கர்த்தரையே சார்ந்து கொள்ளுதல்

ஒரு சிறு பெண் தன் தாயிடம் வந்து, ‘அம்மா பாருங்கள், எனக்கு எல்லாம் ஒன்றும் சரியாகவே நடக்கவில்லை, கிளாஸில் டீச்சர் சொல்லி கொடுக்கிற அல்ஜீப்ரா பாடம் மனதில் பதிய மாட்டேன் என்கிறது, அதனால் பரிட்சையில் பெயில் ஆகி விட்டேன். என் அன்பு தோழி என்னை விட்டு விட்டு வேறு ஒருத்தியுடன் பிரண்ட் ஆகி விட்டாள், ஏனம்மா எனக்கு இப்படி நடக்கிறது’ என்று அழுதாள்.

அப்போது அவளுடைய தாயார் கேக் செய்து கொண்டிருந்தார்கள். அவளிடம், ‘உனக்கு கேக் செய்கிறேன், பிடிக்கும்தானே’ என்று கேட்டார்கள். அப்போது அவள், ‘ஆம், அம்மா எனக்கு நீங்கள் செய்கிற கேக் மிகவும் பிடிக்கும்’ என்று கூறினாள்.

அப்போது அவளுடைய தாயார், ‘ இந்தா, கொஞ்சம் எண்ணெயை எடுத்து குடித்து கொள்’ என்றார்கள். அதற்கு அவள், ‘ஐயெ, சீ’ என்றாள். ‘சரி, இந்தா, இரண்டு பச்சை முட்டை அதையும் வாயிலே போட்டு கொள்’ என்றார்கள், ‘என்னம்மா, நீங்கள்’ என்று அந்த பெண் கேட்டாள். அம்மா விடாமல், ‘கொஞ்சம் மாவையும் அதோடு, சோடா உப்பையும் கூட சேர்த்து வாயில் போட்டு கொள்’ என்று கூறினார்கள். அப்போது அந்த பெண், ‘என்னம்மா நீங்கள் சொல்கிறீர்கள், அதையெல்லாம் எப்படி நான் அப்படியே வாயில் போட்டு கொள்ள முடியும்’ என்று கேட்டாள்.

அப்போது அந்த தாயார், ‘ஆம் மகளே, இவையெல்லாம் தனியாக பார்த்தால், அப்படியே சாப்பிட்டு விட முடியாது, அவையெல்லாம், பச்சையாக, பிரயோஜனமற்றதாக விரும்பதகாததாக தோன்றும், ஆனால், அவற்றை சரியான விகிதத்தில் கலந்து, சரியான முறையில் சமைக்கும்போது, எல்லரும் விரும்புகிற அருமையான கேக் ஆக மாறும்.

அதுபோல, தேவனும் நம்முடைய வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு துன்பமான நிகழ்ச்சிகளையும், விரும்பதகாத காரியங்களையும், நாம் அவரை சார்ந்து கொள்ளும்போது, இனிமையாக மாற்றி தருவார்’ என்று கூறினார்கள். அவர் எல்லா காரியத்தையும் தமது சித்தத்தின்படி செய்யும்போது, அவை நன்மையாக முடியும் என்பது அவருக்கு தெரியும். ஆனால், நாம் அவரை சார்ந்து, அவரை மாத்திரம் பற்றி கொண்டிருக்கும்போது, நம்முடைய எல்லா நம்பிக்கையற்ற நிலைமைகளையும் அவர் மாற்றி, நிச்சயமாக அற்புத விடுதலையை தருவார்.

எசேக்கியா இராஜா அரசனானபோது, ‘அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான். ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று’ (2 இராஜாக்கள் 18:6,7) என்று வேதத்தில் பார்க்கிறோம். அந்த ராஜா கர்த்தரை சார்ந்திருந்தபடியால், கர்த்தர் அவனோடிருந்தார், அவன் போகிற இடமெல்லாம் அவனுக்கு அனுகூலமாயிற்று. அவன் செய்தவற்றை எல்லாம் தேவன் ஆசீர்வதித்தார்.

அவனுக்கு எதிராக அசீரியா ராஜா பெரிய சேனையோடு, எருசலேமை சுற்றி வளைத்து, தேவனை தூஷித்து, மக்களை திடனற்று போக செய்த போது, எசேக்கியா ராஜா கர்த்தரின் ஆலயத்திற்கு சென்று ஸ்தானாபதிகள் கொண்டு வந்த நிருபத்தை கர்த்தருடைய சமுகத்தில் விரித்து முறையிட்டபோது, கர்த்தருடைய தூதன் புறப்பட்டு வந்து, அசீரியரின் பள்ளத்தாக்கில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரை அந்த ஒரு தூதனே சங்கரித்தான். கர்த்தர் அவனுக்காக யுத்தம் செய்தார். ஏனெனில் அவன் கர்த்தரையே சார்ந்து, அவருடைய கிருபைக்காக காத்திருந்தான். அவன் எதிரிகள் அவன் முன் முறியடிக்கப்பட தேவன் கிருபை செய்தார்.

உங்கள் வாழ்க்கையிலும் தொடர்ந்து துன்பமான காரியங்களா? நான் கர்த்தருக்கு பயந்து நடக்கிறவன், நடக்கிறவள், ஏன் எனக்கு இந்த பாடுகள் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு விரோதமாக அநேகர் கூட்டம் கூடியிருக்கிறார்களா? நீங்கள் கர்த்தரை மாத்திரம் சார்ந்து கொள்ளுங்கள். நீரே என் கதி என்று அவருடைய பாதத்தில் சரணடைந்து விடுங்கள். தீமையான யாவற்றையும் கர்த்தர் நன்மையாக மாற்றி தருவார். அவரே கதி என்று வந்த உங்களை அவர் வெட்கப்படுத்த விட மாட்டார். பெலமுள்ளவனுக்காகிலும், பெலனற்றவனுக்காகிலும் உதவிகள் செய்வது அவருக்கு லேசான காரியம்! கர்த்தரை நீங்கள் பற்றி கொள்ளும்போது, அவர் உங்களுக்காக யுத்தம் செய்வார், நீங்கள் ஜெயம் பெற்றவர்களாக வாழுவீர்கள்! ஆமென் அல்லேலூயா!

அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான். ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று (2 இராஜாக்கள் 18:6,7)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 1 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *