கோலியாத்தை முறியடிப்போம்

ஒரு விதவை தாய் தன் வீட்டிற்கு அருகாமையிலுள்ள சிறு பிள்ளைகளை கூட்டி வைத்து, ஒவவொரு நாள் மாலையிலும் ஆண்டவரை துதித்து பாடி, சிறு சிறு கதைகள், சம்பவங்கள் மூலம் வேதாகம செய்திகளை பிள்ளைகள் மனதில் பதிய செய்து, வறுமையின் மத்தியிலும் தன்னால் இயன்ற பண்டம் கொடுத்து அனுப்புவார்கள். அநேக பிள்ளைகளின் வாழ்வு மாற்றப்பட்டு வந்தது. பக்கத்து வீட்டுகாரருக்கு தினமும் கைளை தட்டி, அந்த பிள்ளைகள் பாடுவது எரிச்சலை உண்டாக்கியது.

ஆகவே அந்த அம்மாவை விரட்ட ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஒரு மந்திரவாதியை வரவழைத்தான். குறிப்பிட்ட நேரத்திலே மந்திரவாதி அவர்களுக்கு விரோதமாய் மந்திரங்களை செய்து கொண்டிருந்தான். திடீரென்று மந்திரவாதியின் கைகளும், கால்களும் நடுங்கின. ‘ ஐயோ என்னை உடனே இப்போதே என் வீட்டிற்கு அனுப்பு, இல்லையென்றால் மரித்து விடுவேன்’ என்று கதறினான். காரில் உடனே அவன் வீட்டிற்கு அனுப்பப்பட்டான் மந்திரவாதி.

ஆம் தேவன் தெரிந்து கொண்டவர்களை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறவன் யார்? (ரோமர் 8:33) சர்வவல்லமையுள்ள தேவனை அடைக்கலமாக கொண்ட நாம் எந்த ஒரு மாந்திரீகத்திற்கும், பிசாசின் வல்லமைக்கும் கலங்க தேவையில்லை.

மாந்திரீகங்கள் மற்றும் பிசாசின் கிரியைகளை குறித்து வேதாகமம் போதிக்கும் காரியத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும். கிறிஸ்தவர்களில் ஒரு சாரார் பிசாசுகளே கிடையாது என்று கூறுவர். மாறாக மறறொரு சாரார் எல்லாவற்றிற்கும் பிசாசு என்று கூறி எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். இந்த இரண்டு எண்ண ஓட்டங்களுமே சரியானதல்ல.

வேதாகமத்தில் குறி சொல்லுவோர், மந்திரவாதத்தில் ஈடுபடுவோரை குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. உதாரணமாக பார்வோனுக்கு முன்பாக மோசேயின் கோல் பாம்பாக மாறியது போல பார்வோனின் மந்திரவாதிகளும் தங்கள் கோல்களை மாற்றினர். அதே போல் எகிப்தியர்களுக்கு மேல் வந்த பத்து வாதைகளில் முதல் இரண்டை எகிப்திய மந்திரவாதிகளும் செய்து காட்டினர்.

ஆம், பிசாசும் தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு வல்லமையையும், அற்புதம் செய்கிற வழியையும் கொடுக்கிறான். ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வல்லமைக்கு முன்பாக எந்த பிசாசின் வல்லமைகளும் ஒரு பொருட்டல்ல. எகிப்திய மந்திவாதிகள் பாம்பாக மாற்றிய கோலை மோசேயின் கோல் விழுங்கி போட்டது. அதுபோல இரண்டு வாதைகளுக்கு மேல் எகிப்திய மந்திரவாதிகளால் செயல்படுத்தி காட்டமுடியவில்லை என்பதையும் வாசிக்கிறோம்.

பிரியமானவர்களே, மாந்திரீகமும் பில்லி சூனியங்களும் உண்மைதான். ஆனால் அவைகளை விட கோடி மடங்கு வல்லமையுள்ள தேவனுடைய பிரசன்னமும், பாதுகாப்பும் மிகமிக உண்மையாகும். எந்த ஒரு பிசாசின் கிரியைகளுக்கும் நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இயேசுவின் நாமத்தினால் பிசாசுகளை துரத்த அதிகாரம் பெற்ற நாம் ஏன் பிசாசின் வல்லமைக்கு பயப்பட வேண்டும்?

அந்தகார வல்லமைகளை தேவ பெலத்தினாலும், இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள இரத்தத்தினாலும், அவருடைய நாமத்தின் வல்லமையினாலும் நாம் தோற்கடிக்க வேண்டும். எல்லா நாமத்திற்கும் மேலான இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்கு பாதாளம் நடுநடுங்கும்! ஒரே ஓட்டமாக ஓடிப்போகும்! அந்த நாமத்தை தரித்து கொண்ட ஒவ்வொருவர் மேலும் பிசாசிற்கும், சாத்தானின் வல்லமைக்கும் எந்தவித அதிகாரமுமில்லை.

கிறிஸ்தவர்களில் சிலர் பயப்படுவார்கள், ‘அவன் எனக்கு சூனியம் வைத்து விட்டான், மந்திரம் செய்து விட்டான்’ என்று. உண்மையான கிறிஸ்தவனாக இருந்தால், அந்த சக்திகள் அவனுக்கு பயந்து ஓடும். செய்தவனையே தாக்கும். உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது. கர்த்தரின் நாமமும், அவருடைய இரத்தமும் நம்மை பாதுகாக்கும் கோட்டைகளாகும். அதினாலே நாம் வெற்றி எடுத்து, சாத்தானின் கிரியைகளையும், அவனுடைய தந்திரங்களையும், வெல்வோமாக! ஆமென் அல்லேலூயா!

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் (ஏசாயா 54:17)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 1 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *