சோர்ந்து போகாதே மனமே

அது ஒரு தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ மருத்துவமனை. யுத்தகளத்தில் காயப்பட்ட இராணுவ வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இங்கு மரணத்தருவாயில் இருந்த இராணுவ வீரன் ஒருவரது அருகில் சிற்றாலய போதகர் ஜெபித்து கொண்டிருந்தார். கண் விழித்த வீரன் போதகரிடம் தனக்கொரு உதவி செய்யும்படி கேட்டு கொணடான்.

போதகரும் மிகுந்த ஆர்வத்துடன் கட்டாயம் செய்கிறேன் என்றார். மெதுவாக தனது பேண்ட் பையிலிருந்து ஒரு சிறு விசாச புத்தகத்தை எடுத்து அதில் ஒரு விலாசத்தை சுட்டிகாட்டி ‘இது என் ஞாயிறு பள்ளி ஆசிரியருடையது இவருக்கு நீங்கள் ஒரு கடிதம் எழுத வேண்டும். அதில் ஞாயிறு பள்ளியில் நீங்கள் கற்று கொடுத்த வேத வசனத்தின்படி நான் ஒரு நல்ல கிறிஸ்தவனாக வாழ்ந்து மரணத்தை சந்திக்கிறேன். என்னை இரட்சகர் இயேசுகிறிஸ்துவிடம் வழிநடத்திய உங்கள் பணிக்காக நன்றி கூறுகிறேன் என்ற செய்தியை அவர்களுக்கு அனுப்ப வேண்டும்’ என்றான். போதகரும் உடனே கடிதம் எழுதினார்.

ஓய்வு நாள் பள்ளி ஆசிரியரிடமிருந்து தாமதியாமல் பதிலும் வந்தது. அவரது கடிதத்தில் ‘மகனே, போனமாதம் என் ஞாயிறு பள்ளி ஆசிரியர் பணியை விட்டு விட்டேன். ஏனெனில் நான் கற்பித்து கொடுத்ததில் எந்த பலனுமில்லை என்பதாக உணர்ந்தேன்.

ஆனால் உன்னுடைய கடிதம் என்னை உயிர்ப்பித்தது, என்னுடைய பொறுமையின்மைக்காகவும், விசுவாச குறைவிற்காகவும் தேவனிடம் மன்னிப்பு கேட்டேன். மீண்டும் இவ்வூழியத்தை செய்ய திட்டமிட்டுள்ளேன். எனது சோர்வை நீக்கி உற்சாகமூட்டிய உனது கடிதத்திற்காக நன்றி செலுத்துகிறேன்’ என எழுதியிருந்தார். ஆனால் இக்கடிதத்ததை படிக்க இராணுவ வீரன் உயிருடன் இல்லை. இதை வாசித்த போதகரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

தேவனுடைய கிரியை எத்தனை மகத்துவமானது! ஆசிரியரை கொண்டு நல்ல கிறிஸ்தவர்களை உருவாக்கினார். அந்த ஆசிரியர் சோர்ந்த நேரத்தில் பழைய மாணவர்களை கொண்டு உயிர்ப்பிக்கிறார்.

எலியா தீர்க்கதரிசி தன் ஊழியத்தில் சோர்ந்து போனபோது, தேவன் எத்தனை கரிசனையாய் அவரை உயிர்ப்பிக்கிறார்! ‘அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம்போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்’ (1 இராஜாக்கள் 19:4-5).

இது போன்ற சூழ்நிலைகளில் நாமும் கூட அடிக்கடி கடந்து சென்றிருக்கிறோம் அல்லவா? ஊழியத்தில் வருகிற பாடுகளை கண்டு, ‘போதும் ஆண்டவரே, என் ஆத்துமாவை எடுத்து கொள்ளும். நான் என் பிதாக்களை பார்க்கிலும் நல்லவன் அல்ல’ என நம் உள் மனதும் சொல்வதுண்டு. நாம் ஊழிய பாதையில் படும் சில பாடுகள் நம்மை அத்தனையாய் நினைக்கவும், போதும் இந்த ஊழியம் என்று சொல்லவும் வைத்தாலும் நம்மை அழைத்த கர்த்தர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்கிற நம்பிக்கை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கும்போது, உங்களை அந்த இடத்தில் ஊழியக்காரனாக வைத்திருப்பது தேவனடைய கிருபையும் சித்தமுமலல்லவா!

ஆனால் நம் சோர்வுகளை கண்டு தேவன் நம்மை அப்படியே விட்டு விடுகிறவர் அல்ல, நாம் செய்த ஊழியத்தில் இருந்து, மற்றொருவரை ஏற்படுத்தி சிறப்பாக செய்ய வைப்பது அவருக்கு இலேசான காரியம் என்றாலும், தேவன் இந்த ஊழியத்தை செய்ய உங்களையே எதிர்ப்பார்க்கிறார். அதனால் எந்த விதத்திலாகிலும் உங்களை உயிர்ப்பிக்கவே விரும்புகிறார். ஆகவே சோர்ந்து போகாதிருங்கள்!

உங்களுடைய தாலந்துகளை கர்த்தருக்கென்று இன்னும் வைராக்கியமாக உபபோயகப்படுத்துங்கள்! இன்னும் கர்த்தருக்கென்று வைராக்கியமாய் உழையுங்கள். சோர்வுகளை கண்டு மனம் தளர்ந்து போகாதிருங்கள். தேவன் உங்க்ள ஊழியத்தை ஆசீர்வதிப்பார். உங்கள் மூலம் மகிமைப்படுவார்.

ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது (நீதிமொழிகள் 24:10)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 8 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *