வெட்டுக்கிளிகள்

1. கர்த்தர் மோசேயை நோக்கி, “பார்வோனிடம் போ. அவனையும், அவனது அதிகாரிகளையும் பிடிவாதம் உடையவர்களாக்கினேன். எனது வல்லமைமிக்க அற்புதங்களை அவர்களுக்குக் காட்டும்படியாக நான் இதைச் செய்தேன்.

2. நான் எகிப்தில் செய்த அற்புதங்களையும், மற்ற அதிசயமான காரியங்களையும் குறித்து நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சொல்வதற்காகவும் நான் இதைச் செய்தேன். அப்போது நானே கர்த்தர் என்பதை நீங்கள் எல்லாரும் அறவீர்கள்” என்றார்.

3. ஆகையால் மோசேயும், ஆரோனும் பார்வோனிடம் சென்றார்கள். அவர்கள் அவனை நோக்கி, “எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர், ‘எத்தனை காலம் எனக்குக் கீழ்ப்படிய மறுப்பாய்? எனது ஜனங்கள் என்னைத் தொழுதுகொள்வதற்குப் போக அனுமதி!

4. நீ எனது ஜனங்களைப் போகவிடாவிட்டால், நாளை உனது நாட்டிற்குள் வெட்டுக்கிளிகளை அனுப்புவேன்.

5. வெட்டுக்கிளிகள் நாட்டை ஆக்கிரமிக்கும். பூமியைப் பார்க்க முடியாத அளவிற்கு வெட்டுக்கிளிகள் நிரம்பும். புயலின் அழிவிற்குத் தப்பியவை அனைத்தும் வெட்டுக்கிளிகளால் அழிக்கப்படும். வயலிலுள்ள மரங்களின் இலைகள் அனைத்தையும் வெட்டுக்களிகள் தின்றுவிடும்.

6. உனது வீட்டிலும், உனது அதிகாரிகளின் வீடுகளிலும், எகிப்திலுள்ள எல்லா வீடுகளிலும் வெட்டுக்கிளிகள் நிறைந்துவிடும். உங்கள் பிதாக்களோ, முற்பிதாக்களோ, பார்த்திராத அளவிற்கு வெட்டுக்கிளிகள் காணப்படும். எகிப்தில் ஜனங்கள் வாழ ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை பார்த்த வெட்டுக்கிளிகளைக் காட்டிலும் அதிகமான வெட்டுக்கிளிகள் காணப்படும் என்கிறார்’” என்று சொன்னார்கள். பிறகு மோசே திரும்பி, பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.

7. அப்போது அதிகாரிகள் பார்வோனிடம், “இந்த ஜனங்களால் எத்தனை நாட்கள் நாம் இக்கட்டில் அகப்பட்டிருப்போம்? அவர்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ள அந்த ஜனங்களைப் போகவிடும். நீர் அவர்களைப் போகவிடாவிட்டால், நீர் அறிந்துகொள்ளும் முன்பு எகிப்து அழிக்கப்படும்!” என்று கூறினார்கள்.

8. எனவே பார்வோன் மோசேயையும், ஆரோனையும் திரும்பவும் தன்னிடம் அழைக்கும்படிக்கு அதிகாரிகளை அனுப்பினான். பார்வோன் அவர்களை நோக்கி, “நீங்கள் போய், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள், ஆனால் யார் யார் போகப்போகிறீர்கள் என்பதைச் சரியாக எனக்குக் கூறுங்கள்” என்றான்.

9. மோசே பதிலாக, “இளைஞரும், முதியோருமாகிய எல்லா ஜனங்களும் போவோம். எங்களோடு எங்கள் மகன்களையும், மகள்களையும், ஆடுகளையும், மாடுகளையும், அழைத்துச் செல்வோம். கர்த்தரின் பண்டிகை எங்கள் எல்லோருக்கும் உரியது என்பதால் நாங்கள் எல்லோரும் போவோம்” என்று கூறினான்.

10. பார்வோன் அவர்களிடம், “நான் உங்களையும் உங்கள் ஜனங்களையும் எகிப்தைவிட்டுப் போகும்படியாக அனுமதிக்கும் முன்னர் கர்த்தர் உங்களோடு கண்டிப்பாக இருக்கவேண்டும். பாருங்கள், நீங்கள் தீமையான ஒன்றைத் திட்டமிடுகிறீர்கள்.

11. ஆண்கள் மாத்திரம் போய் கர்த்தரைத் தொழுதுகொள்ளலாம். நீங்கள் முதலில் அதைத்தான் என்னிடம் கேட்டீர்கள். உங்கள் ஜனங்கள் எல்லாரும் போகமுடியாது” என்று கூறி, பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அனுப்பிவிட்டான்.

12. கர்த்தர் மோசேயை நோக்கி, “இப்போது உன் கைகளை எகிப்து தேசத்திற்கு மேலாக உயர்த்து, அப்போது எகிப்து நாடெங்கும் வெட்டுக்கிளிகள் வந்து பரவும். புயல் அழிக்காமல்விட்ட எல்லா தாவரங்களையும் வெட்டுக்கிளிகள் தின்றுவிடும்” என்றார்.

13. எனவே, மோசே தனது கைத்தடியை எகிப்து நாட்டிற்கு மேலாக உயர்த்தினான். கிழக்கிலிருந்து ஒரு பெருங்காற்று வீசும்படியாக கர்த்தர் செய்தார். பகலும் இரவும் காற்று வீசிற்று. காலையில் காற்று எகிப்திற்குள் வெட்டுக்கிளிகளைக் கொண்டு வந்திருந்தது.

14. வெட்டுக்கிளிகள் எகிப்து நாட்டிற்குள் வந்து பூமியில் விழுந்தன. எகிப்தில் அதுவரை அந்த அளவில் வெட்டுக்கிளிகள் வந்ததுமில்லை, இனி மேலும் அத்தனை எண்ணிக்கை வெட்டுக்கிளிகள் எகிப்தில் வருவதும் இல்லை.

15. வெட்டுக்கிளிகள் தேசம் முழுவதும் பூமி மேல் இருள் மூடும்வரை நிரப்பின. கல்மழை அழிக்காமல் விட்ட மரங்களின் கனிகளையும், பூமியிலுள்ள தாவரங்கள் அனைத்தையும் வெட்டுக்கிளிகள் தின்றுவிட்டன. எகிப்தில் எங்கும் மரங்களிலும் செடிகளிலும் ஒரு இலைகூட இருக்கவில்லை.

16. பார்வோன் அவசரமாக மோசேயையும், ஆரோனையும் அழைத்துவரச் செய்து, “நான் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் எதிராகப் பாவம் செய்தேன்.

17. இம்முறை எனது பாவங்களுக்காக என்னை மன்னியுங்கள். இந்த ‘மரணத்தை’ (வெட்டுக்கிளிகளை) என்னிடமிருந்து அகற்றுவதற்கு கர்த்தரிடம் கேளுங்கள்” என்றான்.

18. மோசே பார்வோனிடமிருந்து சென்று கர்த்தரிடம் ஜெபித்தான்.

19. எனவே, கர்த்தர் காற்றின் திசையை மாற்றி மேற்கிலிருந்து மிகப் பலமான காற்று ஒன்று வீசும்படியாகச் செய்தார். அது வெட்டுக்கிளிகளை எகிப்திலிருந்து அகற்றி, செங்கடலில் விழச்செய்தது. எகிப்தில் ஒரு வெட்டுக்கிளிகூட இருக்கவில்லை!

20. ஆனால், பார்வோன் மீண்டும் பிடிவாதமாக இருக்குமாறு கர்த்தர் செய்தார். இஸ்ரவேல் ஜனங்கள் போவதற்குப் பார்வோன் அனுமதிதரவில்லை.

காரிருள்

21. கர்த்தர் மோசேயை நோக்கி, “உனது கைகளை மேலே உயர்த்து. எகிப்தை இருள் மூடும். நீங்கள் உணர்ந்துகொள்ளுமளவிற்கு இருள் மிகுதியாக இருக்கும்!” என்றார்.

22. மோசே கைகளை மேலே உயர்த்தியபோது, இருண்ட மேகமானது எகிப்தை மறைத்தது. எகிப்தை மூன்று நாட்கள் இருள் மூடியது.

23. ஒருவரையொருவர் பார்க்க முடியவில்லை. மூன்று நாட்களாக எந்த இடத்திற்கும் போவதற்காக ஜனங்கள் எழுந்திருக்கவில்லை. ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்ந்த எல்லா இடங்களிலும் ஒளி இருந்தது.

24. பார்வோன் மீண்டும் மோசேயை வரவழைத்து, “நீங்கள் போய் கர்த்தரை தொழுதுகொள்ளுங்கள்! நீங்கள் உங்கள் குழந்தைகளையும் அழைத்துப்போகலாம். ஆனால் உங்கள் ஆடுகளையும், மாடுகளையும் இங்கே விட்டுச் செல்லவேண்டும்” என்றான்.

25. மோசே, “நாங்கள் போகும்போது எங்கள் ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாது, எங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்வதற்குப் பயன்படுத்தும்பொருட்டுப் பலிகளையும், காணிக்கைகளையும் நீங்களே கூட எங்களுக்குக் கொடுப்பீர்கள்!

26. ஆம், கர்த்தரைத் தொழுதுகொள்வதற்கு நாங்கள் எங்கள் மிருகங்களையும் கொண்டு செல்வோம். எந்த மிருகத்தின் குளம்பையும்கூட விட்டுச் செல்லமாட்டோம். கர்த்தரைத் தொழுதுகொள்வதற்குத் தேவைப்படுபவை எவை என்பதை இன்னமும் நாங்கள் சரியாக அறியவில்லை. நாங்கள் போகவிருக்கும் இடத்தை அடையும்போதுதான் அதை அறிந்துகொள்வோம், எனவே இந்தப் பொருட்கள் எல்லாவற்றையும் நாங்கள் கொண்டு செல்லவேண்டும்” என்றான்.

27. கர்த்தர் பார்வோனை இன்னும் பிடிவாதம் உடையவனாக்கினார். எனவே பார்வோன் அவர்களை அனுப்ப மறுத்தான்.

28. பிறகு பார்வோன் மோசேயிடம், “இங்கிருந்து போய்விடு! நீ இங்கு மீண்டும் வருவதை நான் விரும்பவில்லை! என்னைப் பார்க்க நீ மீண்டும் வந்தால் நீ சாவாய்” என்று கூறினான்.

29. அப்போது மோசே பார்வோனை நோக்கி, “நீ ஒரு விஷயத்தைச் சரியாகச் சொன்னாய், நான் உன்னைப் பார்ப்பதற்கு மீண்டும் வரப்போவதில்லை!” என்றான்.

யாத்திராகமம் அதிகாரங்கள்:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

(Visited 1 times, 1 visits today)