ஜெபம் செய்திடுவோம்

புதிதாய் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் எப்படி ஜெபிப்பது என்று தெரியாமல் இருப்பார்கள். எவ்வளவு நேரம் ஜெபிக்க வேண்டும்? எப்படி ஜெபிக்க வேண்டும்? என்ன சொல்லி ஜெபிக்க வேண்டும் என்றெல்லாம் அவர்களுக்கு கேள்விகள் எழும்பலாம்.

ஒரு மனிதர் மிகவும் உடல்நிலை மோசமாகி, ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருந்தார். அவர் புதிதாய் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர். அவருக்கு சொல்லிக் கொடுக்க யாருமில்லை. அப்போது அவரைக் காண வந்த போதகரிடம், அவர், தன்னுடைய ஜெபிக்க தெரியாத நிலைமை ஒப்புக் கொண்டு, தான் ஜெபிக்க முற்பட்டதாகவும், ஆனால் ஜெபிக்க ஆரம்பிக்கும்போது, தன் மனம் அங்குமிங்கும் அலைவதாகவும் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று அறியாமல் இருப்பதாகவும் தனக்கு உதவி செய்யும்படியாகவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அப்போது போதகர், தான் ஜெபிக்கிற விதத்தைக் குறித்து அந்த மனிதரோடு பகிர்ந்துக் கொணடார். தன் பக்கத்தில் ஒரு காலி நாற்காலியைப் போட்டு, அங்கு இயேசுகிறிஸ்து அமர்ந்திருப்பதாக கற்பனை செய்தபடி, தன் மனதில் இருப்பதை அவரிடம் வெளிப்படுத்துவதாகவும் அவர் சொன்னார். அந்த மனிதரிடமும் அப்படி செய்துப் பார்க்க அறிவுரைக் கூறினார்.

அந்தப்படியே அந்த மனிதரும செய்து, முதலில் அரை மணிநேரம் ஆரம்பித்து சில வேளைகளில், இரண்டு மணிநேரம், மூன்று மணி நேரம் போவதே தெரியாமல், கிறிஸ்துவோடு கூட மிக நெருங்கிய உறவு வைத்தவராக ஜெப வீரனாக மாறினார். அங்கு அவரிடம் வந்த நர்சுகளும் அவருடைய ஜெப வாழ்க்கையைக் கண்டு தொடப்பட்டனர்.

திரும்ப போதகர் அவரைக்காண வந்தபோது, அங்கிருந்த நர்சுகள், அவரிடம், கடந்த நாளில் அவர் மரித்துப போனதாகவும், இறப்பதற்கு முன்பு தன் படுக்கையை விட்டு, இறங்கி, அந்த நாற்காலியில் தன் தலையை சாய்த்தவராக, அப்படியே மரித்துப் போனதாகவும் கூறினர். அவர்களுக்கு அது புரியாத புதிராக இருந்தது. ஆனால் போதகர் அதை அறிந்த போது, அந்த மனிதர் தேவனோடு கொண்டிருந்த உறவைப் புரிந்துக் கொண்டார். நாம் ஜெபிக்கும்போது, வார்த்தை அலங்காரங்களோடு ஜெபித்தால்தான் கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்பார் என்று நம்மில் சிலர் தப்பர்த்தம் கொள்கிறோம்.

நமக்கு தெரிந்த மொழியில் வார்த்தையில் ஜெபித்தாலே கர்த்தர் அதைக் கேட்க ஆவலாயிருக்கிறார். புதிதாய் பிறந்து வளரும் குழந்தை பேச ஆரம்பித்த உடனே சரியான வார்த்தைகளை பேசி விடாது. அதற்கு தெரிந்ததெல்லாம், மா, பா, தாதா இதுதான். ஆனால் அதைக் கேட்கும் பெற்றோருக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி! என் பிள்ளை பேசி விட்டானே என்று, அதுப்போலத்தான் நாம் தினமும் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்ப்பார்க்கிறார்.

நாம் என்ன சொன்னாலும் அவர் அதில் பிரியப்படுகிற தேவனாய் இருக்கிறார். நாம் ஜெபிக்காதபோதுதான் அவர், பிறந்த குழந்தை பேசாமல் இருந்தால் பெற்றோர் எப்படி வருத்தப்படுவார்களோ அதுப்போல அவரும் வருத்தப்படுவார். நமக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரோடு உரையாடுவோம். முட்டிப் போட்டுதான் அவரோடு பேச வேண்டும் என்பதில்லை. நாம் வேலை செய்துக் கொண்டே, பெண்கள் சமைத்துக் கொண்டே, அவரோடு பேசிக் கொண்டே இருக்கலாம். வார்த்தை அலங்காரம் தேவையில்லை.

செய்யுள் போன்ற உரைநடை தேவையில்லை, சாதாரண மொழியிலே பேசலாம். நான் காலையில் எழுந்தவுடன் புன்னகையுடன், Daddy, Good Morning என்றுச் சொல்லுவேன். இந்த நாளைக் காண கிருபைச் செய்தீரே நன்றி என்றுச் சொல்லி படுக்கையை விட்டு எழுந்தரிப்பேன். அப்படி சின்ன சின்னதாக ஜெபித்து, அப்படியே வளர்ந்து வரும்போது நம் ஜெப நேரம் இனிமையாக மாறிவிடும். ஒவ்வொரு நாளும் ஜெபித்து ஆரம்பித்து, ஜெபித்து முடிக்க பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஜெபமே ஜெயம்!

இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள் (யோவான் 16:24)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 1 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *