கொடிய சூழ்நிலையில் அமைதி

ஒரு முறை ஒரு இராஜா தன் நாட்டில் உள்ள ஓவியர்களுக்கு ஒரு போட்டியை வைத்தார். அதன்படி, ஒரு அமைதியான, அந்த படத்தை பார்த்தவுடன் சமாதானம் வரத்தக்கதாக அவர்கள் ஒரு ஓவியத்தை வரைந்து காட்ட வேண்டும். அநேகர் அந்த போட்டியில் கலந்து கொண்டார்கள். இறுதியில் இரண்டு ஓவியங்கள் மாத்திரம் தெரிந்தெடுக்கப்பட்டது.

அதில் ஒரு ஓவியத்தில் அமைதியான ஒரு ஏரி, அதை சுற்றிலும் அழகான மரங்கள், அதற்கு பின்னால் நீல நிற மலைகள், அவை கண்ணாடியை போல அந்த ஏரியில் பிரதிபலித்தன. மேலே நீல நிற வானில் தவழ்ந்து செல்லும் மேகங்கள் என மிகவும் அருமையாக, அழகாக அந்த சித்திரம் தீட்டப்பட்டிருந்தது. யார் அதை பார்த்தாலும், இதற்கு தான் முதல் பரிசு கிடைக்கும் என்று சொல்லும்படியாக இருந்தது.

மற்ற ஓவியம், இதிலும் மலைகள் இருந்தன, ஆனால் அவை கரடுமுரடாக, ஒழுங்காக இல்லாமல் இருந்தது. வானத்திலிருந்து மழை கொட்டி கொண்டிருந்தது. மின்னல்கள் வானத்தை கிழித்து கொண்டிருந்தன. மலையின் நடுவில் ஒரு நீர்வீழ்ச்சி, அதில் நீர் ஆக்ரோஷமாக பாய்ந்து கொண்டிருந்தது. இந்த படத்தில் அமைதி என்று சொல்வதற்கு இடமே இல்லை. அதை ராஜா பார்த்து கொண்டிருந்தபோது, அந்த நீர்வீழ்ச்சியின் பக்கத்தில் ஒரு பாறையின் இடுக்கில் ஒரு பறவை தன் கூட்டை கட்டியிருந்தது. அந்த நீர்வீழ்ச்சியின் ஓசைகளுக்கும், பாய்ச்சலுக்கும் நடுவில் அந்த கூட்டை கட்டியிருந்த பறவை தன் குஞ்சுகளுடன் அமைதியாக அமர்ந்திருந்தது.

இராஜா இரண்டாவது படத்தையே முதல் பரிசுக்கு தேர்ந்தெடுத்தார். ஏன் தெரியுமா, அத்தனை இரைச்சல்களுக்கும் மத்தியில் அந்த பறவை தன் கூட்டை கட்டி, அங்கு அமைதியாக அமர்ந்திருக்கிறதே அதுவே உண்மையான அமைதியாகும் என முடிவெடுத்து அந்த படத்திற்கே முதல் பரிசை கொடுத்தார்.

எல்லாம் அமைதியாக இருக்கும்போதோ, பிரச்சனைகள் இல்லாதிருக்கும்போதோ, கடுமையான சூழ்நிலைகள் இல்லாதிருக்கும்போதோ வருவது அமைதி இல்லை. ஆனால் சமாதானம் சந்தோஷம் என்பது, எல்லாமே தலைகீழாக இருக்கும்போது, பிரச்சனைகள் மேல் பிரச்சனைகள், நாம் நினைத்திராத காரியங்கள் நமக்கு எதிராக செயல்படும்போது, ஒரு அமைதியும் சமாதானமும் இருதயத்தில் தோன்றுகிறதே அதுவே அமைதியாகும்.

நம் வாழ்விலும் எல்லாமே சரியாக இயங்கி கொண்டிருக்கும்போது, நாம் சமாதானத்தை குறித்தோ சந்தோஷத்தை குறித்தோ நினைப்பதில்லை. ஏனென்றால் எல்லாமே நன்மையாக இருப்பதால்! ஆனால் வாழ்வில் ஒரு புயல் வீசும்போது, நம் அமைதி கலைந்து போகிறது. வாழ்வில் கஷ்ட நேரத்தில் இருப்பவர்களை கேட்டு பாருங்கள், நான் தூங்கியே பல நாள் ஆகிவிட்டது என்பார்கள். இருக்க இருக்க மெலிந்து கொண்டே போவார்கள். உடலில் எடை கூடாது.

ஆனால் கிறிஸ்து நமக்கு வாக்களித்திருக்கறார், ‘நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள்.

அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்’ என்று. நாம் நம் பிரச்சனைகளை கர்த்தருக்கு தெரிவித்து விட்டப்பின், நிச்சயமாக எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தினால் உங்கள் இருதயம் நிறைந்திருப்பதை உணருவீர்கள். என்னதான் புயல் வரட்டும், என்னதான் கடல் கொந்தளிப்பை போன்று வாழ்க்கையில் பிரச்சனைகள் வரட்டும், நமக்கு சமாதானத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கிற தேவன் நமக்கு உண்டு.

ஆகவே சோர்ந்து போய் விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு. அதை நன்மையாக மாற்றும் தேவன் நமக்கு உண்டு. புயலின் மத்தியிலும் ஒரு அமைதி சமாதானம் நிச்சயமாகவே நமக்கு தருகிற தேவன் நமக்கு இருக்கும்போது, நாம் எதை குறித்தும் கலங்க தேவையில்லை! ஆமென் அல்லேலூயா!

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் (பிலிப்பியர் 4:6-7)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 1 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *