கிறிஸ்துவுடனுள்ள அனுபவம்

மாலை மயங்குகிற வேளையில் ஒரு சிறுவன் மிதிவண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்தான். அவன் வருவதை பார்த்த ஒரு போலீஸ்காரர் அவனது சைக்கிளை நிறுத்தி, ‘தம்பி, டைனமோ லைட்டை எரிய செய்யாமல் ஏன் சைக்கிளை ஓட்டி வருகிறாய்?’ என்று கேட்டார். உடனே அவன், ‘இந்த சாலையின் இருபுறமும் அநேக விளக்குகள் எரிகின்றன. பட்டப்பகலை போல வெளிச்சமாக உள்ளது. என் சைக்கிளில் வெளிச்சமில்லாதது குற்றமா? என்றான். இதை கேட்ட போலீஸ்காரர் அவனை சாலையின் ஒரு ஓரமாக அழைத்து சென்று அவனது சைக்கிளின் பின் சக்கரத்திலிருந்த காற்றை பிடுங்கி விட்டார்.

‘காற்று எல்லா இடத்திலும்தான் உள்ளது. ஆனால் உன் சைக்கிளில் காற்று இல்லை என்றால் உன்னால் ஓட்டி செல்ல முடியுமா?’ என்றார். இந்த காரியம் சிறுவனை கோபமடைய செய்தாலும் சற்று நேரத்தில் அது அவனை சிந்திக்க வைத்தது.

இதை வாசிக்கும் அன்பானவர்களே, உங்கள் உள்ளத்தில் ஒளி உண்டா? இருள் இருக்கும் இடத்தில் பாவமும் பயமும் குடி கொள்ளும். வேத புத்தகத்தில் இருள் பிசாசையும் அவனது பிள்ளைகளையும் குறிக்கிறது. அப்படியென்றால், ஒளியானவர் யார்? ‘நான் உலகத்திற்கு ஒளியாக வந்தேன்’ என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். இந்த ஒளி குடும்பத்திற்கு மாத்திரமல்ல, குடும்பத்தின் அங்கத்தினர் ஒவ்வொருவருக்குள்ளும் காணப்பட வேண்டும்.

சிலர் கூறுவர், ‘என் தாய் எப்போதும் எனக்காக ஜெபித்து கொண்டேயிருப்பார்கள்’ என்று. அது நல்லதே, அனால் நீங்கள் ஜெபிக்கிறீர்களா? நீங்கள் குடும்பத்தினரோடு இணைந்து குடும்ப ஜெபம் செய்யலாம், ஆனால் தனிப்பட்ட விதத்தில் கிறிஸ்துவோடு தொடர்பு உங்களுக்கு உண்டா?

நாம் பரம்பரை கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததால் பரலோகில் நமக்கென்று ஒரு இடம் கொடுக்கப்பட மாட்டாது. ஆலயம் செல்வதோ, பெற்றோரின் ஜெபமோ, மனைவியின் ஜெபமோ நம்மை சுத்தவானாக தேவன் முன் நிலை நிறுத்தாது. அவர்களின் ஜெபம் நிச்சயம் உங்களை தீங்கிலிருந்து பாதுகாக்கும். இரட்சிக்கப்பட வழியை திறக்கும். ஆனால தேவனோடு தனிப்பட்ட முறையில் உறவாடும் அனுபவம் நிச்சயம் வேண்டும். அதுவே நம்மை கறைதிரையற்றவர்களாக நிற்க செய்யும்.

பிரியமானவர்களே, உங்கள் பெற்றோரின் ஜெபத்தை மனைவியின் ஜெபத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவரா நீங்கள்? தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு தானே, நம் வயிற்றிற்கு நாம் தானே சாப்பிட வேண்டும். அதுப்போலத்தான் தேவனோடுள்ள ஐக்கியமும், நம் சைக்கிளிலுள்ள குறையை சரி செய்யாமல் பிறரது வெளிச்சத்தையே நம்பி வாழ்வது நம்மை இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு போய் விட்டுவிடும்.

நாம் நமது குறைவுகளை மெய்யான ஜீவ ஒளியாகிய இயேசுவின் வார்த்தைகளால் சரி செய்து கொள்வோம். அதுவே எப்போதும் நம்மை பாவ படுகுழியிலிருந்தும், ஆவிக்குரிய வீழ்ச்சியிலிருந்தும் பாதுகாக்கும். இன்றே அவரோடு தனித்திருக்கும் தருணத்தை நியமியுங்கள். அவரது வார்த்தை உங்கள் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமாயிருக்கும்.

உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி

(யோவான் 1:9)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 1 times, 1 visits today)