ஜெயக்கிறிஸ்து நம் பக்கம்

ஒரு விவசாயியும் அவருடைய நண்பரும் காட்டில் வாத்துக்களை பிடிப்பதற்காக சென்றுக் கொண்டிருந்தனர், அவர்கள் தங்கள் பேச்சை கடவுளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது விவசாயியின் நண்பர், ‘நீர் எப்போதும் உமக்கும் சத்துருவுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பற்றிக் கூறுகிறீரே, நான் ஒரு கிறிஸ்தவன் கூட இல்லை. ஆனால் எனக்கு அந்த மாதிரி போராட்டங்கள் எதுவுமே இல்லையே’ என்றுக் கூறினார்.

அதற்கு அந்த விவசாயி சொனனார், ‘நாம் இப்போது வேட்டையாடப் போகிறோம், அதில் இரண்டு வாத்துக்கள் அடிபட்டு ஒன்று இறந்துப் போகிறது, மற்றது தப்பி ஓடப் பார்க்கிறது, இதில் எதை நீர் பின்தொடருவீர்’ என்றுக் கேட்டார். அதற்கு நண்பர், ‘தப்பியோடப் பார்ப்பதைத்தான், ஏனென்றால், இறந்துக் கிடப்பதை நாம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாமே!’ என்றுக் கூறினார். அப்போது விவசாயி, ‘சாத்தானுக்கு தெரியும், நீர் இறந்துப் போன வாத்து என்று’ என்றுக் கூறினார்.

கர்த்தருடைய வழிகளில் நடக்கிறவர்களை குறிவைத்து, சாத்தான் எப்போதும் தாக்குதல்களை அனுப்பிக் கொண்டே இருப்பான். ஏனென்றால் நாம் கர்த்தருக்கு என்று எதையும் செய்ய துணிந்தவர்கள் என்றும், இவர்களை விட்டு வைத்தால் உலகத்தையே கலக்கிவிட்டு வந்துவிடுவார்கள் என்றும் அவனுக்குத் தெரியும், அந்த பயத்தினால், அவன் நம்மோடு போராடிக் கொண்டே இருப்பான்.

ஆனால் அவன் என்றும் தோற்றுப் போனவன். அவன் ஒரு நாளும் நம்மை ஜெயங் கொள்வதில்லை. நாம் போராடி அவனை மேற்க் கொள்வோம். ஏனென்றால் ஜெயக்கிறிஸ்து நம் பக்கம் இருக்கிறார்.

‘நான் கர்த்தரை விசுவாசித்து, அவருடைய வழிகளில் நடக்கிறேன். ஆனால் எனக்கு எத்தனை சோதனைகள், எத்தனை பாடுகள்’ என்றுச் சொல்லுகிறீர்களா? யோபு தன் காலத்தில் வாழ்நதவர்களிலே தேவனே மெச்சிக் கொள்ளும் அளவு நீதிமானாய் வாழ்ந்தான். அவனையும் சாத்தான் விட்டு வைக்கவில்லை. அவனுக்குரிய எல்லாவற்றையும் தேனுடைய அனுமதியோடே பறித்துக் கொண்டான். ஆனால், கடைசி வெற்றி யாருக்கு? நிச்சயமாக யோபுவிற்குத்தான்.

கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின. ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள். – (யோபு 42:12,13). ஆகவே சோர்ந்துப் போகாதீர்கள்! வெற்றி நமக்குத்தான்! நீங்கள் இழந்துப் போன எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக் கொள்வீர்கள், ஆமென்! தேவன் நம்பட்சத்தில் இருக்கும்போது நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? – (ரோமர் 8:31)

ஆனால் நம்முடைய போராட்டம், நாம் காண்கிற மனிதர்களோடு அல்ல, வசனம் சொல்கிறது, ‘ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு’ – (எபேசியர் 6:12). நாம் காண்கிற மக்கள் அல்ல நம் எதிரிகள். அவர்களுக்கு பின்னாக இருந்து கிரியை செய்கிற பிசாசின் தந்திரங்களே நமக்கு எதிரிகள். நாம் சாதாரண மனிதர்களோடே சண்டையிட்டு, வழக்காடி எந்தப் பிரயோஜனமுமில்லை. ஆனால் அவர்கள் நமக்கு எதிராக வரும் போது, அவர்களுக்கு பின்னாக கிரியை செய்கிற அந்தகார சக்திகளை இயேசுவின் நாமத்தில் நாம் கடிந்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் அவர்களுக்கு முன்பாக அல்ல, மனதில் கடிந்துக் கொள்ள வேண்டும். நம் ஜெபங்களில் கடிந்துக் கொண்டு ஜெபிக்க வேண்டும். இயேசுவின் நாமத்தில் உள்ள வல்லமையால் அவைகள் தோற்கடிக்கப்பட்டு; பறந்தோடிக் போகும். எந்த பெரிய போராட்டம் என்றாலும் இறுதி வெற்றி நமக்கே! ஐயோ இப்படி ஆகிவிட்டதே என்று சோர்ந்துப போகாதிருங்கள்! இயேசுவின் நாமம் என்கிற பெரிய ஆயுதம் நம் கைகளில் உண்டு. அதற்கு மேலாக எந்த அதிகாரமும் இல்லை எந்த வல்லமையும் இல்லவே இல்லை. ஆமென் அல்லேலூயா!

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (1 கொரிந்தியர் 15:57)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 1 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *