பாவத்தின் பலன்

அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட கிராமத்திலே பாம்பாட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார். தன்னிடமிருந்த ஒரு மலைப் பாம்பைக் கொண்டு வேடிக்கைக்காட்டி அதன் மூலம் வரும் பணத்தால் வாழ்க்கை நடத்திக் கொண்டு வந்தார். பொது மக்கள் கூடுகின்ற இடத்திற்கு சென்று அப்பாம்பிடம் தன்னை சுற்றிக் கொள்ளவும், தன் மேல் ஏறவும் இறங்கவும் கட்டளையிடுவார். அவர் சொற்படியே பாம்பும் செயல்படும். மக்கள் இதை ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்து காசுகளைக் கொடுப்பார்கள்.

இவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுவார்கள், ‘பாம்போடே விளையாடாதே, அது என்றாவது ஒருநாள் அதன் குணத்தைக் காட்டிவிடும். வேறு ஏதாவது நல்ல தொழிலை செய்து பிழை’ என்பார்கள். ஆனால் அவரோ அதை காதில் போட்டுக் கொள்ளாமல் வழக்கம் போல செய்து வந்தார். ஒரு நாள் மக்கள் மத்தியில் பாம்போடு வேடிக்கைக் காட்டி தன்னைச் சுற்றிக் கொள்ளுமாறு பாம்பிற்கு கட்டளையிட்டார். அதுவும் அவரது கால்களில் எறி கழுத்து, தலை வரை சுற்றிக் கொண்டது. அதோடு அவர் மக்களை மகிழ்விக்க நடனமாடினார். சில நிமிடங்களில் இறங்க கட்டளையிட்டார். ஆனால் பாம்பு ஆக்ரோஷமாக அவரை இறுக்கியது. எலும்புகள் நொறுங்கின. வாயிலிருந்து இரத்தம் வடிய மாண்டு போனார்.

பிரியமானவர்களே, நம்மில் சிலர் கூட சிற்றின்பத்திற்காகவும், நண்பர்களின் உறவு அறுந்துப் போகக் கூடாது என்று எண்ணியும் பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கலாம். அது போதைப் பொருள், அசுத்த சினிமா, ஆபாச புத்தகங்கள், மதுபானம், கூடாத நட்பு, பான் பராக் என ஏதோ ஒன்றாக இருக்கலாம். வேதமும் தேவனும் அநேக முறை அதை விட்டுவிட எச்சரித்தும் அதை கேட்காமல், பாவத்திலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கலாம். நண்பரே, இப்போது இன்பமாய் தோன்றும் இச்செயல்கள், ஒரு நாள் உங்கள் வாழ்க்கையையே அழித்துவிடும். தனிமையில் குற்ற உணர்வு உங்களை உருக்குலைத்து விடும். பாவம் உங்கள் எதிர்கால இலட்சியத்தை அழித்து விடும். பாவம் உங்களைக் குறித்து தேவன் வைத்துள்ள திட்டத்தை சிதைத்து விடும். முடிவில் பாவம் உங்களை பாதாளத்தில் தள்ளிவிடும்.

பாம்போடே வருடக்கணக்கில் பழகின அவரின் நிலை ஒரு நாளில் பரிதாபத்திற்குள்ளானதல்லவா? பாவம் தன் உண்மை சுபாவத்தை காண்பிக்குமுன் மனம் மாறி, அந்த கெட்ட பழக்கங்களிலிருந்து வெற்றியை பெற்று விட முயற்சியுங்கள். ஆரம்பத்தில் கடினமாக தோன்றும் காரியம் மனம் வைத்து விடா முயற்சி செய்யும்போது, அதை விட்டு விலக முடியும். பரிசுத்த ஆவியானவின் துணையுடன் அவற்றை வெல்ல ஜெபத்தோடு பாவ வழக்கங்களைவிட்டுவிட ஜெபியுங்கள்.

‘கர்த்தருடைய கிருபை அவருடைய உடன்படிக்கையைக்கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது’ – (சங்கீதம் 103:18). அந்த கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபட்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே அவருடைய கிருபை இருக்கிறதாம். நினைத்தாலே போதும் கர்த்தருடைய கிருபை இறங்கி வந்து, உங்களை அந்த பாவக் கட்டுகளிலிருந்து, விடுவிக்க தேவன் உதவி செய்வார்.

உங்கள் வாலிப நாட்களை வீணாக கெடுத்து, வாழ்ககையை கெடுத்துக் கொள்ளாதிருங்கள். அனேக வாலிபர், இந்த பழக்கங்களை ஆரம்பித்து பின் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பதைப்பார்த்து கண்ணீரோடு ஜெபித்திருக்கிறேன். அன்பு நண்பர்களே, வேண்டாம் இந்த கொடிய பழக்கங்கள்! அது உங்கள் உறவுகளை கண்ணீர் விட வைக்கும், அவர்களை துணையற்றவர்களாக்கி விடும். சாத்தானின் தந்திரத்தில் சிக்கி உங்கள் வாழ்க்கையை நரகமாக்கி விடாதிருங்கள்.

ஆரம்பத்தில் சுவையாகத் தோன்றும் இவைகள் உங்கள் சுகத்தை திருடிவிடும். ஒருமுறை போன சுகம் திரும்ப உங்களுக்கு வராது. உங்கள் சரீர பாண்டங்களை பரிசுத்தமாய் காத்துக் கொள்ளுங்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. ஆகவே தயவு செய்து இந்தப் பழக்கங்களில் ஈடுபட்டு உங்களை கறைப்படுத்திக் கொள்ளாதிருங்கள். இவற்றிலிருந்து விடுபட ஒரே வழி இயேசுகிறிஸ்துதான். அவரை அண்டிக்கொள்ளுங்கள். பரிகாரியாகிய அவர் நீங்கள் விடுபடும்படி உதவி செயவார்!

முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும் (நீதிமொழிகள் – 23: 32).

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 2 times, 1 visits today)