பெருமைக்கு எதிர்த்து நிற்போம்

கிறிஸ்தவ வாழ்க்கையில் சோதனைகள் அதிகம். ஓவ்வொரு சோதனையும் ஒரு யுத்தத்திற்கு சமமானதாகும். யுத்தத்தில் வெற்றி பெற்றால் யுத்தத்திற்கு முன்பாக எவ்வளவு கவனமாய் இருந்தோமோ அதைவிட இருமடங்கு அதிக கவனம் தேவை. வெற்றிக்கு பின் அதிக ஞானத்தோடும், பொறுமையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டும்.

வெற்றி களிப்பில் தான் பெருமையான எண்ணஙகள் நம் இருதயத்தில் தலை தூக்கும். சாத்தான் நம்மை கீழே விழ வைக்கும் ஒரு மறைவான கண்ணி என்றும் இந்த பெருமையை கூறலாம்.

டி.எல் மூடி ( D.L. Moody ) என்ற தேவ ஊழியர், ஒரு முறை இங்கிலாந்து தேசத்திலுள்ள ஒரு மாநகரில் மிகப் பெரிய கன்வென்ஷன் கூட்டத்தில் பேசிவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினார். படிகட்டை தாண்டியதும் ஒரு நபர் விரைந்து வந்து மூடியின் கையை குலுக்கி, ‘இன்று மிக அற்புதமாக பேசினீர்கள்’ என்று பாராட்டினார்.

உடனே மூடி ‘இன்று என்னை பாராட்டும் இரண்டாவது நபர் நீங்கள்’ என்றார். இந்த நபர் குழம்பி போய் தனக்கு முன் எவரையும் காணாததினால் ‘எனக்கு முன்னால் உங்களை பாராட்டியது யார்?’என்று கேட்டார். மூடி கூறினார், ‘நான் செய்தியை முடித்து விட்டு கீழே இறங்கும் முன்பாக சாத்தான் என் காதில் வந்து, ‘ மூடியாரே இன்று உம் பிரசங்கம் மிகவும் அபாரம் என்று பாராட்டினான்’ என்றார்.

மூடி பிரசங்கியாருக்குள் பெருமை என்ற பாவத்தை நாசுக்காக புகுத்த சாத்தான் எடுத்த தந்திரத்தை பாருங்கள். ஆம் சாத்தான் நம்மை வீழ்த்த பொறாமை, பெருமை போன்ற வெளியரங்கமாய் தெரியாத வஞ்சிக்கிற பாவங்களால் நம்மை விழத்தள்ள சந்தர்ப்பம் பார்த்து கொண்டே இருக்கிறான் என்பதை மறந்து போக கூடாது. ஆகவே எப்போதும் விழிப்பாயிருக்க வேண்டும்.

பொதுவாக, வேதவசனத்தின்படி வாழ வாஞ்சிக்கும் நாம் பெருமைக்கு விலகி இருக்க ஜாக்கிரதையாகவே இருப்போம். ஆனால், சில நேரங்களில் நற்காரியத்தை தேவநாமத்தின் மகிமைக்காக செய்யும்போது இதை பிறர் பாராட்டும் போது நம்மையும் அறியாமல் பெருமையான எண்ணம் நுழைந்து விடுகிறது. மறுமுறை இத்தகைய நற்காரியம் செய்யும்போது மனிதர்களின் பாராட்டை எதிர்ப்பார்க்கிறோம். அவர்கள் பாராட்டாத போது செய்த செயல் மீதும், பிறர் மீதும் சலிப்பு ஏற்படுகிறது.

ஆகவே தான் பிலிப்பியர் 2:3 ல் பவுல் கூறுகிறார், ‘ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்ய வேண்டாம்’ என்று கூறுகிறார். அப்போஸ்தலனாகிய யோவான் ஜீவனத்தின் பெருமையை மாம்சத்தின் இச்சையோடும் கண்களின் இச்சையோடும் பட்டியலிட்டுள்ளார்.

பிரியமானவர்களே, கர்த்தருக்கு பயந்து வாழ விரும்பும் ஒவ்வொருவரையும், பிசாசு தந்திரமாய் பாவத்தில் விழ வைக்க எண்ணுகிறான். அதில் குறிப்பாக, மாயையான தாழ்மை என்னும் மறைமுக பெருமையையும் புகுத்தி விடுகிறான்.

சாத்தானின் இப்படிப்பட்ட தந்திரங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சரியான நேரத்தில் இதை இனம் கண்டறிந்து எதிர்த்து நிற்க முடியும். ஆகவே வேத வசதனத்தை தெளியாய் அறிந்தவர்களாக ஜெபத்திலே எப்போதும் விழிப்பாயிருக்க வேண்டும்.

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
(எபேசியர் 6:11)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 7 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *