தேவன் கொடுக்கும் தண்ணீர் 

நீண்ட தூரம் நடைபெறும் ஓட்டப்பந்தயத்தில் பங்கு பெறுபவர்கள் கொஞ்ச தூர இடைவெளியில் நின்று தண்ணீர் குடித்து விட்டு தான் தங்கள் பந்தயத்தை தொடர வெண்டும். இல்லாவிட்டால், அவர்கள் உடலில் தண்ணீர் வற்றிப்போய், அவர்களால் பந்தயத்தை தொடர முடியாமற் போய்விடும். நேரமாகிவிடும் என்று பயந்து, அவர்கள் தொடர்ந்து தண்ணீர் குடியாமற் ஓடி கொண்டே இருந்தார்களானால், திடீரென்று மிகுந்த தலைவலி உண்டாகும், பின் எல்லாமே குழப்பமாக மாறி, கடைசியில் உடலிலே தண்ணீரே இல்லாததால், அவர்களுடைய உடலில் உள்ள உப்பு சத்துக்கள் குறைந்து, இறக்கவும் நேரிடலாம்!

ஒரு வாலிபன் அப்படிப்பட்டதான ஒரு ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டான். மிகவும் வேகமாக ஓடினான், ஓடினான். இடையில் தண்ணீரை குடிப்பதற்கு நின்றால், அந்த நேரத்தில் யாராவது தன்னை முந்தி விடுவார்கள் என்று நினைத்து, தண்ணீர் கொடுக்க வந்தவர்களை தள்ளிவிட்டு, இன்னும் வேகமாக ஓடினான். கடைசி இலக்கை பிடிக்க ஒரு மைல் தூரம் இருக்கும்போது, அவன் ஓடும்போது, ஒரு பக்கமாக சாய்ந்து போக ஆரம்பித்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, தனக்கு எல்லாமே நன்றாக தானே இருக்கிறது என்று குழம்பினவனாக, தொடர்ந்து ஓடினான். கடைசியில் இன்னும் அரை மைல் தூரம் இருக்கும்போது, கீழே விழுந்து அவனால் எழுந்திரிக்க முடியாமற் போனது. போட்டியில் முதலாவது வந்தவன், கடைசியில் அரை மைல் தூரம் இருக்கும்போது, ஓடமுடியாமல் தோற்று போனான்.

இன்றும் நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் ஒரு ஓட்டபந்தயத்தில் ஓடி கொண்டு இருக்கிறோம். நம்முடைய இலக்கு தேவன் அழைத்த அழைப்பில் கடைசி வரை நிலைத்திருந்து, பரலோக ராஜ்ஜியத்தை சுதந்தரித்து, நித்திய ஜீவனை பெற்று கொள்வதுதான். அதற்கு நாம் நம் ஓட்டத்தில் நின்று, தினமும் தேவன் கொடுக்கிற கர்த்தருடைய வார்த்தையாகிய வேதத்தை வாசித்து, ஜெபித்து, அதன் மூலம் பெலத்தை பெற்று கொண்டவர்களாக நாம் தொடர்ந்து ஓட வேண்டும். அப்படி நின்று வேதத்தை வாசிக்காமல், ஜெபிக்காமல் நாம் ஓடுவோமானால், நம் ஆவிக்குரிய ஓட்டம், இடையில் தடைப்பட்டு, நாம் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியாமற் போய் விடும். நாம் ஆவிக்குரிய நிலையில் வற்றி போயிருக்கிறதை கூட அறியாமற் போய், இறுதியில் ஆவிக்குரிய சாவு நேரிடும்போது, துக்கித்து பிரயோஜனமில்லை!

‘நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாதுளூ நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்’ என்று இயேசுகிறிஸ்து கூறினார். அவர் கொடுக்கிற ஜீவ நீர் எது? அது நித்திய காலமாய் நம் இருதயத்தில ஊறுகிற பரிசுத்த ஆவியானவரே! அவர் நம் உள்ளத்தில் இருக்கும்போது, நமக்கு வேறு தண்ணீரை குடிக்க வேண்டும் என்கிற தாகம் வராது. அவர் நித்திய காலமாய் நம் இருதயத்தில் இருந்து, நம் தாகத்தை தீர்த்து வைப்பார்.

நாம் ஓடுகிற ஒட்டத்தில் பரிசுத்த ஆவியானவரின் நிறைவு நமக்கு மிகவும் அவசியம். தினமும் அவருடைய சமுகத்தில் காத்திருந்து, நம்மை தெளிவாக்கி கொண்டபிறகு நம் தின ஓட்டத்தை ஆரம்பித்தால், நிச்சயமாக அந்த நாள் முழுவதும் ஒரு இனிமையையும், ஆவியானவரின் வழிநடத்துதலையும் உணர முடியும். தினமும் அவருடைய கிருபையை பெற்று, நம்முடைய ஓட்டத்தை தொடர்ந்து ஓடி முடிக்க தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் … அல்லேலூயா!

நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்’ என்றார் (யோவான் 4:14)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 1 times, 1 visits today)