முதற்பேறான குழந்தைகளின் மரணம்
1. அப்போது கர்த்தர் மோசேயைப் பார்த்து, “பார்வோனுக்கும், எகிப்துக்கும் எதிராக நான் செய்யவிருக்கும் கேடு இன்னும் ஒன்று உண்டு. இதன் பிறகு, அவன் உங்களை எகிப்திலிருந்து அனுப்பிவிடுவான். உண்மையில், இந்நாட்டை விட்டு நீங்கள் வெளியேறும்படி துரத்துவான்.
2. நீ இஸ்ரவேலுக்கு இந்த செய்தியைத் தெரியப்படுத்து: இஸ்ரவேலின் ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் உங்கள் அக்கம் பக்கத்தாரிடம் வெள்ளியாலும் பொன்னாலுமாகிய பொருட்களை உங்களுக்குக் கொடுக்கும்படியாகக் கேட்கவேண்டும்.
3. எகிப்தியர்கள் உங்களிடம் இரக்கத்துடன் இருக்கும்படி செய்வேன். எகிப்திய ஜனங்களும், பார்வோனின் சொந்த அதிகாரிகளும்கூட மோசேயைப் பெரியவனாக ஏற்கெனவே கருதுகிறார்கள்” என்றார்.
4. மோசே ஜனங்களிடம், “கர்த்தர் ‘இன்று நள்ளிரவில், நான் எகிப்தின் வழியாகச் செல்வேன்,
5. எகிப்தின் முதற்பேறான ஆண் குழந்தைகள் அனைவரும், எகிப்து மன்னனாகிய பார்வோனின் முதற்பேறான மகன் முதல், மாவரைக்கிற அடிமைப் பெண்ணின் முதற்பேறான மகன் வரைக்கும் எல்லோரும் மரிப்பார்கள். முதற்பேறான மிருகங்கள் கூட மடியும்.
6. கடந்த எந்தக் காலத்தைக் காட்டிலும் எகிப்தின் அழுகுரல் பயங்கரமாயிருக்கும். வருங்காலத்தில் நடக்கக் கூடியதைக் காட்டிலும் அது கொடியதாக இருக்கும்.
7. ஆனால் இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவரும் பாதிக்கப்படுவதில்லை. ஒரு நாய் கூட அவர்களைப் பார்த்துக் குரைக்காது. இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவனும், மிருகங்களில் ஒன்றும் காயமடைவதில்லை. இதன் மூலமாக, எகிப்தியரைக் காட்டிலும் இஸ்ரவேலரை நான் வித்தியாசமாக நடத்துவதை நீங்கள் அறிவீர்கள்.
8. அப்போது உங்கள் அடிமைகள் (எகிப்தியர்கள்) எல்லோரும் குனிந்து என்னைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள், “உங்கள் ஜனங்களை உங்களோடு அழைத்துக்கொண்டு புறப்பட்டுச் செல்லுங்கள்” என்பார்கள். அப்போது கோபத்தோடு நான் பார்வோனை விட்டுப் புறப்படுவேன்!’ என்றார்” என்று கூறினான்.
9. பின்பு கர்த்தர் மோசேயிடம், “பார்வோன் நீ சொன்னதைக் கேட்கவில்லை, ஏன்? நான் எகிப்தில் என் மகா வல்லமையைக் காட்ட அப்போதுதான் முடியும்” என்றார்.
10. எனவே தான், மோசேயும், ஆரோனும் இம்மகா அற்புதங்களை பார்வோனுக்கு முன்பாகச் செய்து காட்டினார்கள். இதனாலேயே இஸ்ரவேல் ஜனங்களைத் தனது தேசத்திலிருந்து அனுப்பாதபடி பார்வோனைப் பிடிவாதமுள்ளவனாக கர்த்தர் ஆக்கினார்.
யாத்திராகமம் அதிகாரங்கள்:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40