கொஞ்சத்திலும் உண்மை

ஒரு வாலிபன் ஒருநாள் கடற்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்படி அவன் போகும்போது, நிறைய நட்சத்திர மீன்கள் (Star Fish) கரையோரத்தில் ஒதுக்கப்பட்டிருப்பதை கண்டான். ஓவ்வொன்றாக எடுத்து கடலில் தூக்கி போட ஆரம்பித்தான்.

ஏனெனில் அவை அங்கு மணலில் கிடந்தால், வெயில் பட்டு மரித்து விடுமே என்று எண்ணினவனாக, ஒவ்வொன்றாக எடுத்து கடலில் தூக்கி போட ஆரம்பித்தான். அதை கவனித்த ஒரு வயதானவர், அவனை நோக்கி, ‘என்ன செய்கிறாய்’ என்று கேட்டார். அப்போது அந்த வாலிபன், ‘இந்த நட்சித்திர மீன்கள் இந்த வெயிலில் மரித்து போகாத வண்ணம் அவற்றை எடுத்து கடலில் போடுகிறேன்’ என்று கூறினான். அப்போது அவர், ‘என்ன பிரயோஜனம், நீ என்ன வித்தியாசத்தை காண போகிறாய்? இதோ இந்த கடற்கரையில் எத்தனை மில்லியன் நட்சத்திர மீன்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தாயா?’ என்று கேட்டார்.

அப்போது அந்த வாலிபன், ‘ இந்த ஒரு நட்சத்திர மீனுக்கு அது ஒரு பெரிய காரியமல்லவா? அதனுடைய உயிர் பிழைத்ததே’ என்று கூறினான்.

கர்த்தர் நம்மிடமிருந்து எதிர்ப்பார்ப்பது, கொஞ்சத்தில் நாம் உண்மையுள்ளவர்களாயிருக்கவேண்டும் என்பதே. கொஞ்சத்தில் நாம் உண்மையாய் இருந்தால், அதற்கு அவர் தரும் பலன் மிகவும் பெரியதாகும். அதற்கு நாம் கொஞ்சம் மாத்திரம் உண்மையிருந்தால் போதும் என்று அர்த்தமில்லை. நம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் கொஞ்ச காரியத்தில் நாம் கர்த்தருக்கு உண்மையாயிருந்தால், நிச்சயம் அவர் நம்மை அநேகத்திற்கு அதிபதியாய் மாற்றுவார் என்பதே அதன் அர்த்தமாகும்.

நம்மில் அநேகர் கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிற சிறிய ஊழியத்திலோ, சிறிய பொறுப்பிலோ உண்மையில்லாதவர்களாக இருப்பதால் கர்த்தர் நம்மை உயர்த்துவதில்லை. நாம் இருக்கிற இடத்திலேயே இருக்கிறோம். ஒருவேளை எனக்கு கொடுக்கப்பட்டிருப்பது மிகவும் சிறிய வேலைதானே என்று முறுமுறுக்கிறவர்களாக இருக்கலாம். அதையும் கர்த்தர் காண்கிறவராயிருக்கிறார். ஆனால் கொஞ்சத்திலும் நாம் உண்மையுள்ளவர்களாக, பரிபூரண சந்தோஷத்தோடே செய்யும்போது, கர்த்தர் சொல்கிறார், ‘நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு’ என்று நம்மை ஆசீர்வதிப்பார்;.

ஒருவேளை நாம் செய்வது மிகவும் சிறிய காரியமாயிருக்கலாம், ஆறுதல் சொல்லி ஒரு ஆத்துமாவை தேற்றியிருக்கலாம், அல்லது அவர்களுக்கு ஒரு சிறிய உதவியை செய்திருக்கலாம், நமக்கு அது ஒன்றும் பெரிய காரியமாக தோன்றியிருக்காது, ஆனால் அதனால் தேற்றப்பட்ட ஆத்துமாவிற்கு, உதவியை பெற்று கொண்டவர்களுக்கு அது மிக பெரிய காரியமாகும்.

இன்று இந்த உலகில் அன்பை தேடி அலைந்து திரிகிறவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஆறுதல் இன்றி தவிப்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா? பெரிய பெரிய வேலைகளில் இருந்தாலும், அன்பை தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் அநேகர் உண்டு. வெளியே மிகவும் பகட்டாக இருப்பார்கள், ஆனால் சிறிதுநேரம் பேசி பார்த்தால் தெரியும், உள்ளத்தில் எத்தனை வியாகுலங்கள் உண்டு என்று. அப்போது அவர்களை நாம் தேற்றும்போது, அது அவர்களுக்கு நிச்சயமாக ஆசீர்வாதமாக இருக்கும். ஒருவேளை நாம் உலகத்தில் உள்ள எல்லாரையும் தேற்றி கொண்டிருக்க முடியாது, ஆனால் உங்களால் இயன்ற அளவு, யாருக்காவது ஒருவருக்கு ஆறுதலாயிருந்தால், நிச்சயமாக அவர்கள் அதை மறக்கவே மாட்டார்கள்.

உலகில் நித்திய ஜீவனை அறியாதபடி மரித்து கொண்டிருக்கிற மக்கள் எத்தனையோ பேர் உண்டு. ஒருவருக்கு நீங்கள் ஜீவனுக்கு செல்லும் வழியை காட்டினால், மறுமையில் அவர்கள் உங்களுக்கு எத்தனையாய் நன்றி சொல்வார்கள்!

நம்மால் இயன்றதை கர்த்தருக்கென்று செய்வோமா? சிறிய காரியமானாலும், கொஞ்சமான காரியமானாலும், உண்மையாய் செய்வோமா? உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான். – (நீதிமொழிகள் 28:20) என்று வேதம் சொல்கிறது. அப்படிப்பட்ட உண்மையுள்ள மனுஷர்களாய் நாம் வாழந்து கர்த்தருக்கே மகிமையை கொண்டு வருவோம். ஆமென் அல்லேலூயா!

எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான். (லூக்கா 19:17)

 

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 13 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *