கறைப்படுத்தும் நட்பு

சோப்ரோணியஸ் என்ற கிரேக்க அறிஞர் ஒரு சிறந்த தத்துவ ஆசிரியர். சிறுபிள்ளைகளுக்கு ஞானமாய் பயிற்சி கொடுப்பதில் சிறந்தவர். தன் மகனோ, மகளோ ஒழுக்கமற்றவர்களோடு பழகுவதை அவர் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்.

ஒரு முறை அவரது பிள்ளைகள் விருந்து ஒன்றில் கலந்து கொள்ள அனுமதி கேட்டனர். இவரோ அங்கு சில நற்செயல்களற்றவை நடக்கும், நன்னடத்தையற்ற சிலரும் வருவர் என அறிந்திருந்ததால் பிள்ளைகளுக்கு அனுமதி மறுத்து விட்டார். அறிஞரது மகன், ‘நீங்கள் நினைப்பது போல ஆபத்தில் சிக்குவதற்கு நாங்கள் ஒன்றும் சிறு குழந்தைகள் இல்லை’ என்று ஆவேசத்தோடு கூறினான்.

அவரோ ஒரு வார்த்தையும் பேசாமல், வீட்டிலிருந்த ஒரு எரிந்த கரித்துண்டை எடுத்தார். அதை தன் மகனிடம் கொடுத்தார். மகன் கரித்துண்டை கையில் எடுத்த மாத்திரத்தில் கையெல்லாம் கறைபட்டது. கைதவறிய கரித்துண்டு அவனது வெள்ளைசட்டையிலும் விழுந்து கறை ஏற்படுத்தியது. ‘கரித்துண்டை கவனத்துடன் கையாள்வது மிகவும் சிரமம் தான்’ என்று தகப்பனிடம் கூறினான் மகன். ‘ஆம், கரித்துண்டு உன்னை சுட்டுவிடவில்லை, ஆனால் உன்னை கறைப்படுத்தி விட்டது’ என்பதை அறிந்து கொள்’ என்று கூறினார் தகப்பன்.

ஆம் இது எத்தனை உண்மை! தீயவர்களோடு பழகுவதால் உடன் தானே நாமும் தீயவர்களாகி விடுகிறதில்லை. ஆனால் அவை நம்மை கறைபட்டவர்களாக மாற்றி, காலப்போக்கில் நம்மையும் அத்தீய குணத்திற்கு சொந்தக்காரர்களாக மாற்றிவிடும்.

ஆகவே தான் வேதம் கூறுகிறது’ கோபக்காரனுக்கு தோழனாகாதே, உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. அப்படி செய்தால் நீ அவனுடைய வழிகளை கற்றுகொண்டு உன ஆத்துமாவுக்கு கண்ணியை வருவிப்பாய் (நீதிமொழிகள் 22:24-25) என்று நம்மை எச்சரிக்கிறது. அதே போல பண ஆசை உள்ளவர்களோடு பழகி பாருங்கள்.

அவர்கள் அதை சேர்க்க வேண்டும், இதை கட்ட வேண்டும் என்றே பேசுவார்கள், அதை கேட்டு கொண்டேயிருந்தால், நாமும் ‘ஐயோ நான் ஒன்றும் சேர்த்து வைக்கவில்லையே, இனி என்னவெல்லாம் செய்யலாம்’ என்ற எண்ணம் நம்மையும் அறியாமல் நமக்குள் வந்து விடும். கர்த்தர் பேரில் வைத்த நம்பிக்கையும் அற்று போய் வீண் கவலைக்கும் விரக்திக்கும் ஆளாகி விடுவோம். ஒரு சகோதரன், ஒழுக்கமான குடும்பத்தை சேர்ந்தவர், தனது வேலையிடத்தில், தன்னுடைய தகுதிக்கும் கீழான நண்பர்களோடு சேர்க்கை வைத்து கொண்டார்.

அந்த நண்பர்கள், அவரை பாவ வழிகளில் இழுத்து பார்த்தார்கள், ஆரம்பத்தில் ‘நான் கர்த்தருக்கு துரோகம் செய்ய மாட்டேன்’ என்று மறுத்து அவர்கள் செய்யும் பாவத்தில் கலந்து கொள்ள மாட்டார், ஆனால், அவர்களோடு எப்போதும் சேர்ந்து இருப்பார். ஒரு நாள் அவர்களுடைய வற்புறுத்தலை தாங்காமல், அவர்களோடு சேர்ந்து, தானும் பாவம் செய்ய ஆரம்பித்தார். கடைசியில், அது அவருடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்தது.

நாம் சேருகிற நண்பர்கள் நம்முடைய தராதரத்திற்கும், நம்முடைய விசுவாசத்திற்கும் ஒத்தவர்களாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எல்லாருடனும் நெருங்கிய உறவு வைத்து கொள்வது மிகவும் ஆபத்தானது. நண்பர்களே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால், கெட்ட நண்பர்களின் சகவாசம் இருக்கவே கூடாது. ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் அவர்கள் உங்களை நடுத்தெருவில் நிற்க வைத்து விடுவார்கள். தேவ பிள்ளைகள் அதில் மிகவும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

மேலும் வேதம் ‘பரியாசக்கார்களோடு சேர்ந்து நீயும் பரியாசக்காரனாகி விடாதே’ என்று சொல்லவில்லை. ‘பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராதே’ என்று சொல்கிறது. அவர்களோடு நீ திண்ணையின் ஒரு ஓரத்தில் உடகார்ந்திருந்து, அவர்களது பரியாச பேச்சுக்கு மௌனமாய் சிரிக்கமட்டும் செய்தாலும் அந்த பாவத்திற்கு நீயும் ஒருநாள் உடன்படுவாய். வெகு விரைவில் தினமும் அந்த திண்ணையில் உட்கார பிடிக்கும். சட்டென்று நீயும் பிறரை பரியாசம் செயயும் ஒருவனாய் மாறி விடுவாய்.

பிரியமானவர்களே, யாரையும் வெறுக்கவோ அசட்டை செய்யவோ கூடாது. ஆனால் ஒருவர் எப்படிப்பட்டவர் என்று அறியும் முன் யாருடனும் நெருங்கின உறவினை ஏற்படுத்த அவசரப்பட கூடாது. அது ஆபத்தானதே. நம் நண்பனை வைத்து நம்மை சமுதாயம் இனம் கண்டு கொள்ளும். கறைபட்டு விடாதபடி நம்மை காத்து கொள்வோம்.

உலக மேன்மை அற்பம் என்றும் உலக நட்பு குப்பை என்றும் உள்ளத்தினின்று கூறுவாயா? உண்மையாய் இயேசுவை நேசிப்பாயா? உலகோர் உன்னைப் பகைத்தாலும் உண்மையாய் அன்பு கூருவாயா?உற்றார் உன்னை வெறுத்தாலும் உந்தன் சிலுவை சுமப்பாயா?

செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்;  (பிரசங்கி 10:1) 

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 9 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *