தாகம் தீர்க்கும் ஜீவ நதி

இஸ்ரவேலில் சுக்கோத் என்னும் கூடார பண்டிகை வருடாவருடம் கொண்டாடப்படுகிறது. அந்த சுக்கோத் பண்டிகையின்போது யூதர்கள் ஏழு நாட்கள் தாங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு, கானானுக்குள் செல்வதற்கு முன் வனாந்தரத்தில் 40 வருடங்கள் நடத்திசெல்லப்பட்டதை நினைவு கூர்ந்து, வெளியே கூடாரங்களில் குடியிருப்பார்கள்.

அந்த பண்டிகையின் கடைசி நாளில் யூதர்கள், சீலோவாம் குளத்தில் இறங்கி, அங்கிருந்து தண்ணீரை மொண்டு கொண்டு வந்து, தேவாலயத்திற்கு கொண்டு வருவார்கள். அங்கு அந்த தண்ணீரை ஊற்றி, ஏசாயா 12ம் அதிகாரத்தை பாட்டாக பாடுவார்கள். ‘நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர்மொண்டுகொள்வீர்கள்’ என்று பாடுவார்கள்.

அவர்கள் இரட்சிப்பின் ஊற்றாகிய இயேசுகிறிஸ்துவை குறித்து அவர்தான் மேசியா என்று அறியாமலேயே பாடி கொண்டுதான் இருந்தார்கள்.

இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் இருந்த போது, ஒரு நாள் இந்த கூடார பண்டிகையின் ‘கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்’ என்றார்.

அந்த நேரத்தை சற்று சிந்தித்து பாருங்கள், மேசியாவாகிய கிறிஸ்து முக்கியமான இடத்தில் நின்று கொண்டு, சத்தமிட்டு: ‘ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.

வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்’ என்று கூறினபோது அங்கிருந்த யூதர்கள் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும்? யார் இவர்? என்று நினைத்தது மாத்திரமல்ல, அவர்கள் அவர் தீர்க்கதரிசி என்றும், சிலர் கிறிஸ்து என்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அவரை நினைத்து, ‘இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று’ (யோவான் 7:43) என்று பார்க்கிறோம்.

ஆனாலும் கடைசி வரை அவர்கள் கிறிஸ்துவை ஏற்று கொள்ளவில்லை. ஏனெனில் அவர்களுக்கு தாகம் இல்லை. இயேசுகிறிஸ்து இன்றும் அந்த அழைப்பை விடுக்கிறார். ‘என்னிடத்தில் விசுவாமாயிருந்தால் அவனுடைய உள்ளத்திலிருந்து ஜீவதண்ணீருள்ள நதிகள் ஓடும்’ என்று அறைகூவல் விடுக்கிறார்.

ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையும் உண்டு, ஒருவன் தாகமாயிருந்தால் மாத்திரமே, அவரிடத்தில் வந்து பானம் பண்ணமுடியும். இன்று உலகில் மனிதர்கள் எதனெதன் பேரிலோ தாகமாயிருக்கிறார்கள். அவர்களுக்கு கிறிஸ்துவின் மேல் தாகம் கிடையாது. ஒரு மனிதன் கிறிஸ்துவின் மேல் தாகமாயிருந்தால், அவரிடம் வரும்போது அந்த தாகம் தீர்க்கப்படும்.

ஆனால் இந்நாட்களில் தாகம் தீர்ப்பது பெரிய காரியம் இல்லை, ஆனால், மனிதனுக்குள் அந்த தாகத்தை கொண்டு வருவதே பெரிய காரியமாக இருக்கிறது. மனிதன் தேவனை தவிர வேறு எல்லாவற்றின் மேலும் தாகம் கொண்டு அலைந்து கொண்டு இருக்கிறான்.

அவன் தேடுகிற காரியத்தை பெற்று கொண்டாலும், அவனுக்கு திரும்ப திரும்ப அதன் மேல் தாகம் உண்டாகும், ஆனால் இயேசுகிறிஸ்து சொன்னார், ” நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்” – (யோவான் 4:14) என்றார்.

நமது தாகத்தை தீர்க்கிற ஜீவ நீரூற்று இயேசுகிறிஸ்து மாத்திரமே. அவர் ஒருபோதும் சிறிய நீரோடையை நமக்கு வாக்களிக்கவில்லை, அவர் நமக்கு நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றை வாக்களித்திருக்கிறார்.

அவரிடமிருந்து நமக்கு தேவையான சந்தோஷத்தை, உலகம் கொடுக்க முடியாத சமாதானத்தை, அவருடைய தூய்மையான அன்பை மொண்டு கொள்வோமா? நமக்கு தேவையானதை பெற்று கொ ள்ள உள்ள நிபந்தனை, நாம் அவரிடம் சென்று மொண்டு கொள்ளவேண்டும்.

ஒருவரும் கிணற்றுக்குள் செல்லாமல், கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்க முடியாது. அப்படியே நாமும் வற்றாத தண்ணீர் ஊற்றாகிய இயேசுகிறிஸ்துவிடம் சென்று, தாகத்தோடு நமக்கு வேண்டியதை மொண்டெடுத்து கொள்வோம். அவரே நமது தாகத்தை தீர்ப்பார். ஆமென் அல்லேலூயா!

 நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள் (ஏசாயா 12:3)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 4 times, 1 visits today)

Leave a Reply

You do not have to leave an email address in order to reply.