முன்பு அழைத்துக்கொண்டு போய் அங்கே அவளை நிறுத்தி,

17. பிறகு ஆசாரியன் பரிசுத்த தண்ணீரை எடுத்து மண்ஜாடியில் ஊற்ற வேண்டும். பின் பரிசுத்தக் கூடாரத்தின் தரையிலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து, அப்பாத்திரத்தில் போட வேண்டும்.

18. ஆசாரியன் அவளை கர்த்தர் முன் நிற்குமாறு செய்து பிறகு அவளது கூந்தலை அவிழ்க்கச் சொல்லி, அவள் கையில் தானியக் காணிக்கையை வைக்க வேண்டும். இப்பலி, அவளது கணவனால் அவனது சந்தேகத்திற்காக கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட காணிக்கையாகும். அதே நேரத்தில் ஆசாரியன் தன் கையில் பரிசுத்த தண்ணீர் இருக்கும் மண் ஜாடியை வைத்திருக்க வேண்டும். அந்த பரிசுத்த தண்ணீர் அவள் பாவம் செய்திருந்தால் அவளுக்கு சாபத்தை உண்டாக்கும்.

19. “பிறகு, ஆசாரியன் அந்தப் பெண்ணிடம் அவள் பொய் சொல்லக்கூடாது என்றும், அவள் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றும் கட்டளையிட வேண்டும். ஆசாரியன் அவளிடம், ‘நீ இன்னொரு மனிதனோடு தொடர்பு வைக்காமல் இருந்திருந்தால், திருமணத்துக்கு பின் உன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்யாமல் இருந்திருந்தால், சாபங்களைக் கொடுக்கும் இந்த தண்ணீரானது உனக்குத் தீங்கு செய்யாது.

20. ஆனால் நீ உன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால், உன் கணவன் அல்லாத ஒருவனுடன் நீ தொடர்பு வைத்திருந்தால், நீ தூய்மையானவளல்ல.

21. இது உண்மையென்றால், இந்த பரிசுத்தமான தண்ணீரை நீ குடிப்பதால் உனக்குத் துன்பங்கள் வரும். உனக்குக் குழந்தை பெறுகிற பாக்கியம் கிடைக்காமல்போகும். ஒருவேளை நீ இப்பொழுது கருவுற்றவளாக இருந்தால் அக்குழந்தை மரித்துப்போகும். பிறகு உன் ஜனங்கள் உன்னை விலக்கி வைத்து, உன் மீது குற்றங்களைச் சுமத்துவார்கள்’ என்று கூறவேண்டும். “பிறகு கர்த்தருக்கு முன்பு ஒரு விசேஷ உறுதியளிக்கும்படி அப்பெண்ணிடம் ஆசாரியன் சொல்ல வேண்டும். பொய் சொன்னால் அவளுக்குத் தீமைகள் ஏற்படும் என்பதை அவள் உணரச் செய்ய வேண்டும்.

22. நீ கேடு உண்டாக்கக் கூடிய தண்ணீரைக் குடிக்க வேண்டும். நீ பாவம் செய்திருந்தால், ‘உனக்குக் குழந்தை ஏற்படாமல் போகும். நீ கருவுற்றிருந்தால் அது பிறக்குமுன் மரித்துப்போகும்’ என்று ஆசாரியன் அப்பெண்ணிடம் கூறவேண்டும். அதற்கு அவள், ‘நீர் சொல்கிறபடி நான் செய்வேன்’ என்று கூற வேண்டும்.

23. “இந்த எச்சரிக்கைகளையெல்லாம் ஒரு நீண்டத் தோல் சுருளில் ஆசாரியன் எழுதி வைக்க வேண்டும். அதனைப் பிறகு பரிசுத்தத் தண்ணீரால் சிறிது கழுவ வேண்டும்.

24. பின்னர் கேடு தருகிற அந்தத் தண்ணீரை அவள் குடிக்க வேண்டும். அதைக் குடித்ததும், அவள் பாவம் செய்தவளாக இருந்தால் அத்தண்ணீர் அவளுக்குப் பெருந்துன்பத்தைத் தரும்.

25. “பிறகு ஆசாரியன் அவள் கையில் உள்ள தானியக் காணிக்கையை வாங்கி அதனை கர்த்தரின் சமூகத்தில் தூக்கிப் பிடிக்க வேண்டும். பின் அதனைப் பலிபீடத்தில் வைக்க வேண்டும்.

26. ஆசாரியன் அத்தானியப் பலியைக் கை நிறைய அள்ளி பலிபீடத்தின் நெருப்பில் போட்டு எரிந்துவிட வேண்டும். அதற்குப் பிறகு ஆசாரியன் அவள் தண்ணீரைக் குடிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.

27. அவள் தன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்தவளாக இருந்தால், அந்த தண்ணீர் அவளுக்குப் பெருந்துன்பத்தை அளிக்கும். அத்தண்ணீர் அவள் உடம்புக்குள் சென்று அவளுக்குப் பெருந்துன்பத்தைக் கொடுக்கும். அவள் கருவிலுள்ள எந்தக் குழந்தையும், அது பிறக்கு முன்னரே மரித்துப்போகும். அவள் என்றென்றும் குழந்தை பெற முடியாமல் இருப்பாள். அவள் அவளது ஜனங்களின் மத்தியில் சபிக்கப்பட்டவளாக இருப்பாள்.

28. ஆனால் அவள் தன் கணவனுக்கு எதிராகப் பாவம் செய்யாமல், சுத்தமானவளாக இருந்தால், ஆசாரியன் அவளைக் குற்றமற்றவள் என்று கூறுவான். பின் அவள் சாதாரணமானவளாக குழந்தைகளைப் பெறுவாள்.

29. “இதுவே பொறாமை அல்லது சந்தேகம் பற்றிய சட்டமாகும். ஒருத்தி ஒருவனுக்குத் திருமணத்தின் மூலம் மனைவியான பிறகு, அவனுக்கு எதிராகப் பாவம் செய்தால், நீங்கள் இதையே செய்ய வேண்டும்.

30. ஒரு கணவன் தன் மனைவி மீது பொறாமை கொண்டு அவளைச் சந்தேகப்பட்டாலும், அவன் இந்தப் பரிகாரத்தையே செய்ய வேண்டும். ஆசாரியன் அந்தப் பெண்ணை கர்த்தரின் முன்னிலையில் நிற்கச் செய்து இவற்றையெல்லாம் செய்ய வேண்டும். இதுதான் சட்டம்.

31. அவள் தவறினிமித்தம் அவள் கணவனுக்கு எதுவும் நேரிடாது. ஆனால் அந்தப் பெண்ணோ தன் பாவத்தினிமித்தம் துன்பப்படுவாள்” என்று கூறினார்.

எண்ணாகமம் அதிகாரங்கள்:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

(Visited 7 times, 1 visits today)