என்ன கொடுப்பேன் என் இயேசுவுக்கு

யூத சிறுமி ஒருத்தி, ஒரு கிறிஸ்தவ கூட்டத்திற்குச் சென்று இரட்சிக்கப்பட்டாள். தான் பெற்ற இரட்சிப்பின் சந்தோஷத்தை அடக்கமுடியாமல் தன் பெற்றோருக்கும் வந்து சொன்னாள். தகப்பனின் முகம் கொடூரமானது. கோபத்தை கொப்பளித்து, கிறிஸ்துவை மறுதலிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டாள். அவளோ தனது விசுவாசத்தில் உறுதியாயிருந்தாள். இதைக்கண்டு சகிக்க முடியாத அவ்வைராக்கியமான யூத தகப்பன் தன் மகளை இரத்தம் வடியுமளவிற்கு அடித்தான்.

அவள் ஆடைகள் இரத்தத்தால் கறையானது. காயத்தின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டாள். ஒரு நாள் தன் தாயை அழைத்தாள். தான் அடிபட்டபோது அணிந்திருந்த ஆடையையும் ஒரு கத்தரிக்கோலையும் எடுத்து தரும்படி கேட்டுக்கொண்டாள். ‘இது எதற்கு மகளே’ என்று தாய் கேட்டபோது, ‘அம்மா என் ஆடையில் இரத்த கறைபட்ட இடத்தை வெட்டி எடுத்துக்கொண்டு அதை ஆண்டவரிடம் கொடுத்து, நானும் உமக்காக இரத்தம் சிந்தினேன்’ என்பேன் என்று புன்னகையோடு சொல்லி தன் கண்களை மூடினாள்.

நண்பர்களே! கிறிஸ்துவுக்காக நாம் எதை இழந்துள்ளோம்? என்ன தியாகம் செய்துள்ளோம்? அப்படியே நாம் செய்த சிறு சிறு தியாக செயல்களையும் பிறர் பார்த்து மெச்ச வேண்டும் என்று எண்ணுகிறோமா? அல்லது இந்த சிறு பிள்ளையைபோல இயேசுவிடம் காட்டுவேன் என்ற கபடற்ற எண்ணம் நம்மிடம் உண்டா? பொதுவாகவே, கிறிஸ்து நமக்காக பெரிய, அற்புதமான, அதிசயமான காரியங்களை செய்து கொண்டேயிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். ஆனால் அதே வேளையில் கிறிஸ்துவுக்காக நம் திராணியை மிஞ்சி பெரிய காரியங்களை செய்ய முற்படுவதில்லை.

நம்முடைய ஒரு பிள்ளையை கிறிஸ்துவின் பணிக்கென மனப்பூர்வமாய் அர்ப்பணிக்கிறோமா? இந்த விஷயத்தில் உறவினர்கள், சுற்றியுள்ளோரின் ஏளன பார்வையை கிறிஸ்துவினிமித்தம் மேன்மையாக எண்ணும் மனநிலை நம்மிடம் உண்டா? கிறிஸ்துவின் பணிக்காக தசம பாகத்தை மட்டும் கணக்கு பார்த்து கொடுக்கிறோமா அல்லது கணக்கற்ற அன்பை நம்மேல் பொழிந்தவருக்கு திராணிக்கு மிஞ்சியும் தியாகமாய் கொடுக்கிறோமா? நமது மனநிலை எப்படியிருக்கிறது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு கட்டம் போட்டுக்கொண்டு அதற்குள் வாழும் கிறிஸ்தவ வாழ்வைவிட்டு விடுவோம். ‘திராணிக்கு மிஞ்சி’ ‘தியாகம்’ என்ற வார்த்தைகளை நம் வாழ்வில் அப்பியாசிப்போம்;. நம் மனதின் எல்லை கோட்டைத் தாண்டி சமூகத்தால் பாவி என்று புறக்கணிக்கப்பட்டவர்ளை நேசிப்போம். அத்தியாவசிய தேவை ஒன்றை குறைத்து, அந்தப் பணத்தை தேவனுக்கு கொடுப்போம்.

பெலவீனத்தைப் பொருட்படுத்தாமல், மனரம்மியமாய் ஊழியத்தை செய்வோம். கிறிஸ்துவுக்காக தியாகம் செய்ய தயங்கவேண்டாம். நமக்காக தன் உயிரையே கொடுத்த அவருக்காக, நாம் என்ன செய்யப் போகிறோம்? தியாகமற்ற ஒரு சாதாரணமான கிறிஸ்தவ வாழ்வை நாம் வாழ்ந்து முடிக்கவேண்டாம். கிறிஸ்துவின் மேலுள்ள அன்பினால் நம்மை சுட்டெரிக்கப்படவும் ஒப்புக்கொடுக்கும் ஒரு அசாதாரண வாழ்வுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். ஆமென்.

உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம் (ரோமர் 8:35)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 4 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *