சத்துருக்களை சிநேகியுங்கள்

இருண்ட கண்டமாகிய ஆப்பிரிக்காவில் யாகோ என்பது ஒரு பழங்குடி ஜாதியாகும். அந்த ஜாதி மக்கள் மிகவும் பின் தங்கிய மக்களாவார்கள். அவர்கள் கிறிஸ்துவை ஏற்று கொண்டனர். அந்த யாக்கோ ஜாதியில் பிறந்த ஒக்கஞ்சி என்பவர் கர்த்தரை ஏற்று கொண்டார். அவர் ஒரு மரம் வெட்டும் தொழிலாளி. பிழைப்புக்காக அவர் தனது ஊரை விட்டு, வேறொரு ஜாதியினர் வாழும் இடத்திற்கு சென்று வேலை செய்ய ஆரம்பித்தார். அந்த மக்கள் தங்களை உயர்ந்த ஜாதியென்றும், யாகோ பழங்குடியினரை அற்பமாகவும் நினைப்பவர்கள்.

அவருக்கு முதலாளியாக மன்ஸிஜோ என்பவன் இருந்தான். அந்த மன்ஸிஜோ, ஒக்கஞ்சி யாகோ இனத்தை சேர்ந்ததால் மிகவும் அவரை வெறுத்தான். அவரை வேலையை விட்டு நீக்கி விட வேண்டும் என்று மிகவும் அவர் மேல் வெறுப்பு காட்டி வந்தான். ஆனால் ஒக்கஞ்சியோ தன் வேலையை உண்மையோடும் உத்தமத்தோடும் செய்து வந்தார்.

ஒரு நாள் அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவருடைய நண்பர் ஒருவர் வந்து, ஒக்கஞ்சியிடம், ‘மன்ஸிஜோ உன்னை வேலையிலிருந்து எடுக்க மிகவும் முயற்சித்து கொண்டிருக்கிறான்’ என்று கூறினார். அதற்கு ஒக்கஞ்சி, ‘நான் என்ன செய்வேன், என் மனைவியும் குடும்பமும் என்ன செய்ய முடியும்’ என்று கேட்டு கொண்டிருந்த போது, மற்ற தொழிளாளர்களும் அங்கு வந்து, யாகோ இனத்தை கேலி செய்து பேச ஆரம்பித்தார்கள்.

அப்போது அங்கு ஒரு டிரக்கில் வந்த மன்ஸிஜோ ‘இங்கு என்ன கூட்டம்? வேலை செய்யாமல் எல்லாரும் பேசி கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கூறிக்கொண்டிருந்தபோது, ஒக்கஞ்சியை அங்கு கண்டு, ‘ஓ, நீதான் எல்லாவற்றிற்கும் காரணமா, நாளையிலிருந்து உனக்கு வேலையில்லை’ என கூறினான். ஒக்கஞ்சி என்ன சொன்னாலும் அது அவன் காதில் விழவில்லை.

அந்த நேரத்தில் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தை அனைவரும் சேர்ந்து வெட்டி கொண்டிருந்தார்கள். ஒக்கஞ்சி, ‘அந்த மரத்தின் பெரிய கிளையை வெட்டி விட்டு, பின் மரத்தை வெட்டினால்தான் சரி, இல்லாவிட்டால் அது திசைமாறி விழுந்து, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும்’ என்று கூறினார். ஆனால் அவர் கூறியதை அசட்டை செய்து, அவர்கள் தொடர்ந்து மரத்தை வெட்டி கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் ஒக்கஞ்சியை பார்த்து, ‘டிரக்கில் உள்ள கடப்பாறையை சீக்கிரம் கொண்டுவா’ என்று கத்தினான். அதை எடுக்க போன ஒக்கஞ்சி, அதில் மன்ஸிஜோ உறங்கி கொண்டிருப்பதையும், திடீரென மரம் முறிந்து, திசைமாறி, டிரக்குக்கு நேராக விழுவதையும் கண்டார். நொடிபொழுதும் தாமதிக்காமல், மன்ஸிஜோவை இழுத்து கீழே வீசி தானும் சேர்ந்து உருண்டார்.

பலத்த சத்தத்தோடு மரம் கீழே விழுந்தது. மற்றவர்கள் இந்த இருவரும் மரித்து விட்டார்கள் என்று நினைத்து கொண்டிருந்தபோது, இருவரும் சிறு காயங்களோடு வெளியே வருவதை கண்டார்கள். ஒக்கஞ்சி, ‘இயேசுவே உமக்கு நன்றி’ என்று கூறுவதை கவனித்த மன்ஸிஜோவின் உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள்! ஏன்? ஏன்? ஏன்? என்று!

‘ஒக்கஞ்சி, உன்னால் எப்படி முடிந்தது? என் உயிரை பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணம் உனக்குள் எப்படி வர முடியும்? நானோ உன்னை இதுவரை முழுப்பகையாய் கொடுமைப்படுத்தி வந்திருக்கிறேனே’ என்று கேட்டபோது, ஒக்கஞ்சி, ‘நாம் சத்துருக்களாயிருக்கும்போதே இயேசுகிறிஸ்து நம்மை நேசித்தார். நான் அவரை வணங்குகிறேன். அவர் நிமித்தம் அப்படி செய்தேன்’ என்று கூறினார். அதற்கு மன்ஸிஜோ, ‘நான் வேறு ஜாதியாச்சே, ஏன் அப்படி, நீ ஓடி தப்பியிருக்க முடியும், ஆயினும் உன் உயிரை காக்க விரும்பாமல், உன் சத்துருவின் உயிரை காத்தாயே’ என்று கூறினபோது, ஒக்கஞ்சி, ‘கிறிஸ்துவுக்கு எல்லா ஜாதிகளும் ஒன்றுதான்.

அவர் சகல ஜாதிகளுக்காகவும் தம் உயிரை கொடுத்தார். அவருடைய இரடசிப்பு அனைவருக்கும் தேவை’ என்று கூறினார். அப்போது மன்ஸிஜோ, ஒக்கஞ்சியின் கரங்களை பிடித்து கண்ணீர் வடித்து, ‘என்னை மன்னித்துவிடு, நானும் உன் இரட்சகரை குறித்து அறிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினான்.

பிரியமானவர்களே, உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள் என்று இயேசுகிறிஸ்து கூறினார். இதை செய்வது கடினமானாலும், கிறிஸ்து நமக்குள் இருந்தால் நிச்சயமாக அதை நாம் செய்ய முடியும். நாம் நன்மை செய்து, மற்றவர்கள் நம்மை சபித்தால் நிச்சயமாக நமக்கு கோபம் வரத்தான் செய்யும், நான் நன்மை செய்கிறேன், என்னை சபிக்கிறானே என்று, ஆனால் கர்த்தருடைய அன்பு நம் உள்ளத்தில் இருந்தால், அவர்களை ஆசீர்வதிக்க முடியும்.

அநேக நேரங்களில் நாம் செய்யும் நன்மைக்கு பதிலாக அவற்றை குற்றம் சொல்கிறவர்களும், குறை சொல்கிறவர்களும் அதிகமாய் இருந்தாலும், அவர்களுக்காக நாம் ஜெபிக்கும்போதும், அவர்களுக்கு நன்மை செய்யும்போதும், கர்த்தர் அந்த இடத்தில் மகிமை படுவார். அவர்கள் கர்த்தரின் நாமத்தை அறிந்து கொள்வார்கள். அவர்களின் சாபங்களை நமக்கு ஆசீர்வாதமாக தேவன் மாற்றுவார். என் வாழ்விலும் அநேக முறை என்னை சபித்தவர்களுக்கும், நன்மைக்கு தீமை செய்தவர்களுக்கும் மீண்டும் நன்மை செய்திருக்கிறேன். அதில் கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டதையும், கர்த்தர் என்னை இன்னும் அதிகமாய் ஆசீர்வதித்ததையும் அனுபவித்திருக்கிறேன்.

கர்த்தர் நமக்குள் இருந்தால் அவருடைய குணாதிசயங்கள் நம்மையும் அறியாமல் வெளிப்படும். நம்முடைய சத்துருக்களை சிநேகிப்போம், நம்மை சபிப்பவர்களை ஆசீர்வதிப்போம், நம்மை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்வோம். நம்மை துன்பப்படுத்துக்கிறவர்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் நாமம் அதன் மூலம் மகிமைப்படுவதாக! ஆமென் அல்லேலூயா!

இயேசுகிறிஸ்து ‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்’

(மத்தேயு 5:44)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 5 times, 1 visits today)