இயேசுவின் மலைப் பிரசங்கம்

1. அங்குக் கூட்டமாயிருந்த மக்களைப் பார்த்த இயேசு ஒரு குன்றின்மீது சென்று அமர்ந்தார். அவரது சீஷர்கள் அவரிடம் வந்தார்கள்.

2. இயேசு மக்களுக்குக் கீழ்க்கண்டவாறு போதனை செய்தார்:

3. “ஆவியில் எளிமை கொண்ட மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பரலோக இராஜ்யம் அவர்களுக்குரியது.

4. இம்மையில் துக்கம் அடைந்த மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் அவர்களைத் தேற்றுவார்.

5. பணிவுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் வாக்களித்த இடத்தை  அவர்கள் பெறுவார்கள்.

6. மற்ற எதைக் காட்டிலும் நீதியான செயல்களைச் செய்ய விரும்புகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு முழுத்திருப்தியைத் தேவன் அளிப்பார்.

7. மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கருணை காட்டப்படும்.

8. தூய்மையான எண்ணமுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தேவனின் அருகாமையிலிருப்பார்கள்.

9. அமைதிக்காகச் செயலாற்றுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் அவர்களைத் தன் குமாரர்கள் என அழைப்பார்.

10. நன்மை செய்வதற்காகத் தண்டிக்கப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரலோக இராஜ்யம் அவர்களுக்குரியது.

11. “உங்களுக்கெதிராகத் தீய சொற்களைப் பேசி மக்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதினிமித்தம் எல்லாவிதமான தீய சொற்களையும் உங்களுக்கெதிராகச் சொல்வார்கள். ஆனால் மக்கள் உங்களுக்கு அவற்றைச் செய்யும்பொழுது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

12. அதற்காக மகிழ்ச்சியடையுங்கள். தேவனுடைய மகத்தான வெகுமதி உங்களுக்குக் காத்திருக்கிறது. உங்களுக்கு முன்பு வாழ்ந்த தீர்க்கதரிசிகளுக்கும் மக்கள் அதே விதமான தீமைகளைச் செய்தார்கள்.

உப்பு, ஒளி உவமைகள்

13. “பூமிக்கு நீங்கள் உப்பாக இருக்கிறீர்கள். தன் சுவையை உப்பு இழந்தால் மீண்டும் அதை உப்பாக மாற்றவோ, வேறு எதற்கும் பயன்படுத்தவோ முடியாது. அது தெருவில் எறியப்பட்டு மக்களால் மிதிக்கப்படும்.

14. “உலகுக்கு ஒளித்தரும் விளக்கு நீங்களே. ஒரு குன்றின் மேல் அமைந்த பட்டணம் மறைந்திருக்க முடியாது.

15. மக்கள் எரிகின்ற விளக்கைக் குடத்தின் கீழ் வைத்து மறைப்பதில்லை. மாறாக, அதை மக்கள் விளக்குத் தண்டின் மீது வைக்கிறார்கள். அப்பொழுது தான் விளக்கு வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தருகிறது.

16. அது போலவே, நீங்களும் மற்ற மனிதர்களுக்கு விளக்காக விளங்கவேண்டும். உங்களது நற்செயல்களை மற்றவர்கள் காணும்படி வாழுங்கள். பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவை மக்கள் புகழ்ந்து பேசுமாறு நீங்கள் வாழுங்கள்.

இயேசுவும் பழைய ஏற்பாடும்

17. “மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன்.

18. நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். வானமும் பூமியும் உள்ளவரைக்கும் கட்டளைகளில் எதுவும் மறையாது. அனைத்தும் நிறைவேறுகிற வரைக்கும் கட்டளைகளின் ஒரு சிறு எழுத்தோ அல்லது ஒரு சிறு எழுத்தின் பகுதியோ கூட மறையாது.

19. “ஒருவன் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக்கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமென்றும் கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்லுகிறவன் பரலோக இராஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பெறுவான்.

20. சட்டங்களைப் போதிக்கிறவர்களைவிடவும் பரிசேயர்களைவிடவும் நீங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களைவிடவும் சிறப்பாகச் செயல்படாவிட்டால், நீங்கள் பரலோக இராஜ்யத்தில் நுழையமாட்டீர்கள்.

கோபத்தைப் பற்றிய போதனை

21. “‘எவரையும் கொல்லாதே.  கொலை செய்கிறவன் தண்டிக்கப்படுவான்’ என்று வெகு காலத்திற்கு முன்னரே நமது மக்களுக்குச் சொல்லப்பட்டிருப்பதை அறிவீர்கள்.

22. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், யாரிடமும் கோபம் கொள்ளாதீர்கள். அனைவரும் உங்கள் சகோதரர்களே. நீங்கள் மற்றவர்களிடம் கோபம் கொண்டால், நீங்கள் நியாயந்தீர்க்கப்படுவீர்கள். மற்றவருக்கு எதிராகத் தீயவைகளைச் சொன்னால் யூத ஆலோசனைக் குழுவினால் தண்டிக்கப்படுவீர்கள். வேறொரு மனிதனை முட்டாள் என்று நீங்கள் அழைத்தால், நரகத் தீயின் ஆபத்துக்குள்ளாவீர்கள்.

23. “எனவே, நீங்கள் தேவனுக்கு உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்தும்பொழுது மற்றவர்களையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் காணிக்கையைச் செலுத்தும்பொழுது, உங்கள் சகோதரன் உங்கள் மீது வருத்தத்துடன் இருப்பது உங்கள் நினைவிற்கு வந்தால்,

24. உங்கள் காணிக்கையைப் பலிபீடத்திற்கு முன் வைத்துவிட்டு, சென்று அவனுடன் சமாதானமாகுங்கள். பின்னர் வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

25. “உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்திற்கு அழைத்தால், அவனுடன் விரைவாக நட்பாகுங்கள். நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பே அதைச் செய்ய வேண்டும். அவனுடன் நட்பாகாவிட்டால், அவன் உங்களை நீதிபதியிடம் ஒப்படைப்பான். மேலும், நீதிபதி உங்களைச் சிறையிலடைக்க காவலரிடம் ஒப்படைப்பார்.

26. நான் சொல்லுகிறேன், நீங்கள் கொடுக்கவேண்டியது அனைத்தையும் கொடுத்துத் தீர்க்கிறவரையிலும் உங்களால் அந்தச் சிறையை விட்டு மீளமுடியாது.

கற்பைக் குறித்த போதனை

27. “‘பிறன் மனைவியுடன் உறவுகொள்ளும் பாவத்தைச் செய்யாதே’  என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

28. ஆனால் நான் சொல்கிறேன். ஒரு பெண்ணைக் காமக் கண் கொண்டு நோக்கி, அவளுடன் உடலுறவுகொள்ள விரும்பினாலே, அவன் அவளுடன் விபச்சாரம் செய்தவனாகிறான்.

29. உங்கள் வலது கண் நீங்கள் பாவம் செய்யக் காரணமானால், அதைப் பிடுங்கி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஓர் உறுப்பை இழப்பது நன்று.

30. உங்கள் வலது கை உங்களைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஒரு பகுதியை இழப்பது நன்று.

விவாகரத்துப்பற்றிய போதனை

31. “‘தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவரும் அவளுக்கு எழுத்தின் மூலமாக சான்றிதழ் அளிக்க வேண்டும்’  என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

32. ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன் அவளை விபச்சாரப் பாவத்தின் குற்ற உணர்வுக்குள்ளாக்குகிறான். தன் மனைவி வேறொரு ஆடவனுடன் சரீர உறவு வைத்திருப்பது மட்டுமே ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்யத்தக்க காரணமாகும். விவாகரத்து செய்யப்பட்ட அப்பெண்ணை மணம் புரிகிறவனும் விபச்சாரம் செய்தவனாகிறான்.

வாக்குறுதிகளைப்பற்றிய போதனை

33. “‘நீ ஒரு சத்தியம் செய்தால், அதை மீறக் கூடாது என்றும், கர்த்தருக்குச் செய்வதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக’  என்றும், வெகு காலத்திற்கு முன்னரே நமது மக்களுக்குச் சொல்லப்பட்டிருப்பதை அறிவீர்கள்.

34. ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒருபோதும் சத்தியம் செய்யாதீர்கள். பரலோக இராஜ்யத்தின் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பரலோக இராஜ்யம் தேவனின் அரியாசனம்.

35. பூமியின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பூமி தேவனுக்குச் சொந்தமானது. எருசலேம் நகரத்தின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், எருசலேம் மகா இராஜாவின் நகரம்.

36. உங்கள் தலை மீதும் சத்தியம் செய்யாதீர்கள். உங்கள் தலையின் ஒரு முடியைக் கூட உங்களால் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ இயலாது.

37. ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று மட்டுமே கூறுங்கள். ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பதற்கு மேலாக ஏதும் நீங்கள் கூறினால் அது பொல்லாங்கனாகிய பிசாசின் வார்த்தைகளாயிருக்கும்.”

பழிவாங்குதல் பற்றிய போதனை

38. “‘கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்’ என்று கூறப்படுவதை நீங்கள் அறிவீர்கள்.

39. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தீயவனை எதிர்க்காதீர்கள். ஒருவன் உங்கள் வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உங்கள் மறு கன்னத்தையும் காட்டுங்கள்.

40. உங்கள் மேலாடைக்காக ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அவனுக்கு உங்கள் சட்டையையும் கொடுத்து விடுங்கள்.

41. ஒரு படைவீரன் உங்களை ஒரு மைல் தூரம் நடக்க வற்புறுத்தினால், நீங்கள் அவனுடன் இரண்டு மைல் தூரம் நடந்து செல்லுங்கள்.

42. ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால், அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள். உங்களிடமிருந்து கடன் கேட்கிறவனுக்குக் கொடுப்பதற்கு மறுக்காதீர்கள்.

அனைவரையும் நேசியுங்கள்

43. “‘உன் சினேகிதனை நேசி.  உன் பகைவனை வெறு,’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

44. ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள்.

45. நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவுக்கு உண்மையான குமாரர்களாவீர்கள். உங்கள் பிதாவானவர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார். உங்கள் பிதாவானவர் நன்மை செய்பவர்களுக்கும் தீமை செய்பவர்களுக்கும் மழையை அனுப்புகிறார்.

46. உங்களை நேசிக்கிறவர்களை மட்டுமே நீங்கள் நேசித்தால், உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது. வரிவசூலிப்பவர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள்.

47. உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் இனிமையுடன் பழகினால், மற்றவர்களைவிட நீங்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்ல. தேவனை மறுக்கிறவர்கள் கூட, தங்கள் நண்பர்களுக்கு இனிமையானவராய் இருக்கிறார்கள்.

48. பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா மிகச் சிறந்த நற்குணங்கள் கொண்ட பூரணராயிருப்பது போல நீங்களும் பூரணராக இருக்க வேண்டும்.

மத்தேயு அதிகாரங்கள்:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

(Visited 3 times, 1 visits today)