நசரேயர்கள்
1. கர்த்தர் மோசேயிடம்,
2. “இவற்றை இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தன் ஜனங்களிடமிருந்து தனியே பிரிந்து வாழ வேண்டும் என்று விரும்பலாம். இந்த விரதகாலம் ஒருவன் தன்னையே முழுக்க கர்த்தருக்கு சில காலம் ஒப்படைத்துக்கொள்ள அனுமதிக்கிறது. இத்தகையவனை ‘நசரேயன்’ என அழைப்பார்கள்.
3. இக்காலக் கட்டத்தில், அவன் திராட்சைரசமோ, போதை தரும் வேறு பானமோ குடிக்கக் கூடாது. அவன் திராட்சைரசம் மற்றும் மதுபானத்தின் காடியையோ குடிக்கக் கூடாது. திராட்சைரசத்தால் செய்த எவ்வித பானத்தையோ திராட்சைப் பழங்களையோ, காய்ந்த திராட்சைகளையோ உண்ணாமல் இருக்க வேண்டும்.
4. இந்த விரத காலத்தில் அவன் திராட்சைச் செடியின் எந்த உணவுப் பொருட்களையும், உண்ணக் கூடாது, அவன் திராட்சைப் பழத்தின் தோலையும் விதைகளையும் கூட உண்ணக்கூடாது.
5. “இந்த விரதகாலத்தில் அவன் தனது தலை முடியைக் கூட வெட்டிக் குறைத்துக்கொள்ளக் கூடாது. தனது விரத நாட்கள் முடியும் வரையில் அவன் பரிசுத்தமாக இருக்க வேண்டும். அவன் தன் தலைமுடியை வளரவிட வேண்டும். அவனது தலை முடியானது அவன் தேவனுக்குச் செய்த பொருத்தனையின் ஒரு பகுதியாகும். அவன் அந்த முடியை வெட்டாமலிருப்பது தேவனுக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பதின் அடையாளம். எனவே விரதகாலம் முடிகிறவரை தனது தலைமுடியை நீளமாக வளரவிட வேண்டும்.
6. “இவ்விரதக் காலத்தில் ஒரு நசரேயன் பிணத்தின் அருகில் செல்லக்கூடாது. ஏனென்றால் அவன் கர்த்தருக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இருக்கிறான்.
7. ஒரு வேளை அவனது தாயோ, தந்தையோ, அல்லது சகோதரனோ, சகோதரியோ கூட மரித்து போயிருக்கலாம். எனினும் அவன் அவர்களைத் தொடக் கூடாது. அது அவனைத் தீட்டு உள்ளவனாக ஆக்கும். அவன் தன்னைத் தனிப்பட்டவன் என்றும், தன்னை தேவனுக்கு முழுமையாகக் கொடுத்திருக்கிறான் என்பதையும் காட்ட வேண்டும்.
8. விரதகாலம் முழுமைக்கும் அவன் தன்னை முழுவதுமாக கர்த்தரிடம் ஒப்படைக்கிறான்.
9. நசரேய விரதம் கொள்பவன், இன்னொருவனோடு இருக்கும்போது, தீடீரென்று அந்த மற்றவன் மரித்துப் போனதாக வைத்துக்கொள்வோம். அவனையறியாமலேயே மரித்தவனைத் தொட்டிருப்பானேயானால், அவன் தீட்டுள்ளவனாகக் கருதப்படுகிறான். இவ்வாறு நிகழ்ந்தால் அவன் தலைமுடியை முழுக்க மழித்துக்கொள்ள வேண்டும். (அந்தத் தலை முடியானது அவனது விசேஷ அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும்.) ஏழாவது நாள் தன் முடியை வெட்டிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அன்றைக்குத்தான் அவன் தீட்டு இல்லாதவனாகிறான்.
10. எட்டாவது நாள், நசரேய விரதம் கொள்ளும் அவன், இரண்டு புறாக்களையும் இரண்டு புறாக் குஞ்சுகளையும் ஆசாரியனிடம் கொண்டுவரவேண்டும். அவன் இவற்றை ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும்.
11. பிறகு ஆசாரியன் அவற்றில் ஒன்றைப் பாவப்பரிகாரப் பலியாகவும் இன்னொன்றைத் தகன பலியாகவும் தரவேண்டும். இந்த தகனபலியானது நசரேய விரதத்தில் அவன் செய்த பாவத்திற்குரிய காணிக்கையாகும். (அவன் பிணத்தின் அருகில் இருந்ததால் பாவம் செய்தவனாகக் கருதப்படுகிறான்.) அந்த வேளையில், அவன் தன் தலைமுடியை மீண்டும் தேவனுக்கு தருவதாக வாக்களிக்க வேண்டும்.
12. அவன் மீண்டும் ஒருமுறை கர்த்தருக்காகத் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்து தனியாக சில காலம் நசரேய விரதம் இருக்க வேண்டும். அவன் ஓராண்டான ஆட்டுக் குட்டியைக் கொண்டு வந்து அதை குற்ற பரிகார பலியாகக் கொடுக்க வேண்டும். அவன் விரதம் இருந்த நாட்களெல்லாம் மறக்கப்படும். எனவே, அவன் புதிதாக விரதம் அனுசரிக்க வேண்டும். அவன் முதலில் விரதம் இருக்கும்போது, பிணத்தைத் தொட்டதினால் தீட்டானதே இதற்குக் காரணம்.
13. “அவனது விரதகாலம் முடிந்தபிறகு, ஒரு நசரேயன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குப் போக வேண்டும்.
14. அவன் தனது காணிக்கையை கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும். அவன்: தகன பலிக்காக ஒரு வயதான, எவ்விதக் குறைபாடும் இல்லாத ஆட்டுக்குட்டியையும்; பாவப்பரிகார பலிக்காக ஒரு வயதான, குறைபாடுகளற்ற ஒரு பெண் ஆட்டுக்குட்டியையும், சமாதான பலிக்காக குறைபாடுகளற்ற ஆட்டுக் கடாவையும்,
15. தானிய காணிக்கைக்காக கூடை நிறைய எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவில் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும் காணிக்கையாக செலுத்த வேண்டும்.
16. “இவை அனைத்தையும் கர்த்தருக்கு ஆசாரியன் கொடுக்கவேண்டும். பிறகு, அவன் பாவப் பரிகார பலியையும், தகன பலியையும் செலுத்த வேண்டும்.
17. புளிப்பில்லாத அதிரசங்கள் நிறைந்த கூடையை கர்த்தருக்கு ஆசாரியன் கொடுக்க வேண்டும். சமாதான பலிக்காக அவன் ஆட்டுக் கடாவைக் கொல்ல வேண்டும். பிறகு அவன் தானிய காணிக்கையையும், பானங்களின் காணிக்கையையும் அளிக்க வேண்டும்.
18. “நசரேய விரதம் கொண்டவன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் செல்ல வேண்டும். அவன் அங்கே கர்த்தருக்காக வளர்த்த தலை முடியை மழித்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனை சமாதானப் பலிக்குக் கீழ் நெருப்பில் போட்டு எரிக்க வேண்டும்.
19. “நசரேய விரதம் கொண்டவன், தன் தலை முடியை மழித்தபிறகு ஆசாரியன் வேகவைத்த ஆட்டுக்கடாவின் தோள்பாகத்தையும், கூடையில் உள்ள புளிப்பில்லாத அதிரசம் மற்றும் அடையையும் அவனுடைய உள்ளங்கையில் வைக்க வேண்டும்.
20. பின்னர் ஆசாரியன் இவற்றை கர்த்தருக்கு முன் அசைவாட்டும் பலியாக ஏறெடுக்க வேண்டும். அது அசைவாட்டப்பட்ட மார்க்கண்டத்தோடும், ஏறெடுத்துப் படைக்கப்பட்ட முன்னந்தொடையோடும் ஆசாரியனுக்கு உரியதாகும். ஆட்டுக் கடாவின் மார்க்கண்டத்தையும், தொடையையும் கர்த்தருக்கு முன்பு அசைவாட்டும் பலி செய்வார்கள். அவைகளும் ஆசாரியனுக்கு உரியதாகும். அதற்குப் பிறகு நசரேய விரதம் கொண்டவன், திராட்சை ரசம் குடிக்கலாம்.
21. “நசரேய விரதம் கொள்ளும் ஒருவன், கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவையாகும். அவன் அனைத்து அன்பளிப்புகளையும் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் ஒருவன் மிக அதிக அளவில் கர்த்தருக்கு அன்பளிப்பு தரும் வசதியைக் கொண்டிருக்கலாம். ஒருவன் அவ்வாறு மிகுதியாக அன்பளிப்பு கொடுப்பதாக வாக்குத்தந்தால் பிறகு அந்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் அவன் குறைந்தபட்சமாக நசரேய விதிகளில் சொல்லியபடியாவது காணிக்கை செலுத்த வேண்டும்” என்றார்.
ஆசாரியனின் ஆசீர்வாதங்கள்
22. கர்த்தர் மோசேயிடம், 23 “ஆரோனிடமும் அவனது மகன்களிடமும், சொல்ல வேண்டியதாவது: நீங்கள் இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்போது,
24. “‘கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காப்பாற்றுவாராக!
25. கர்த்தர் உன்னிடம் நல்லவராக இருந்து அவர் உனக்குக் கருணை காட்டுவாராக!
26. உனது ஜெபங்களுக்கு கர்த்தர் பதில் தருவாராக! அவர் உனக்குச் சமாதானத்தைத் தருவாராக!’ என்று சொல்லுங்கள்” என்றார்.
27. “இவ்வாறு ஆரோனும், அவனது மகன்களும் எனது நாமத்தைச் சொல்லி இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டும். நானும் அவர்களை ஆசீர்வதிப்பேன்” என்று கூறினார்.
எண்ணாகமம் அதிகாரங்கள்:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36