மற்றவர்களை குற்றவாளிகளாக தீர்க்காதிருப்போம்

பெரியவர் ஒருவர் பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து பக்கதிலிருந்தவரை முறைத்து பார்த்தார். துர்நாற்றம் வீசி கொண்டிருந்ததுதான் காரணம். பெரியவர் முகம் சுளித்தவராக அந்த இடத்தை விட்டு எழுந்து வேறு இடத்தில் சென்று அமர்ந்தார். அங்கேயும் அதே நாற்றம். பெரியவர் மிகவும் வெறுப்படைந்தவராக ‘நாற்றம் பிடித்த பயல்கள்’ என்று திட்டிகொண்டே பேருந்திலிருந்து இறங்கி போய் விட்டார்.

உண்மையில் துர் நாறறம் அவரிடமிருந்து வீசியதென்பதை பெரியவர் உணரவில்லை. ஏனெனில் பஸ் ஏறும்போது அவரது செருப்பில் அசிங்கம் ஒட்டியிருந்தது. அதனால் கெட்ட நாற்றம் உண்டாயிருந்தது. அதை உணராத அவர் மற்றவர்களிடத்திலிருந்து துர் நாற்றம் வீசுவதாக நினைத்தார்.

பல வேளைகளில் நாம் இப்படித்தான் இருக்கிறோம். பிறரை குற்றப்படுத்துவதில் நமது நாவு விரைவாய் செயல்படும். பிறரை குறை கூறும் முன்பு நம்மிடம் அந்த குறையோ அல்லது வேறு குறைகளோ இருக்கிறதா என எண்ணிப்பார்ப்பதில்லை.

நாம் குறை கூறும் மனிதரால் விட நம் இருதயத்தில் அநேக குறைகள் இருக்கலாம். எப்போதுமே நமது குறைவுகளை துரும்பாகவும் பிறரது குற்றங்களை தூணாகவுமே பார்த்து பழகி விடுவோமானால் அவை வெகுவிரைவில் மாயக்காரனே, பரிசேயனே என கிறிஸ்து இயேசுவால் குற்றம் சாட்டப்பட்டவர்களை போல நாம் மாறி விடுவோம்.

ஆனால் நமது குறைகளையும் குற்றங்களையும் நமது அபாத்திர தன்மைகளையும் நன்றாய் நாம் அறிந்திருந்தோமானால், எந்த ஒரு பாவியையும் அவனுடைய வீழ்ச்சி எத்தனை கொடிய ஆழமாய் இருந்தாலும் அப்படிப்பட்டவரை நம்மால் ஒரு காலமும் அற்பமாய் எண்ணவே முடியாது. இந்த நிலைக்கே ஒரு முதிர்ச்சி அடைந்த கிறிஸ்தவன் வருவான்.

இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்திலே பரிசேயர்கள் தாங்கள் தவறுகளில் வாழ்ந்து கொண்டே பிறருடைய தவறுகளை கண்டறிய அதிக ஆர்வம் காட்டினார்கள். பிறரிடமிருந்து என்ன குற்றம் கண்டுபிடிக்கலாம் என்ற கண்ணில் எண்ணை ஊற்றி பார்த்து கொண்டிருந்தனர். இயேசு சூம்பின கையுடையவனை சுகமாக்கிவிட்டார் என சந்தோஷப்படாமல் ஓய்வு நாளில் இதை செய்தது நியாயம் அல்ல என்று குற்றம் சாட்டினார்.

‘குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ என்ற முதுமொழி உண்டு. குறிப்பாக, குடும்பத்திலே பிறரது குற்றங்களையே கண்டு பிடித்து, அதை பிறரிடம் தூற்றி அவரை குறித்த தவறான எண்ணத்தை பிறர் மனதில் பதிய வைப்போமானால், வெகு விரைவில் சுற்றத்தார் அனைவரது நட்பையும் இழந்து தனியனாய் நிற்க வேண்டிய நிலை எற்படும். அதற்காக பிறரது தவறுகளையும், குறைவுகளையும் கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டுமென்று வேதம் சொல்லவில்லை. நம்முடைய கண்களே தெளிவற்று இருக்கும்போது, பிறர் கண்களிலுள்ள பிரச்சினைகளை ஆராய்வது சரியல்லவே.

பிரியமானவர்களே, நடக்கிற பிரச்சனைகளுக்கு எடுத்தவுடன் மற்றவர்களை சுட்டிகாட்டாதபடி இப்பிரச்சனைக்கு நான் எவ்விதத்திலும் காரணமாக இருக்கிறேனா? என்னுடைய தவறான அணுகுமுறை காரணமாயிருக்குமோ? என எண்ணி பார்க்க வேண்டும். துர்நாற்றம் பக்கத்திலிருப்பவரிடமிருந்து தான் வருகிறதா என்று முடிவுக்கு வரும் முன் ‘என்னிடமிருந்து அந்த நாற்றம் வராமலிக்கிறதா’ என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களாக நாம் வாழ தேவன் நமக்கு உதவி செய்வாராக.

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்  (மத்தேயு 7:1-2)

Click Here To Read More Tamil Christian Stories

(Visited 1 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *