இயேசுவைக்குறித்த விமர்சனம்
1. அப்போது இயேசு, யூதர்களுக்கு முக்கியமான வாரத்தின் ஓய்வு நாளன்று வயல் வெளியில் நடந்து கொண்டிருந்தார். இயேசுவின் சீடர்கள் அவருடன் இருந்தனர். அவர்கள் பசியுடனிருந்தனர். எனவே, சீடர்கள் கதிர்களைப் பிடுங்கி உண்டனர்.
2. இதைப் பரிசேயர்கள் பார்த்தார்கள். அவர்கள் இயேசுவிடம்,, “பாருங்கள். யூதச்சட்டத்துக்கு எதிராக ஓய்வு நாளில் செய்யக் கூடாததை உங்கள் சீடர்கள் செய்கிறார்கள்” என்றனர்.
3. இயேசு அவர்களிடம்,, “தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா?
4. தேவனுடைய வீட்டிற்குச் சென்றான். தேவனுக்குக் காணிக்கையாக்கப்பட்ட அப்பத்தைத் தாவீதும் மற்றவர்களும் உண்டார்கள். அந்த அப்பத்தை உண்டது குற்றமா? ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தை உண்ணலாம்.
5. நீங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் படித்திருக்கிறீர்கள். அதாவது ஓய்வு நாளில் ஆலயங்களில் ஆசாரியர்கள் ஓய்வு கொள்ளாமல் சட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்று. ஆனால், அவ்வாறு செய்யும் ஆசாரியர்கள் குற்றம் செய்தவர்கள் அல்ல.
6. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆலயத்தைக் காட்டிலும் மேலானவர் இங்கே இருக்கிறார்.
7. வேதாகமம் கூறுகிறது, ‘எனக்கு விலங்குகளைப் பலியிடுவது விருப்பமானதல்ல. மக்களிடம் இரக்கத்தையே நான் விரும்புகிறேன்,’ அவ்வார்த்தைகளின் உண்மையான பொருள் உங்களுக்குத் தெரியாது. அதன் பொருளை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாக்கமாட்டீர்கள்.
8. “மனித குமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார்” என்று பதிலுரைத்தார்.
சூம்பிய கையைக் குணமாக்குதல்
9. இயேசு அவ்விடத்தைவிட்டு, ஜெப ஆலயத்துக்குள் நுழைந்தார்.
10. ஜெப ஆலயத்துக்குள் சூம்பிய கையுடன் ஒருவன் இருந்தான். இயேசுவின்மேல் குற்றம் சுமத்துவதற்கான ஒரு காரணத்தைத் தேடி சில யூதர்கள் அங்கிருந்தனர். எனவே அவர்கள் இயேசுவிடம்,, “ஓய்வு நாளில் குணப்படுத்துவது சரியா?” என்று கேட்டார்கள்.
11. இயேசு,, “உங்களில் யாருக்கேனும், ஓர் ஆடு இருந்து அது ஓய்வு நாளில் ஒரு குழியில் விழுந்தால், நீங்கள் அதைக் குழியில் இருந்து தூக்கி எடுப்பீர்கள் அல்லவா?
12. ஓர் ஆட்டைக் காட்டிலும் மனிதன் நிச்சயமாக மேலானவன். எனவே, ஓய்வு நாளில் நற்செயல்களைச் செய்ய மோசேயின் நியாயப்பிரமாணம் அனுமதிக்கின்றது” என்று பதிலளித்தார்.
13. பிறகு, இயேசு சூம்பிய கையுடைய மனிதனிடம்,, “எங்கே உன் கைகளைக் காட்டு!” என்றார். அவன் இயேசு காணுமாறு தன் சூம்பியகையை நீட்டினான். அது மற்ற கையைப்போல குணமாயிற்று.
14. ஆனால் பரிசேயர்கள் இயேசுவைக் கொல்லத் திட்டம் தீட்டியவாறு அங்கிருந்து விலகிச் சென்றனர்.
இயேசு தேவனின் ஊழியர்
15. பரிசேயர்களின் எண்ணத்தை அறிந்த இயேசு, அவ்விடத்தை விட்டு நீங்கினார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். இயேசு நோயாளிகள் அனைவரையும் குணமாக்கினார்.
16. ஆனால், தான் யாரென்பதை மற்றவர்களிடம் கூறக் கூடாது என அவர்களை எச்சரித்தார்.
17. ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது நடக்கும்படிக்கு இயேசு இவ்வாறு செய்தார். ஏசாயா சொன்னது இதுவே,
18. “இதோ என் ஊழியன். நான் இவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் இவரை நேசிக்கிறேன்; இவரைக்குறித்து நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். என் ஆவியை இவர்மேல் அமரச்செய்வேன். இவர் தேசங்களுக்கு (என்) நேர்மையான நியாயத்தைக் கூறுவார்.
19. இவர் வாக்குவாதம் செய்யார்; கூக்குரல் செய்யார். வீதிகளில் உள்ள மக்கள் இவர் குரலைக் கேளார்.
20. ஏற்கெனவே வளைந்த நாணலைக்கூட இவர் உடைக்கமாட்டார். அணையப்போகிற விளக்கைக்கூட இவர் அணைக்கமாட்டார். நியாயத்தீர்ப்பு செய்து முடிக்கும்வரை இவர் தம் முயற்சியில் தளரமாட்டார்.
21. எல்லா மக்களும் இவரிடம் நம்பிக்கைக்கொள்வார்கள்.”
இயேசுவின் வல்லமை
22. பின்னர், சிலர் இயேசுவிடம் ஒரு மனிதனை அழைத்து வந்தனர். குருடனான அவனால் பேசவும் முடியவில்லை. ஏனென்றால் அவனுக்குள் ஒரு பிசாசு இருந்தது. இயேசு அவனைக் குணப்படுத்தினார். அவனால் பார்க்கவும் பேசவும் முடிந்தது.
23. வியப்புற்ற மக்கள்,, “தேவன் தாம் அனுப்பிவைப்பதாக வாக்களித்த தாவீதின் குமாரன் இவர்தான் போலும்!” என்றனர்.
24. மக்கள் இவ்வாறு கூறுவதைப் பரிசேயர்கள் கேட்டனர். பரிசேயர்கள்,, “பெயல்செபூலின் வல்லைமையையே இயேசு பிசாசுகளை ஓட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்” என்று கூறினர். பெயல்செபூல் பிசாசுகளின் தலைவன்.
25. இயேசு பரிசேயர்களின் எண்ணங்களை அறிந்தார். எனவே இயேசு,, “தனக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் பிரிவுகளைக்கொண்ட எந்த இராஜ்யமும் அழிந்துவிடும். பிரிவுகொள்ளுகின்ற எந்த நகரமும் நிலைக்காது. பிரிகின்ற எந்தக் குடும்பமும் முன்னேற்றம் அடையாது.
26. எனவே சாத்தான் தன்னுடைய பிசாசுகளையே துரத்தினால், சாத்தான் பிரிந்திருக்கிறான். எனவே சாத்தானின் இராஜ்யம் நிலைத்திருக்காது.
27. நான் பிசாசுகளை விரட்டும்பொழுது சாத்தானின் வல்லமையை நான் பயன்படுத்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள். அது உண்மையெனில், உங்கள் மனிதர்கள் பிசாசுகளை விரட்ட எந்த சக்தியைப் பயன்படுத்துகிறார்கள்? எனவே, உங்கள் மக்களே நீங்கள் சொல்வது பொய் என்று நிரூபிக்கிறார்கள்.
28. ஆனால், பிசாசுகளை விரட்ட நான் தேவ ஆவியின் வல்லமையைப் பயன்படுத்துகிறேன். தேவனுடைய இராஜ்யம் உங்களிடம் வந்துள்ளது என்பதை இது காட்டுகிறது.
29. ஒருவன் வலிமையான மனிதனின் வீட்டுக்குள் புகுந்து திருட நினைத்தால், முதலில் அவ்வலிமையான மனிதனைக் கட்டிப்போட வேண்டும். பின்னரே, அவன் அவ்வலிமையான மனிதனின் வீட்டிலிருந்து பொருட்களைத் திருட முடியும்.
30. என்னுடன் இல்லாதவன் எனக்கு எதிரானவன். என்னுடன் சேர்ந்து செயல் புரியாதவன் எனக்கு எதிராகச் செயல்படுகிறவன்.
31. “அதனால் நான் சொல்லுகிறேன், மனிதர்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னிக்கப்படுவார்கள். மேலும் மனிதர்கள் சொல்லுகின்ற எல்லாத் தீயவற்றுக்கும் மன்னிப்புண்டு. ஆனால், பரிசுத்த ஆவிக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்காது.
32. மனித குமாரனுக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்கும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்காது. இப்பொழுதோ அல்லது எதிர்காலத்திலோ அவன் மன்னிக்கப்படமாட்டான்.
செயல்கள் வெளிப்படுத்தும் உண்மை
33. “நல்ல பழங்கள் தேவையெனில், நல்ல மரத்தை வளர்க்க வேண்டும். மரம் தீயதானால், பழங்களும் தீயனவாகும். ஒரு மரத்தின் தரம் அதன் பழங்களைக்கொண்டே அறியப்படும்.
34. பாம்புகள் நீங்கள்! பொல்லாதவர்கள் நீங்கள்! நீங்கள் எப்படி நல்லவற்றைக் கூற முடியும். உள்ளத்திலுள்ளதையே வாய் பேசுகிறது.
35. ஒரு நல்லவன் தன் உள்ளத்தில் நல்லவைகளை வைத்திருக்கிறான். எனவே அவன் நல்லவைகளை உள்ளத்திலிருந்து பேசுகிறான். ஆனால் பொல்லாத மனிதன் தன் உள்ளத்தில் பொல்லாதவைகளைச் சேர்த்து வைத்திருக்கிறான். எனவே அவன் பொல்லாதவைகளைத் தன் உள்ளத்திலிருந்து பேசுகிறான்.
36. மனிதர்கள் தாங்கள் பேசுகிற கவனமற்ற வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். இது நியாயத்தீர்ப்பு வழங்கப்படுகிற நாளில் நடக்கும்.
37. உங்களது வார்த்தைகளே உங்களுக்கு நியாயம் வழங்க பயன்படுத்தப்படும். உங்களது வார்த்தைகளே உங்களை நல்லவரென்றும் உங்கள் வார்த்தைகளே உங்களைத் தீயோர் என்றும் நியாயம் தீர்க்கும்” என்று சொன்னார்.
யூதர்கள் ஆதாரம் கேட்டல்
38. பின்னர், பரிசேயர்கள் சிலரும் வேதபாரகர்கள் சிலரும் இயேசுவுக்கு மறுமொழி கூறினார்கள். அவர்கள்,, “போதகரே, உம்மை நிரூபிக்கும்படியாக ஓர் அற்புதம் செய்து காட்டும்” என்று கேட்டனர்.
39. அதற்கு இயேசு, “பொல்லாதவர்களும் பாவிகளும்தான் அற்புதங்களை ஆதாரமாகக் கேட்பார்கள். ஆனால், எந்த அற்புதமும் அவர்களுக்கு ஆதாரமாகக் காட்டப்படமாட்டாது. தீர்க்கதரிசி யோனாவிற்கு நிகழ்ந்த அற்புதம் மட்டுமே ஆதாரமாக கொடுக்கப்படும்.
40. யோனா ஒரு பெரிய மீனின் வயிற்றில் மூன்று பகலும் மூன்று இரவுகளும் இருந்தான். அதைப் போலவே, மனித குமாரனும் கல்லறைக்குள் மூன்று பகலும் மூன்று இரவுகளும் இருப்பார்.
41. மேலும் நியாயத்தீர்ப்பு வழங்கும் நாளில் நினிவே பட்டணத்து மனிதர் உயிர்த்தெழுந்து இன்று வாழ்கின்ற உங்கள் தவறுகளை நிரூபிப்பார்கள். ஏனென்றால், யோனாவின் போதனையைக் கேட்டு, அவர்கள் மனந்திரும்பினார்கள். நான் சொல்லுகிறேன், நான் யோனாவைக் காட்டிலும் மேன்மையானவன்.
42. “நியாயத்தீர்ப்பு வழங்கும் நாளில், தென்திசையின் அரசி உயிர்த்தெழுந்து உங்கள் மேல் குற்றம் சுமத்துவாள். ஏனென்றால், அந்த அரசி மிகத் தொலைவிலிருந்து சாலமோனின் ஞானம் செறிந்த போதனைகளைக் கேட்க பயணப்பட்டு வந்தாள். நான் சொல்லுகிறேன், நான் சாலமோனைக் காட்டிலும் மேலானவன்.
திரும்பி வரும் தீய ஆவி
43. “பிசாசின் பொல்லாத ஆவி ஒரு மனிதனுக்குள்ளிருந்து வெளியில் வரும்பொழுது, வறண்ட நிலப்பகுதியில் ஓய்விடம் தேடி அலைகிறது. ஆனால், அதற்கு ஓய்விடம் கிடைப்பதில்லை.
44. எனவே, அந்த ஆவி, ‘நான் புறப்பட்ட இடத்திற்கே திரும்பச் செல்வேன்’ என்று சொல்லி அந்த ஆவி திரும்பி அதே மனிதனிடம் வரும்பொழுது, அது இருந்த இடம் வெறுமையாயும் சுத்தமாயும் ஒழுங்குடனும் இருப்பதை அறிகிறது.
45. பின்னர், வெளியேறித் தன்னிலும் பொல்லாத மேலும் ஏழு பொல்லாத ஆவிகளை அழைத்து வருகிறது. எல்லா ஆவிகளும் அவனுக்குள் புகுந்து வசிக்கின்றன. முன்பைவிட அவனுக்கு ஆழ்ந்த தொல்லை ஏற்படுகிறது. இன்று வாழ்கின்ற பொல்லாதவர்களுக்கும் அப்படியே நேரும்” என்று பதிலளித்தார்.
இயேசுவின் குடும்பத்தினர் யார்?
46. இயேசு மக்களிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது அவரது தாயும் சகோதரர்களும் வெளியில் நின்றிருந்தனர். அவர்கள் இயேசுவிடம் பேச விரும்பினர்.
47. ஒருவன் இயேசுவிடம்,, “உம் தாயும் சகோதரர்களும் வெளியில் காத்திருக்கின்றனர். அவர்கள் உம்மிடம் பேச விரும்புகிறார்கள்” என்றான்.
48. இயேசு,, “யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?” என்று கேட்டார்.
49. தன் சீஷர்களைச் சுட்டிக் காட்டி,, “பாருங்கள்! இவர்களே என் தாயும் சகோதரர்களும்.
50. பரலோகிலிருக்கும் என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்களே என் உண்மையான சகோதர சகோதரிகளும் தாயும் ஆவார்கள்” என்று அவனுக்கு பதிலளித்தார்.
மத்தேயு அதிகாரங்கள்:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28