ஸ்நானகன் யோவானின் திருப்பணி
1. அந்நாட்களில் யோவான் ஸ்நானகன் யூதேயாவின் வனாந்தரத்தில் வருகை புரிந்து,
2. “உங்கள் மனதையும் வாழ்வையும் சீர்ப்படுத்துங்கள். ஏனென்றால் பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று போதனை செய்தான்.
3. “‘கர்த்தருக்கான வழியை ஆயத்தம் செய்யுங்கள்; அவரது பாதையை சீர்ப்படுத்துங்கள்’ என்று வனாந்தரத்தில் ஒருவன் சத்தமிடுகிறான்” என தீர்க்கதரிசியாகிய ஏசாயா குறிப்பிட்டது இந்த யோவான் ஸ்நானகனைப் பற்றிதான்.
4. ஒட்டக உரோமத்தால் ஆன ஆடையை அணிந்து தோல் கச்சையொன்றைத் தன் இடுப்பில் இவன் கட்டியிருந்தான். வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவன் உணவாயிருந்தன.
5. யோவானின் போதனையைக் கேட்க எருசலேமிலிருந்தும் யூதேயா முழுவதிலிருந்தும் யோர்தான் நதிக்கரை முழுவதிலிருந்தும் மக்கள் வந்தனர்.
6. அம்மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கைச் செய்தனர். யோவான் அவர்களுக்கு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் கொடுத்தான்.
7. ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்த இடத்திற்கு பரிசேயர் மற்றும் சதுசேயரில் பலரும் வந்தனர். அவர்களைக் கண்டதும் யோவான்,, “நீங்களெல்லோரும் பாம்பின் குட்டிகள். வரப்போகும் தேவனின் கோபத்திலிருந்து தப்பிச்செல்ல உங்களை எச்சரித்தது யார்?
8. உங்கள் மனமும் வாழ்வும் திருந்திவிட்டன என்பதை நிரூபிக்கக் கூடிய செயலை நீங்கள் செய்யவேண்டும்.
9. நாம் ஆபிரகாமின் பிள்ளைகள் எனப் பெருமை பேசித் திரியலாம் என எண்ணாதீர்கள். நான் சொல்கிறேன், ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை இங்குள்ள கற்களிலிருந்தும் உண்டாக்க தேவன் வல்லவர்.
10. மரங்களை வெட்டக் கோடரி தயாராக இருக்கிறது. நற்கனிகளைத் தராத எல்லா மரங்களும் வெட்டப்பட்டுத் தீயிலிடப்படும்.
11. “உங்கள் மனமும் வாழ்வும் திருந்திவிட்டன என்பதைக் காட்ட நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் தருகிறேன். ஆனால், என்னிலும் பெரியவர் ஒருவர் வரப்போகிறார். அவர் காலணிகளை அவிழ்க்கவும் நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
12. அவர் தானியங்களைச் சுத்தம் செய்யத் தயாராக வருவார். அவர் பதரிலிருந்து நல்ல தானிய மணிகளைப் பிரித்தெடுத்துத் தன் களஞ்சியத்தில் சேர்ப்பார். பதரையோ அணைந்து போகாத தீயிலிட்டு எரிப்பார்” என்றான்.
இயேசுவின் ஞானஸ்நானம்
13. அப்பொழுது இயேசு கலிலேயாவிலிருந்து யோர்தான் நதிக்கரைக்கு வந்தார். இயேசு யோவானிடம் சென்று தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கேட்டார்.
14. ஆனால் யோவானோ இயேசுவுக்குத் தான் ஞானஸ்நானம் கொடுக்குமளவுக்கு மேன்மையானவன் அல்ல என்று அவரைத் தடுக்க முயன்றான். எனவே யோவான் இயேசுவிடம்,, “நீர் என்னிடம் ஞானஸ்நானம் பெறலாகுமோ? நான்தான் உம்மிடம் ஞானஸ்நானம் பெறவேண்டும்” என்றான்.
15. அதற்கு இயேசு,, “தற்பொழுது நான் சொல்லுகிறபடியே செய். தேவன் எதிர்பார்க்கும் நீதியான செயல்கள் அனைத்தையும் நான் செய்ய வேண்டும்” என்று பதில் சொன்னார். ஆகவே, யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கச் சம்மதித்தான்.
16. இயேசு ஞானஸ்நானம் பெற்று, நீரிலிருந்து மேலெழுந்து வந்தபோது, வானம் திறந்து, தேவ ஆவியானவர் ஒரு புறாவைப் போலக் கீழிறங்கி அவரிடம் வருவதைக் கண்டார்.
17. வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. அக்குரல்,, “இவர் (இயேசு) என் குமாரன். நான் இவரை நேசிக்கிறேன். நான் இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன்” எனக் கூறியது.
மத்தேயு அதிகாரங்கள்:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28