சகல ஆறுதலின் தேவன்

சமீப காலத்தில் ஜெம்ஸ் ஸ்தாபனத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தில் ஊழியம் செய்து கொண்டிருந்த மிக இளமையான 28 வயதே நிரம்பிய ஷரவண் குமார் என்னும் ஊழியர் மதவாதிகளால் கொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசி யெறிப்பட்டிருக்கிறார். அவர் இந்து குடும்பத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு, கர்த்தருக்கென்று வைராக்கியமாய் ஊழியம் செய்து வந்த சகோதரனாவார்.

ஒரு கைக்குழந்தையோடு அநாதையாக்கப்பட்ட அவரது இளவயதின் மனைவியின் இருதயத்தில் என்னென்ன நினைவுகள் ஓடியிருக்கும்? இப்படி கொல்லப்படுவதற்காகத்தானா தாங்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தோம் என்று. ஆனால், கர்த்தருக்கு ஒரு திட்டம் உண்டல்லவா? அவருடைய சித்தமில்லாமல் நம் தலையிலிருந்து ஒரு முடியும் கீழே விழாதல்லவா?

ரெஜி தன் தாயை மிகவும் அதிகமாக நேசித்தாள். ஆனால் அவளுடைய பதினான்கு வயதில் அவளது தாய் மரித்து போனார்கள். அதனால் அவள் கடவுளே இல்லை என்று முடிவுக்கு வந்து, இந்நாள் வரை ஆலயத்திற்கோ, ஜெப கூட்டங்களுக்கோ செல்வதில்லை. எத்தனை மதியீனமான செயல்! பிறந்த எவரும் மரிக்க வேண்டும்.

இதுதான் ஒவ்வொருவருக்கும் நியமிக்கப்பட்டிருக்கிற காரியம். இதிலிருந்து யாரும் தப்பவே முடியாது. ஆனால் நமக்கு பிரியமானவர்கள் மரிக்கும்போது நம்மால் அதை தாங்கி கொள்ள முடிவதில்லை. மரணம் என்பது எந்த வயதிலும் மிகவும் வேதனையானது. ஆனால் தேவனை பற்றி கொள்கிறவர்களுக்கு அவர் ஆறுதலையும், தாங்கி கொள்ளும்படியான பெலனையும் நிச்சயமாக அருளுகிற தேவனாயிருக்கிறார்.

அன்று மார்த்தாள் மரியாளின் சகோதரன் லாசரு மரித்தபோது, அவர்கள் கலங்கி நின்று, அழுது கொண்டிருந்ததை கண்ட இயேசுகிறிஸ்துவினால் அதை தாங்க முடியாதபடி, அவருடைய ஆவியும் கலங்கியதல்லவா, நம்மை படைத்த சிருஷ்டிகர், லாசருவை படைத்த சிருஷ்டிகர், மார்த்தாள் மரியாள், மற்றும் யூதர்கள் அழுததை கண்டு அவரும் கண்ணீர் விட்டார் என்று வேதம் நமக்கு கூறுகிறது.

ஆம் பிரியமானவர்களே, நம் தேவன் நாம் கலங்கி நிற்பதை கண்டு சும்மா போய் விடுகிறவரல்ல. நமக்கு பிரியமானவர்கள் நம்மை விட்டு பிரிந்து போகும்போது, நாம் படும் வேதனைகளை அவர் நன்கு அறிந்திருக்கிற தேவனாயிருக்கிறார். அவர் நம் வேதனைகளை மாற்றி, நிச்சயமாய் ஆறுதலை கொடுப்பார்.

எனது தாயார் ஐந்து வருடங்களுக்கு முன் மரித்த போது, என்னால் அதை தாங்க முடியாத துக்கமாய் இருந்தது. நாம் அவர்களை காண்போம் என்கிற நம்பிக்கை உறுதியாய் இருந்தாலும், உலகப்பிரகாரமாக இனி அவர்களை காண மாட்டோம் என்கிற எண்ணம் என்னை மிகவும் வாட்டியது. இரவெல்லாம் தூங்காமல், அழுது கொண்டிருந்தேன். Depression என்னும் ஒடுங்கின ஆவியினால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். ஒருநாள் இரவில், கர்த்தரோடு பேசி கொண்டே இருந்த போது, கர்த்தர் என்னோடு என் ஆவியில் பேச ஆரம்பித்தார்.

நான் உன் தாயை உண்டாக்கின தேவனல்லவா, எத்தனை காலம் இப்படி துக்கத்தில் ஆழ்ந்திருப்பாய்? என்று கேட்டு, ஏசாயா 61:3ம் வசனத்தை எனக்கு ஞாபகப்படுத்தினார், ‘சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்’.

இதை ஞாபகத்திற்கு கொண்டு வந்த எனக்கு அதன் அர்த்தம் விளங்கலாயிற்று. ‘துயரத்திற்கு பதிலாக ஆனந்ததைலத்தையும், ஒடுங்கின ஆவிக்கு பதிலாக துதியின் உடையை கொடுக்கவும்’ என்ற பகுதியை நினைவு கூர்ந்தவுடன், உடனடியாக, நான் கர்த்தரை துதிக்க ஆரம்பித்தேன். அந்த இரவிலேதானே தேவன் எனக்கு முற்றிலுமாக அந்த ஒடுக்கத்தின் ஆவியிலிருந்து கிருபையாக விடுதலை கொடுத்தார். அது எனக்கு மிகுந்த ஆச்சரியமாயிருந்தது.

ஆம் பிரியமானவர்களே, நாம் துக்கதிலும், சோர்விலும் மூழ்கி, சாம்பலில் உட்கார்ந்து, துயரப்பட்டு, ஒடுங்கி போயிருப்பது தேவனுடைய சித்தமல்ல. நாம் ஆனந்த தைலத்தினால், நம்மை நிரப்பி, நம்மை ஆற்றி தேற்றவே தேவன், இயேசுகிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பினார்.

யாராவது அப்படி தங்களுக்கு பிரியமானவர்களை பிரிந்து துக்கத்திலும் துன்பத்திலும் மூழ்கி, இனி இந்த உலகத்தில் எனக்கு யாரும் இல்லை என்று சோர்ந்து போயிருப்பீர்களானால், உடனே கர்த்தரை துதிக்க ஆரம்பியுங்கள். உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறுவதை உணருவீர்கள். தேவன் துயரப்பட்ட உங்களை சீர்ப்படுத்துவதை உணருவீர்கள். உங்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தை கொடுப்பதையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தை கொடுப்பதையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுப்பதையும் நீங்கள் ருசித்து, கர்த்தரை இன்னும் அதிகமாய் துதிப்பீர்கள்.

‘சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார் (ஏசாயா 61:3)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 1 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *