பக்தி வைராக்கியம்

பில்லிகிரஹாம் பொது கூட்டமொன்றில் கடிதம் ஒன்றை வாசித்தார். அது அமெரிக்க நாட்டு கல்லூரி மாணவன் ஒருவனால் எழுதப்பட்டிருந்தது. அவன் மெக்ஸிகோவிலிருந்த போது ஒரு கம்யூனிஸ்டாக மாறி விட்டான். அதினால் தான் விரும்பிய பெண்ணின் உறவை முறிக்க அவன் எழுதிய கடிதம் அது.

கடித்தத்தில் அவன் எழுதியிருந்தது: ‘கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்குள் மரண விபத்துகள் அதிகம். எங்கள் நடுவில் சுட்டு கொல்லப்படுகிறவர்களும், தூக்கிலிடப்படுபவர்களும், உயிரோடு வைத்து கொல்ல்பபடுகிறவர்களும், சிறையில் அடைக்கப்படுகிறவர்களும் ஏராளம், ஏராளம். நாங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவையும் கட்சிக்கு கொடுத்து விடுகிறோம். பொழுதுபோக்குகளாகிய படம், கச்சேரி, நடனம், ஆகியவற்றிற்கு செல்ல நேரமோ, பணமோ எங்களுக்கு கிடையாது. உலகம் முழுவதும் கம்யூனிச (கடவுள் இல்லை என்கிற கொள்கை) மயமாக்க வேண்டுமென்பதே எங்கள் ஒரே இலட்சியம்.

கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்கு ஒரு வாழ்க்கை தத்துவம் இருக்கிறது. அதை எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்க முடியாது. வாழ்க்கையில் எங்களுக்கு ஒரு நோக்கமும், இலட்சியமும் உண்டு. அதை நிறைவேற்றுவதற்காக நாங்கள் எங்கள் ஆசா பாசங்களை அடக்கி கட்டுப்படுத்துகிறோம். நான் என் உயிரினும் மேலாக வாஞ்சிப்பது என் கட்சி கொள்கையின் வளர்ச்சியையே.

அதன் முன் என் உணர்வு எல்லாம் பெரிதாக தோன்றவில்லை. என் கொள்கையின் மீதுள்ள என் பிடி நாளுக்கு நாள் இறுகுகிறதே அன்றி தளருவதில்லை. நான் இப்போதே சிறைவாசம் செல்கிறேன். துப்பாக்கி முனையில் என்னை பலியாக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன் ஆகவே எனனை மறந்து விடு’ என எழுதியிருந்தான். அதை பில்லிகிரஹாம் படித்த போது பல கிறிஸ்தவர்களின் உள்ளத்தில் சூடேறியது.

கம்யூனிஸ்டுகள் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கும், உயிரை பணயம் வைப்பதற்கும் வைராக்கியமாய் இருப்பார்களானால், கிறிஸ்தவர்களாகிய நாம் மகிமையின் ஆண்டவருக்காய் எவ்வளவு அதிக அன்புடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும்! கிறிஸ்துவின் மீது வாஞ்சையுள்ள ஒரு மனிதனின் நோக்கமெல்லாம் ஒன்றே, அது தேவனை பிரியப்படுத்துவதுதான். அவன் இருந்தாலும், இறந்தாலும், சுகமாய் இருந்தாலும், சுகவீனமாய் இருந்தாலும், பணக்காரனாயினும், ஏழையாயினும், புகழப்பட்டாலும், இகழப்பட்டாலும், கனமடைந்தாலும், கனவீனமடைந்தாலும் எதை குறித்தும் கவலைப்படாமல், ஒன்றிற்காக மட்டும் அவன் நெருப்பாய் எரிவான்.

அது தேவனை பிரியப்படுத்தி, அவரது மகிமையை வளர செய்வதே ஆகும். எரிந்து பிரகாசிக்கையில் சாம்பலாகி விட்டாலும், பரவாயில்லை, அதுதான் அவன் செய்து முடிக்கும்படி தேவன் அவனுக்கு நியமித்த வேலை என்று அறிந்து மகிழ்ச்சியடையவான்.

நமக்காக தம் ஜீவனையே கொடுத்து, நம்மை இரட்சித்த தேவனுக்காக நாம் எதையாவது செய்ய வேண்டாமா? கம்யூனிசவாதிகளை பார்க்கிலும், நாம் நம் ஜீவனுள்ள தேவனுக்காக மாபெரும் வைராக்கியம் பாராட்ட வேண்டாமா? இயேசுகிறிஸ்து தம்முடைய வீட்டைகுறித்து பக்தி வைராக்கியம் பாராட்டினார் என்றால், நாம் இந்த நாளில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

கிறிஸ்துவுக்காய் தினம் தினம் எதையாவது செய்ய வேண்டும் என்கிற வைராக்கியம் நமது இருதயத்தில் கொழுந்து விட்டு எரிய வேண்டாமா? எனக்கு இன்று வரை நான் எதையும் தேவனுக்காக செய்யவில்லையே, எதையாவது செய்ய வேண்டுமே என்கிற எண்ணம் எனக்குள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருக்கிறது. என் உயிர் இருக்கும் வரை அந்த வைராக்கியம் என்னை விட்டு அகலப்போவது இல்லை.

நாமும் கர்த்தருக்கென்று வைராக்கியம் பாராட்டுவோம். ஒரு சிலரை எனக்கு தெரியும், ஜாதி என்று பேச சொல்லுங்கள், மணிக்கணக்காக பேசுவார்கள், ஆனால் கர்த்தருடைய வார்த்தையை குறித்து கேளுங்கள், ஒன்றுமே தெரியாது. கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொண்டாலும், தேவையில்லாத ஜாதிக்காக வைராக்கியம், ஜனத்திற்காக வைராக்கியம் என்று வைராக்கியம் பாராட்டுகிற நாம், கர்த்தருக்காக எதை செய்தோம் என்று பார்த்தால், வெட்கப்பட்டுதான் நிற்போம்.

நம்மால் இயன்றதை கர்த்தருக்காக செய்வோமா? கர்த்தருக்காக பரிசுத்தமாக வாழ்வேன் என்று அதில் வைராக்கியம் பாராட்டுவோம், சினிமா பார்க்க மாட்டேன் என்றோ, சினிமா பாடலை கேட்க மாட்டேன் என்றோ, டிவி சீரியலை பார்கக மாட்டேன் என்று அதில் வைராக்கியம் பாராட்டும்போது, அதினால் கர்த்தர் மகிமைப்படுவார்! அப்படிப்பட்டதான வைராக்கியங்களை நாம் பாராட்டும்போது, சத்துரு வெட்கப்பட்டு போவான். தேவ நாமம் மகிமைப்படும். ஆமென் அல்லேலூயா!

அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்

(யோவான் 2:17)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 26 times, 1 visits today)