பலிகளை எரிக்கும் பீடம்

1. பலிபீடத்தை பெசலெயேல் சீத்திம் மரத்தால் செய்தான். இப்பலிபீடம் பலிகளை எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. அது சதுரவடிவமானது. அது 5 முழ நீளமும் 5 முழ அகலமும் 3 முழ உயரமும் உடையது.

2. அவன் பலிபீடத்தின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு கொம்பைச் செய்து வைத்தான். அவற்றைப் பலிபீடத்தோடு இணைத்து ஒன்றாக அடித்தான். பின்பு பலிபீடத்தை வெண்கலத்தால் மூடினான்.

3. பலிபீடத்தில் பயன்படுத்தப்படும் எல்லா கருவிகளையும் வெண்கலத்தால் செய்தான். பானைகள், கரண்டிகள், கிண்ணங்கள், முள்கரண்டிகள், பெரிய கொப்பரைகளையும் செய்தான்.

4. பின்னர் பலிபீடத்திற்காக வெண்கலத்தாலான வலைப் பின்னல் போன்ற ஒரு சல்லடையை உண்டாக்கினான். பலிபீடத்தின் அடித்தட்டில் அந்தச் சல்லடையைப் பொருத்தினான். அது பலிபீடத்தின் நடுப்பகுதியில் (பாதி உயரத்தில்) பொருந்தியது.

5. பின் அவன் பித்தளை வளையங்களை செய்தான். பலிபீடத்தைச் சுமக்கும் தண்டுகளைத் தாங்குவதற்கு இவ்வளையங்கள் பயன்பட்டன. சல்லடையின் நான்கு மூலைகளிலும் அவன் அந்த வளையங்களை வைத்தான்.

6. பின் அவன் சீத்திம் மரத்தினால் தண்டுகளைச் செய்து அவற்றை வெண்கலத்தால் மூடினான்.

7. பலிபீடத்தின் பக்கங்களிலுள்ள வளையங்களில் தண்டுகளைச் செலுத்தினான். தண்டுகள் பலிபீடத்தைச் சுமப்பதற்குப் பயன்பட்டன. பலிபீடத்தின் நான்கு பக்கங்களையும் சீத்திம் பலகைகளினால் செய்தான். அது வெறுமையான பெட்டியைப் போன்று உள்ளே ஒன்றுமில்லாதிருந்தது.

8. அவன் வெண்கலத்தாலான தொட்டிகளையும், அதன் பீடங்களையும் செய்தான். பெண்கள் கொடுத்த வெண்கல முகக் கண்ணாடிகளை அதற்குப் பயன்படுத்தினான். இந்தப் பெண்களே ஆசரிப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் திருப்பணியாற்றி வந்தனர்.

பரிசுத்த கூடாரத்தைச் சுற்றியுள்ள பிரகாரம்

9. பின்னர் முற்றத்தைச் சுற்றி திரைச் சீலைகள் எழுப்பினான். 100 முழ நீளமுள்ள தொங்குதிரையை தெற்குப் பக்கத்தில் எழுப்பினான். மெல்லிய துகிலால் அத்திரைகள் அமைந்தன.

10. தெற்குப் பக்கத்துத் திரைகளை 20 தூண்கள் தாங்கின. அவற்றிற்கு 20 வெண்கல பீடங்கள் அமைந்தன. தூண்களுக்கான கொக்கிகளையும் திரைச் சீலைத் தண்டுகளையும் வெள்ளியால் செய்தான்.

11. பிரகாரத்தின் வடக்குப்புறத்தில் 100 முழ நீளமான திரைச் சுவர் அமைந்தது. 20 வெண்கலப் பீடங்கள் உள்ள 20 தூண்கள் இருந்தன. தூண்களின் கொக்கிகளும், திரைப் பூண்களும் வெள்ளியால் செய்யப்பட்டன.

12. வெளிப்பிரகாரத்தின் மேற்குப் பக்கத்தில் 50 முழ நீளமான தொங்குதிரையை அமைத்தான். அந்த 10 தூண்களுக்கும், 10 பீடங்கள் இருந்தன. தூண்களின் கொக்கிகளையும் திரைப் பூண்களையும் வெள்ளியால் அமைத்தான்.

13. வெளிப் பிரகாரத்தின் கிழக்குப்புறத்திலிருந்து தொங்குதிரை 50 முழ அகலம்Ԕஉடையதாக இருந்தது. பிரகாரத்தின் நுழைவாயில் இப்பக்கத்தில் இருந்தது.

14. நுழைவாயிலின் ஒரு பக்கத்தில் தொங்கு திரை 15 முழ நீள முடையதாகவும் மூன்று பீடங்களின்மேல் நின்ற மூன்று தூண்களைக் கொண்டதாகவும் இருந்தது.

15. நுழை வாயிலின் மறுபுறத்திலுள்ள தொங்கு திரைகள் 15 முழ நீளமுடையதாக இருந்தது. அந்தப் பக்கத்தில் மூன்று தூண்களும் அவற்றிக்கு மூன்று பீடங்களும் அமைத்தனர்.

16. பிரகாரத்தைச் சுற்றிலும் அமைந்த தொங்கு திரைகள் மெல்லிய துகிலால் செய்யப்பட்டன.

17. தூண்களின் பீடங்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. கொக்கிகளும், திரைப்பூண்களும், வெள்ளியால் செய்யப்பட்டன. தூண்களின் மேற்பகுதிகளும் வெள்ளியால் மூடப்பட்டன. பிரகாரத்தின் தூண்களில் வெள்ளியாலான திரைப்பூண்கள் இருந்தன.

18. பிரகார நுழைவாயிலின் தொங்குதிரைகள் மெல்லிய துகிலாலும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூல்களாலும் நெய்யப்பட்டன. அவற்றில் பல சித்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன. திரையானது 20 முழ நீளமும் 5 முழ உயரமும் உடையதாக இருந்தது. அவை பிரகாரத்தைச் சுற்றிலும் அமைந்த தொங்கு திரைகளின் உயரம் கொண்டிருந்தன.

19. தொங்குதிரையை நான்கு தூண்களும், வெண்கல பீடங்களும் தாங்கின. தூண்களின் கொக்கிகள் வெள்ளியால் ஆனவை ஆகும். தூண்களின் மேற்பகுதிகளும் வெள்ளியால் மூடப்பட்டன. திரைப் பூண்களும் வெள்ளியாலாயின.

20. பரிசுத்தக் கூடாரத்திற்கும், வெளிப்பிரகாரத்தின் திரைகளுக்கும் தேவையான கூடார ஆணிகள் வெண்கலத்தால் செய்யப்பட்டன.

21. உடன்படிக்கையின் கூடாரமாகிய பரிசுத்த கூடாரத்திற்குத் தேவைப்பட்ட பொருட்களை எல்லாம் லேவி குடும்பத்தார் எழுதி வைத்துக்கொள்ளும்படியாக மோசே கட்டளையிட்டான். பட்டியலைத் தயாரிக்கும் பொறுப்பை ஆரோனின் மகனாகிய இத்தாமார் ஏற்றுக்கொண்டான்.

22. மோசேக்கு கர்த்தர் விதித்த எல்லாக் கட்டளைகளையும் யூதாவின் கோத்திரத்தின் வழியே வந்த ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் நிறைவேற்றினான்.

23. தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாகின் மகனான அகோலியாப் அவனோடு ஒத்துழைத்தான். அகோலியாப் மிகச் சிறந்த சித்திரை கைவேலையாளும், நெசவில் நிபுணனும் ஆவான். மெல்லிய துகிலை நெய்வதிலும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலை நெய்வதிலும் அவன் தலைசிறந்தவனாக இருந்தான்.

24. கர்த்தரின் பரிசுத்த இடத்திற்கு 2 டன்கள் எடைக்கு மேற்பட்ட பொன் காணிக்கையாக அளிக்கப்பட்டது. (அதிகாரப் பூர்வமான அளவு எடையின்படி அது எடையிடப்பட்டது.)

25. எண்ணிக்கை எடுக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் 3 3/4 டன்கள் வெள்ளி கொடுத்தனர். (இதுவும் அதிகாரப்பூர்வமான அளவின் தராசில் நிறுக்கப்பட்டது)

26. இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய ஆண்கள் எண்ணப்பட்டனர். 6,03,550 ஆண்கள் இருந்தனர். ஒவ்வொருவனும் 1 பெக்கா வெள்ளியை வரியாக அளித்தான். (அதிகாரப்பூர்வமான அளவின்படி 1 பெக்கா என்பது 1/2 சேக்கல் எடை அளவாகும்.)

27. கர்த்தரின் பரிசுத்த இடத்தின் தொங்கு திரைகளுக்கும் 100 பீடங்களை உண்டாக்குவதற்கு அந்த 3 3/4 டன்கள் வெள்ளியைப் பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு பீடத்திற்கும் சுமார் 75 பவுண்டு வெள்ளி வீதம் உபயோகப்படுத்தப்பட்டது.

28. மீதமுள்ள 50 பவுண்டு வெள்ளியால் கொக்கிகளையும், திரைப்பூண்களையும், தூண்களின் வெள்ளிப் பூச்சையும் செய்தனர்.

29. கர்த்தருக்கு 26 1/2 டன்களுக்கும் அதிகமான வெண்கலம் தரப்பட்டது.

30. ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின் பீடங்களைச் செய்வதற்கு அது பயன்பட்டது. பீடத்தையும், சல்லடையையும் செய்வதற்கும் வெண்கலத்தைப் பயன்படுத்தினர். பலிபீடத்தின் எல்லாக் கருவிகளையும், பாத்திரங்களையும் செய்வதற்கு வெண்கலம் பயன்படுத்தப்பட்டது.

31. பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள தொங்கு திரைகளின் பீடங்களையும், நுழைவாயிலில் உள்ள தொங்கு திரைகளின் பீடங்களையும் அமைப்பதற்கு வெண்கலம் பயன்படுத்தப்பட்டது. வெண்கலத்தால் பரிசுத்தக்கூடாரத்திற்கும், வெளிப்பிரகாரத்தின் தொங்கு திரைகளுக்கும் தேவையான கூடார ஆணிகளைச் செய்தனர்.

யாத்திராகமம் அதிகாரங்கள்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

(Visited 13 times, 1 visits today)