இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு

1. இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு பின்வருமாறு: தாவீதின் வழி வந்த வர் இயேசு. தாவீது ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

2. ஆபிரகாமின் மகன் ஈசாக்கு. ஈசாக்கின் மகன் யாக்கோபு. யாக்கோபின் பிள்ளைகள் யூதாவும் அவன் சகோதரர்களும்.

3. யூதாவின் மக்கள் பாரேசும் சாராவும் (அவர்களின் தாய் தாமார்.) பாரேசின் மகன் எஸ்ரோம். எஸ்ரோமின் மகன் ஆராம்.

4. ஆராமின் மகன் அம்மினதாப். அம்மினதாபின் மகன் நகசோன். நகசோனின் மகன் சல்மோன்.

5. சல்மோனின் மகன் போவாஸ். (போவாசின் தாய் ராகாப்.) போவாசின் மகன் ஓபேத். (ஓபேத்தின் தாய் ரூத்.) ஓபேத்தின் மகன் ஈசாய்.

6. ஈசாயின் மகன் அரசனான தாவீது. தாவீதின் மகன் சாலமோன். (சாலமோனின் தாய் உரியாவின் மனைவி.)

7. சாலமோனின் மகன் ரெகொபெயாம். ரெகொபெயாமின் மகன் அபியா. அபியாவின் மகன் ஆசா.

8. ஆசாவின் மகன் யோசபாத். யோசபாத்தின் மகன் யோராம். யோராமின் மகன் உசியா.

9. உசியாவின் மகன் யோதாம். யோதாமின் மகன் ஆகாஸ். ஆகாஸின் மகன் எசேக்கியா.

10. எசேக்கியாவின் மகன் மனாசே. மனாசேயின் மகன் ஆமோன். ஆமோனின் மகன் யோசியா.

11. யோசியாவின் மக்கள் எகொனியாவும் அவன் சகோதரர்களும். (இக்காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.)

12. அவர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்: எகொனியாவின் மகன் சலாத்தியேல். சலாத்தியேலின் மகன் சொரொபாபேல்.

13. சொரொபாபேலின் மகன் அபியூத். அபியூத்தின் மகன் எலியாக்கீம். எலியாக்கீமின் மகன் ஆசோர்.

14. ஆசோரின் மகன் சாதோக். சாதோக்கின் மகன் ஆகீம். ஆகீமின் மகன் எலியூத்.

15. எலியூத்தின் மகன் எலியாசார். எலியாசாரின் மகன் மாத்தான். மாத்தானின் மகன் யாக்கோபு.

16. யாக்கோபின் மகன் யோசேப்பு. யோசேப்பின் மனைவி மரியாள். மரியாளின் மகன் இயேசு. கிறிஸ்து என அழைக்கப்பட்டவர் இயேசுவே.

17. எனவே ஆபிரகாம் முதல் தாவீதுவரை பதினான்கு தலைமுறைகள். தாவீது முதல் யூதர்கள் அடிமைப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதுவரைக்கும் பதினான்கு தலைமுறைகள். யூதர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதிலிருந்து கிறிஸ்து பிறக்கும்வரை பதினான்கு தலைமுறைகள்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு

18. இயேசு கிறிஸ்துவின் தாய் மரியாள். இயேசுவின் பிறப்பு இப்படி நிகழ்ந்தது. மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவர்கள் திருமணத்திற்கு முன்பே மரியாள் தான் கருவுற்றிருப்பதை அறிந்தாள். பரிசுத்த ஆவியின் வல்லமையால் மரியாள் கருவுற்றிருந்தாள்.

19. மரியாளின் கணவனாகிய யோசேப்பு மிகவும் நல்லவன். மக்களின் முன்னிலையில் மரியாளை அவன் அவமதிக்க விரும்பவில்லை. எனவே யோசேப்பு மரியாளை இரகசியமாகத் தள்ளிவிட நினைத்தான்.

20. யோசேப்பு இந்த சிந்தையாயிருக்கும்பொழுது, கர்த்தருடைய தூதன் யோசேப்பின் கனவில் தோன்றி, “தாவீதின் மகனாகிய யோசேப்பே, மரியாளை உன் மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயங்காதே. அவள் கருவிலிருக்கும் குழந்தை பரிசுத்த ஆவியானவரால் உண்டானது.

21. அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அக்குழந்தைக்கு இயேசு  எனப் பெயரிடு. அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார்” என்றான்.

22. இவையெல்லாம் தீர்க்கதரிசியின் மூலமாகத் தேவன் சொன்னவைகளின் நிறைவேறுதல்களாக நடந்தன. தீர்க்கதரிசி சொன்னது இதுவே:

23. “கன்னிப் பெண் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்.”  (இம்மானுவேல் என்பதற்கு, “தேவன் நம்முடன் இருக்கிறார்” என்று பொருள்.)

24. விழித்தெழுந்த யோசேப்பு, கர்த்தருடைய தூதன் சொன்னபடியே மரியாளை மணந்தான்.

25. ஆனால் மரியாள் தன் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவளை அறியவில்லை. யோசேப்பு அவருக்கு, “இயேசு” எனப் பெயரிட்டான்.

மத்தேயு அதிகாரங்கள்:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

(Visited 21 times, 1 visits today)