தேவனால் பயன்படுத்தப்படும் பாத்திரம்

ஒரு பெரிய கடையில் விதவிதமான பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அலமாரியிலும், ஒவ்வொரு விதமான பாத்திரங்களும், அவை ஒன்றில் தங்கத்திலான பாத்திரம், ஒன்று வெள்ளி, மற்றது, வெண்கலம், கண்ணாடி, பீங்கான், மரம் மற்றும் மண்ணில் செய்யப்பட்டு, வரிசையாக ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தது. ஒரு எஜமானர் தனக்கென்று ஒரு பாத்திரத்தை பயன்படுத்துவதற்கு வேண்டுமென்று அந்த கடையில் வாங்க வந்திருந்தார்.

அவர் வருவதை கண்டவுடன், தங்க பாத்திரம், ‘எஜனானரே, என்னை பயன்படுத்தும், நான் விலையேறப்பெற்றவன், பிரகாசமானவன், என் அழகு மற்ற எல்லா பாத்திரத்தையும் மிஞ்சி விடும். உம் கனத்திற்கு மேலும் நான் கனம் சேர்ப்பேன்’ என்றது, எஜமானரோ எந்த ஒரு பதிலும் கூறாமல் பக்கத்தில் சென்றுவிட்டார்.

அடுத்தது வாய் குறுகலாய், உயரமாக இருந்த வெள்ளிப்பாத்திரம் அவரை கூப்பிட்டது. ‘எஜமானரே, உம் விருந்து மேஜையில் திராட்சை ரசம் பறிமாற எனக்கு ஒப்பானவன் யாருமில்லை. என் மேல் செதுக்கப்பட்ட்ட சித்திரங்கள் நளினமானவை. என்னை பயன்படுத்தும்’ என்றது. எஜமான் அதையும் கவனியாதவர் போல் சென்று விட்டார்;

அகன்ற வாயோடு, கண்ணாடி போல் மெருகேற்றப்பட்ட வெண்கலம் எஜமானை நோக்கி, நான் உம்முடைய வரவேற்பறையில் அழகுக்கு அழகு சேர்ப்பேன். எல்லாரும் காணும்படி என்னை பயன்படுத்தும்’ என்று கேட்டது. மௌனம் மாத்திரமே எஜமானின் பதிலாக இருந்தது.

அடுத்ததாக இருந்த அழகான கண்ணாடி பாத்திரம், எஜமானை நோக்கி, ‘நான் எனக்குள் இருப்பதை அப்படியே எல்லாருக்கும் காண்பிப்பேன். நான் உடையும் தன்மையோடு இருந்தாலும், பெருமையோடு உம்மை சேவிப்பேன்’ என்றது. எஜமானன் காது கேளாதவர் போல் சென்று விட்டார். அழகிய வேலைப்பாடுகளோடு இருந்த மரப்பாத்திரம் எஜமானை வருந்தி அழைத்தது, எஜமானை நோக்கி, ‘நான் உறுதியாக அசையாமல் இருப்பேன். ஆனால் திராட்சை ரசத்தை வைப்பததை விட திராட்சை பழத்தை எனக்குள் வைப்பது சிறந்தது’ என்று ஆலோசனையையும் கூறியது.

மேற்கண்ட எந்த பாத்திரத்தின் மேலும் எஜமானுக்கு பிரியம் வரவில்லை. கடைசியாக ஒரு களிமண் பாத்திரத்தை கண்டார். அம்மண் பாத்திரம் கனம் பொருந்திய அந்த எஜமான் தன்னை திரும்பி கூட பார்க்க மாட்டார் என்று நினைத்திருந்தது. தன்னை யாரும் சுத்தப்படுத்தி நிரப்ப முடியாது என்ற சிந்தையோடு மௌனமாக இருந்தது. ஆகவே அது எஜமானை கூப்பிடவுமில்லை.

ஆனால் என்ன ஆச்சரியம்! எஜமான் அந்த பாத்திரத்தை நோக்கி ‘நீ தான் நான் தேடி கொண்டிருக்கும் பாத்திரம், உன்னை பண்படுத்தி பயன்படுத்த விரும்புகிறேன்’ என்றார். ‘உன்னை என் வல்லமையினாலும், மகிமையினாலும், நிரப்புவேன்’ என்று சொல்லி அந்த மண் பாத்திரத்தை தன் கையில் ஏந்தி அதை கழுவி சுத்தம் செய்து தமது கிருபையினால் நிரப்பினார். அப்பாத்திரத்தை நோக்கி, ‘ உனக்கு ஒரே ஒரு வேலையுண்டு. நான் உனக்குள் ஊற்றும் கிருபையினை நீ மற்றவர்களுக்கு ஊற்றி கொண்டேயிரு’ என்றார்.

பிரியமானவர்களே. அந்த எஜமானுக்கு தன்னில் தானே பெருமையாயுள்ள தங்கப்பாத்திரமோ, வெள்ளி பாத்திரமோ, வெண்கல பாத்திரமோ தேவையில்லை. அவருக்கு தேவை தாழ்மையுள்ளதும், பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பவனே! நாம் மண்ணென்று தேவன் நினைவு கூருகிறார். அப்படிப்பட்ட மண் பாண்டங்களாகிய நம்மில் தேவன் தம்முடைய வல்லமையை ஊற்றி அநேகருக்கு ஆசீர்வாதமான பாத்திரங்களாக மாற்ற விரும்புகிறார். அதற்கு நம்மிடத்தில் தேவன் விரும்புகிற தாழ்மை காணப்பட வேண்டும்.

அப்பொழுது தம்முடைய வல்லமையால் நிரப்பி நம்மை உபயோகப்படுத்துவார். ‘இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்’ (2 கொரிந்தியர்4:7) என்று பவுல் கூறுகிறபடி, மண்பாண்டங்களாகிய நம்முடைய சரீரத்தில் அவருடைய வல்லமையை பெற்று கொண்ட நாம், அவருக்கு சாட்சியாக வாழ வேண்டும்.

தேவன் நம்மை வல்லமையாக பயன்படுத்தும்படி நம்மிடத்தில் இன்னும் அதிகமான தாழ்மை வரவேண்டும். அவர் பெருகவும் நாம் சிறுகவும் வேண்டும். நம்மை தாழ்த்த தாழ்த்த கர்த்தர் நம்மை இன்னும் அதிகமாக உபயோகிக்க ஆரம்பிப்பார். அவருடைய கையில் எந்த நற்கிரியையும் செய்ய ஆயத்தமாக்கப்பட்ட பாத்திரங்களாக விளங்க தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்

(2 தீமோத்தேயு 2:21-22)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 8 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *