கர்த்தரின் கரத்தில் நம் காலங்கள்

ஆந்திராவில் மிகவும் கஷ்டப்படுகிற ஏழைக்குடும்பம் ஒன்று இருந்தது. அந்த குடும்பத்தில் ஒரு வாலிபனுக்கு மட்டும் இங்கிலாந்து நாட்டுக்கு சென்று வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பல வருடங்கள் கழித்து திரும்பவும் தனது சொந்த ஊராகிய ஆந்திராவுக்கு வந்தான். ஆனால் அவரது குடும்பத்தினர் யாரும் அந்த ஊரில் இல்லை. தனிமை உணர்வு அவனுக்கு வாழ்க்கையின் மீது மிகுந்த கசப்பையும் வெறுப்பையும் கொடுத்தது. எனவே பக்கத்தில் உள்ள ஒரு காட்டிற்கு சென்று ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்யும் முடிவோடு சென்றான்.

கழுத்தில் தூக்கு கயிறை மாட்டி, கயிற்றில் அவர் உடம்பு தொங்க ஆரம்பித்தது. சில நொடிகளில் குதிரையில் அந்த காட்டு பக்கம் ஒரு ஜமீன் வந்தார். ஆள் நடமாட்டமே இல்லாத அந்த காட்டுப்பகுதியில் எதிர்பாராதவிதமாக வந்து கயிற்றில் தொங்கி கொண்டிருந்த அவன் உயிரை காப்பாற்றினார். பின்பு ஊருக்குள் வந்து வேலை செய்து பிழைக்க ஆரம்பித்தான். இந்த சயமத்தில் சபை போதகர் ஒருவருடன் இவனுக்கு நெருங்கிய சிநேகம் கிடைத்தது.

அவர் மூலமாக ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கொடுக்கிற பாவமன்னிப்பையும் இரட்சிப்பையும் பெற்று கொண்டு கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்க்கை வாழ ஆரம்பித்தான். திருமணம் செய்யாமல் தன்னுடைய வாழ்க்கையில் வேலை நேரம் போக மீதி நேரமெல்லாம் போதகருடன் ஊழியத்தில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள ஆரம்பித்தான்.

வருடங்கள் ஓடியது. இப்பொழுது அந்த வாலிபன் வயதான முதியவராய் ஆகி இருந்தார். அவருக்கு குறிப்பிட்ட அளவு சொத்து இருந்தது. ஆனால் அவருக்குப்பின் அதை அனுபவிக்க குடும்ப உறவுகள் யாரும் இல்லை. இதை அறிந்த ஒரு வாலிபன் ஒரு நாள் காலையில் அவரை தந்திரமாக ஒரு குறிப்பிட்ட பாழடைந்த கிணற்றிக்கு அழைத்து சென்றான்.

அவர் எதிர்ப்பாராத நேரத்தில் அவரை அந்த கிணற்றிற்குள் தள்ளிவிட்டு ஓடி விட்டான். உள்ளே விழுந்த அந்த முதியவர் கிணற்றிற்குள் இருந்த ஒரு மரக்கிளையை பிடித்து தொங்கினார். காலையில் இருந்து மாலை வரை இடையிடையே ‘என்னை காப்பாற்றுங்கள்’ என்று சத்தமிட்டு கொண்டே இருந்தார். நேரமாக நேரமாக அவருக்கு நம்பிக்கை குறைந்து இனி யாரும் காப்பாற்ற வரமாட்டார்கள் என்று வேதனைப்பட ஆரம்பித்தார்.

இருந்தாலும் இன்னும் சிறிது நேரம் கூப்பிட்டு பார்ப்போம் என்று மறுபடியும் சத்தம் போட ஆரம்பித்தார். காத்தருடைய பெரிதான கிருபையால் இந்த முறை அந்த கிணற்றை கடந்து போன ஒருவருடைய காதில் அவருடைய சத்தம் விழுந்தது. கிணற்றை எட்டி பார்த்த அவர் அந்த முதியவருடைய பரிதாப நிலையை பார்த்து வேகமாக ஊருக்குள் சென்று ஏராளமான ஜனங்களை அழைத்து சென்று அந்த முதியவரை காப்பாற்றினார்.

பின்பு அந்த முதியவரை கிணற்றில் தள்ளிவிட்ட வாலிபனை ஊரார் எல்லாரும் சேர்ந்து உதை உதை என்று உதைத்தனர். இன்றைக்கும் அந்து முதியவர் எண்பது வயது நிறைந்தவராக பல மாநிலங்களுக்கு ஊழியத்திற்கு கர்த்தருடைய கிருபையால் கடந்து செல்கிறார். இவ்வாறு தமிழ் நாட்டில் ஒரு கூட்டத்தில் அவர், தேவன் எப்படி இரண்டு முறை மரணத்தில் இருந்து தன்னை காப்பாற்றினார் என்பதையும், இன்னமும் ஆண்டவர் தன்னை கொண்டு என்ன செய்ய முன்குறித்திருக்கிறாரோ அதை செய்து முடிக்கும் வரைக்கும் மரணம் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும், ஏனென்றால் தன்னுடைய காலங்கள் கர்த்தரின் கரத்தில் இருக்கிறது எனவும் பகிர்ந்து கொண்டார்.

ஆம் பிரியமானவர்களே, நம் ஒவ்வொருவருக்கும் இந்த சத்தியம் ஆழமாய் நம் இருதயத்தில் பதிந்திருக்க வேண்டும். என் காலங்கள் கர்த்தரின் கரத்தில் இருக்கிறது என்ற நம்பிக்கை நம்மை இன்னும் தைரியமாய் வாழ வைக்கும்.

ஒரு முறை அகஸ்டின் ஜெபக்குமார் அண்ணன் அவர்களிடம், ‘மிகவும் தைரியமாக அரசியல் வாதிகளை பற்றியும், மற்ற காரியங்களை குறித்தும் பயப்படாமல் பேசுகிறீர்களே, உங்களை தாக்குவார்கள், கொலை மிரட்டல்கள் எல்லாம் செய்வார்களே’ என்று கேட்டபோது, ‘எனக்கு அதிகமுறை கொலை மிரட்டல்கள் வந்திருக்கிறது, என் மனைவியிடம் டெலிபோனிலும் மிரட்டி இருக்கிறார்கள், மனைவி சொல்வார்களாம், உங்களால் முடிந்தால் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி போனை வைத்து விடுவார்களாம், என் காலங்கள் கர்த்தரின் கரத்தில் இருக்கிறது, என் காலம் முடியும்வரை என்னை இரயில் தண்டவாளத்தில் போட்டாலும் மரிக்க மாட்டேன்’ என்று சிரித்து கொண்டே சொன்னார்கள்.

ஆம், கர்த்தர் உங்களை கொண்டு துவங்கியதை உங்ளை கொண்டு தான் முடிப்பார். அதுவரை மரணமோ, பிசாசோ ஒன்றும் உங்களை எதுவும் செய்ய முடியாது, கொள்ளை நோய்களோ, பிசாசின் தந்திரங்களோ நம்மை ஒன்றும் அணுக முடியாது. ஏனென்றால் நம்முடைய காலங்கள் கர்த்தரின் கரத்தில் இருக்கிறது. அந்த நம்பிக்கை இல்லாதவர்கள்தான் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று கவலைப்பட்டு, தங்கள் கைகளை ஜோசியரிடமும், சபைக்கு வருகிற ஒவ்வொரு ஊழியக்காரர்களிடமும் போய், ‘ஐயா எனக்காக, என் எதிர்காலத்திற்காக ஜெபியுங்கள்’ என்று கேட்பார்கள்.

ஆனால் நாமோ அப்படியல்ல, நம்முடைய காலங்கள் கர்த்தரின் கரத்தில் இருப்பதால் எந்த கவலையும் இல்லாதவர்களாக கர்த்தர் கொடுக்கும் காலம் வரைக்கும் அவருக்காக வாழ்வோம். ஆமென் அல்லேலூயா!

நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன். என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும் (சங்கீதம் 31:14-15)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 7 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *