பிற சட்டங்களும், கட்டளைகளும்

1. அப்போது தேவன் மோசேயிடம், “ஜனங்களுக்கு நீ கொடுக்க வேண்டிய பிற சட்டங்கள் இவையாகும்.

2. “நீங்கள் ஒரு எபிரெய அடிமையை வாங்கினால், அவன் ஆறு ஆண்டுகள் மட்டுமே உங்களுக்காக உழைப்பான். ஆறு ஆண்டுகளுக்குப்பின் அவன் விடுதலை பெறுவான். கட்டணமாக எதையும் அவன் செலுத்தத் தேவையில்லை.

3. ஒருவன் உங்கள் அடிமையாகும்போது மணமாகாதவனாக இருந்தால், விடுதலையாகும்போது தனியனாகப் போவான். ஒருவன் அடிமையாகும்போது திருமணமானவனாக இருந்தால், அவன் விடுதலை பெறும்போது மனைவியை அழைத்துச் செல்லலாம்.

4. அடிமை மணமாகாதவனாக இருந்தால், எஜமான் அவனுக்கு ஒரு மனைவியைக் கொடுக்கலாம். அவள் மகன்களையோ, மகள்களையோ பெற்றெடுத்தால் அவளும் அவள் பிள்ளைகளும் எஜமானுக்கு உரிமையாவார்கள். அடிமையின் வேலையாண்டுகள் முடிந்தபின், அவன் மட்டும் விடுதலை பெறுவான்.

5. “ஆனால் அடிமை எஜமானோடு நீடித்து இருப்பதாக முடிவு செய்தால் அவன், ‘நான் என் எஜமானை நேசிக்கிறேன். நான் எனது மனைவியையும், என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன். நான் விடுதலை பெறமாட்டேன். நான் இங்கேயே தங்குவேன்’ என்று சொல்லவேண்டும்.

6. இவ்வாறு நிகழ்ந்தால், எஜமான் அடிமையை தேவனுடைய சந்நிதானத்தில் கொண்டுவரவேண்டும். எஜமான் அடிமையை ஒரு வாசலருகே அல்லது வாசலின் நிலைக்காலின் அருகே அழைத்துச் சென்று, அடிமையின் காதில் கூர்மையான கருவியால் ஒரு துளை போடவேண்டும். அப்போது அடிமை தன் வாழ்க்கை முழுவதும் எஜமானுக்கு தொண்டு செய்வான்.

7. “ஒரு மனிதன் தன் மகளை அடிமையாக விற்க முடிவு செய்தால், அவளை விடுதலை செய்வதற்குரிய விதிகள் ஆண் அடிமையை விடுவிப்பதற்கான விதிமுறைகளில் இருந்து மாறுப்பட்டவை.

8. எஜமானுக்கு அப்பெண்ணிடம் விருப்பம் இல்லை என்றால், அப்பெண்ணை அவள் தந்தைக்கு மீண்டும் விற்றுவிடலாம். எஜமான் அப்பெண்ணை மணப்பதாக வாக்குறுதி அளித்தால் அப்பெண்ணை வேறு யாருக்கும் விற்கும் உரிமையை இழந்துவிடுவான்.

9. அடிமைப் பெண் எஜமானின் மகனை மணப்பதற்கு எஜமான் சம்மதித்தால் அவளை அடிமையாக நடத்தக்கூடாது. அவளை ஒரு மகளைப் போல் நடத்தவேண்டும்.

10. “எஜமான் மற்றொரு பெண்ணை மணந்தால் முதல் மனைவிக்குக் குறைவான ஆடையோ, உணவோ கொடுக்கக்கூடாது. அவன் அவளோடு தூங்குவதை நிறுத்தக் கூடாது. விவாகத்தில் அவளுக்கு உரிமையான எல்லாப் பொருட்களையும் அவன் கொடுத்து வர வேண்டும்.

11. அவன் அவளுக்கு இந்த மூன்று காரியங்களையும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யவில்லையென்றால், அப்பெண் விடுவிக்கப்படுவாள். அவள் செலுத்தவேண்டிய கடன் எதுவுமிராது.

12. “ஒரு மனிதன் இன்னொருவனை திட்டமிட்டு அடித்துக் கொன்றால், அப்போது அம்மனிதன் கொல்லப்பட வேண்டும்.

13. ஆனால் ஒருவன் மற்றொருவனைத் திட்டமிடாமல் கொன்றால், தேவன் அந்த விபத்தை அனுமதித்தார் என்று எண்ணலாம். குறிப்பிட்ட சில இடங்களை பாதுகாப்பிற்காக ஓடி உயிர்தப்பும்படி நியமிப்பேன். அதனால் இத்தகைய ஒருவன் அங்கே ஓடலாம்.

14. ஒருவன் மற்றொருவனைச் சினந்து அல்லது வெறுத்துக் கொல்லத் திட்டமிட்டால், கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும். அவனை எனது பலிபீடத்திற்குத் தொலைவில் அழைத்துச் சென்று கொல்லவேண்டும்.

15. “தந்தையையோ, தாயையோ அடிக்கிற எந்த மனிதனும் கொல்லப்படவேண்டும்.

16. “ஒருவனை அடிமையாக்கவோ, அடிமையாக விற்பதற்கோ திருடிச் சென்றால், அவ்வாறு திருடிச் சென்றவன் கொல்லப்பட வேண்டும்.

17. “தந்தையையோ, தாயையோ சபிக்கிற எந்த மனிதனும் கொல்லப்பட வேண்டும்.

18. “இருவர் வாக்குவாதம் செய்து, ஒருவனை மற்றொருவன் கல்லால் அல்லது கையால் தாக்கினால் எவ்வாறு அம்மனிதனைத் தண்டிக்க வேண்டும்? தாக்கப்பட்ட மனிதன் மரிக்கவில்லையென்றால் அவனைத் தாக்கிய மனிதனும் கொல்லப்படக் கூடாது.

19. தாக்கப்பட்ட மனிதன் படுக்கையில் சில காலம் இருக்க நேர்ந்தால், அவனைத் தாக்கிய மனிதன் அவன் குணமாகும்வரை அவனை ஆதரிக்க வேண்டும். அவன் சம்பாதிப்பதற்குரிய நாட்களை வீணாக்கியதற்குப் பணம் கொடுக்க வேண்டும். அம்மனிதன் அவன் முழுமையாக குணமாகும் வரை உதவி செய்ய வேண்டும்.

20. “சில வேளைகளில் ஜனங்கள் தங்கள் ஆண் அல்லது பெண் அடிமைகளை அடிப்பார்கள். அடிபட்டு அடிமை மரிக்க நேர்ந்தால், அவனைக் கொன்றவன் தண்டிக்கப்படவேண்டும்.

21. அடிமை மரிக்காமல் சில நாட்களுக்குப் பின் குணமடைந்தால், அம்மனிதனைத் தண்டிக்க வேண்டாம். ஏனெனில் எஜமானன் அடிமையைப் பணம் கொடுத்து வாங்கியிருந்ததால் அந்த அடிமை அவனுக்குரியவன்.

22. “இரு மனிதர் சண்டையிடும்போது, ஒரு கர்ப்பிணிப் பெண்ணைத் தாக்கிவிடக் கூடும். அதனால் உரிய காலத்திற்கு முன்னாலேயே அவள் குழந்தையை பெறலாம். அப்பெண் அதிகமான காயமடையவில்லையென்றால், அவளைக் காயப்படுத்திய மனிதன் அபராதம் செலுத்த வேண்டும். அபராதத் தொகை எவ்வளவு என்பதை அப்பெண்ணின் கணவன் தீர்மானிப்பான். அபராதத் தொகையின் அளவைத் தீர்மானிக்க நீதிபதிகள் அவனுக்கு உதவுவார்கள்.

23. ஆனால் அப்பெண் மிகுதியாகக் காயமுற்றால் அவளைக் காயப்படுத்திய மனிதன் தண்டனை பெற வேண்டும். ஒருவன் கொல்லப்பட்டால் அக்கொலைக்குக் காரணமானவனும் கொல்லப்படவேண்டும். ஒரு உயிருக்கு மற்றொரு உயிர் வாங்கப்பட வேண்டும்.

24. கண்ணுக்குக் கண்ணையும், பல்லுக்குப் பல்லையும், கைக்குக் கையையும், காலுக்குக் காலையும்,

25. சூட்டுக்கு சூடும், காயத்துக்குக் காயமும், வெட்டுக்கு வெட்டும் தண்டனையாகக் கொடுக்கவேண்டும்.

26. “ஒரு மனிதன் அடிமையைக் கண்ணில் அடித்ததால் அவன் குருடனாக நேர்ந்தால், அடிமை விடுதலைபெற வேண்டும். விடுதலைக்குரிய விலை அவன் இழந்த கண்ணேயாகும். இது ஆண் அடிமைக்கும், பெண்ணடிமைக்கும் பொதுவாகும்.

27. ஒரு எஜமானன் தன் அடிமையை வாயில் அடித்து, அடிமை பல்லை இழக்க நேர்ந்தால் அடிமையை விடுதலை செய்யவேண்டும். அவன் விடுதலைக்கு அவன் பல்லே விலையாக அமையும். இது ஆண் அல்லது பெண் அடிமைக்கும் பொருந்தும்.

28. “ஒரு மனிதனின் மாடு ஒரு ஆணையோ, பெண்ணையோ கொன்றால், அந்த மாட்டைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். அதை உணவாக உட்கொள்ளக் கூடாது. அதன் உரிமையாளன் குற்றவாளி அல்ல.

29. அது முன்பு பலரைத் தாக்கியபோது உரிமையாளன் எச்சரிக்கப்பட்டும், அவன் ஓரிடத்தில் அதைக் கட்டியோ, அடைத்தோ வைக்காமலிருந்ததால் அவன் குற்றவாளியாவான். ஏன்? அது வெளியே தனித்துச் சென்று, யாரையேனும் கொன்றால் அப்போது அதன் எஜமானன் குற்றவாளியாகக் கருதப்படுவான். மாட்டையும் அதன் உரிமையாளனையும் நீ கல்லெறிந்து கொல்ல வேண்டும்.

30. மரித்த மனிதனின் குடும்பத்தினர் ஈடாகப் பணத்தைப் பெறலாம், அவர்கள் பணத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மாட்டின் உரிமையாளனைக் கொல்லத் தேவையில்லை. ஆனால் நீதிபதி கூறும் ஈடுப் பணத்தை அவன் செலுத்தவேண்டும்.

31. “ஒருவனின் மகன் அல்லது மகளை மாடு கொன்றாலும் அதே விதி பின்பற்றப்பட வேண்டும்.

32. ஆனால் ஒரு அடிமையை மாடு கொன்றால், அந்த அடிமையின் எஜமானனுக்கு மாட்டின் எஜமானன் 30 வெள்ளிப்பணம் கொடுக்கவேண்டும். மாட்டைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். ஆண் அல்லது பெண் அடிமைக்கும் சட்டம் பொதுவானதே.

33. “ஒரு மனிதன் கிணற்றின் மூடியை அகற்றினதாலோ அல்லது ஒரு குழியைத்தோண்டி மூடாமல் விட்டதாலோ, இன்னொருவனின் மிருகம் அக்குழியில் விழுந்தால், அக்குழியைத் தோண்டியவன் குற்றவாளியாவான்.

34. அவன் மிருகத்தின் விலையைக் கொடுத்து அம்மிருகத்தின் உடலைப் பெற்றுக்கொள்ளலாம்.

35. “ஒருவனின் மாடு மற்றொருவனின் மிருகத்தைக் கொன்றால் உயிருள்ள மாட்டை விற்றுவிட வேண்டும். அப்பணத்தை இருவரும் சரிபாதியாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். கொல்லப்பட்ட மாட்டையும் அவர்கள் சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.

36. அம்மனிதனின் மாடு அதற்கும் முன்னர் பிற மிருகங்களைத் தாக்கி காயப்படுத்தியிருந்தால் அதன் உரிமையாளனே மாட்டின் பொறுப்பேற்க வேண்டும். அவன் மாடு மற்ற மாட்டைக் கொன்றிருந்தால் அந்த மாட்டை அவிழ்த்து விட்டபடியால் அதன் உரிமையாளன் குற்றவாளியாவான். அவன் செத்துப்போன மாட்டுக்கு ஈடாக இன்னொரு மாட்டைக் கொடுக்க வேண்டும். அவனது செத்துப்போன மாட்டின் உடலைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.”

யாத்திராகமம் அதிகாரங்கள்:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

(Visited 1 times, 1 visits today)