கைப்பற்றப்படாத நாடுகள்
1. யோசுவா வயது முதிர்ந்தவனாக இருக்கும்போது, கர்த்தர் அவனை நோக்கி, “யோசுவா உனக்கு வயது முதிர்ந்துவிட்டது, ஆனால் நீ கைப்பற்றவேண்டிய நாடுகள் இன்னும் பல உள்ளன.
2. கெசூரிம் தேசத்தையோ, பெலிஸ்தியரின் தேசத்தையோ நீ இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை.
3. எகிப்திலுள்ள சீகேபர் நதியின் தேசங்களையும், வடக்கில் எக்ரோனின் கரையிலுள்ள நாடுகளையும் நீ கைப்பற்றவில்லை. அது இன்னமும் கானானியருக்குரியதாக உள்ளது. காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் ஆகிய இடங்களின் ஐந்து பெலிஸ்திய தலைவர்களையும் நீ தோற்கடிக்க வேண்டியுள்ளது.
4. கானானியரின் நாட்டிற்குக் கிழக்கேயுள்ள ஏவியரையும் நீ வெல்லவேண்டும்.
5. கிப்லியரின் தேசத்தையும் நீ இன்னும் வெற்றி கொள்ளவில்லை. எர்மோன் மலையின் கீழேயுள்ள பாகால்காத்திற்குக் கிழக்கில் லீபனோனின் பகுதியிலிருந்து லெபோ ஆமாத் வரைக்கும் நீ கைப்பற்ற வேண்டும்.
6. “சீதோனின் ஜனங்கள் லீபனோனிலிருந்து மிஸ்ரெபோத்மாயீம் வரையுள்ள மலைநாட்டில் வசித்து வருகின்றனர். இஸ்ரவேலருக்காக இவர்கள் அனைவரையும் நான் துரத்துவேன். இஸ்ரவேலின் ஜனங்களுக்காக தேசத்தைப் பிரிக்கும்போது இத்தேசத்தையும் ஞாபகப்படுத்திக்கொள். நான் உனக்குச் சொன்னபடியே இதைச் செய்.
7. இப்போது, தேசத்தை ஒன்பது கோத்திரத்தினருக்கும், மனாசே என்னும் கோத்திரத்தின் சரிபாதியினருக்கும் பிரித்துக்கொடு” என்றார்.
தேசத்தைப் பங்கிடுதல்
8. ரூபன், காத், ஆகிய கோத்திரத்தினருக்கும், மனாசே என்னும் கோத்திரத்தின் பாதிப் பகுதியினரும் அவர்களுக்குரிய தேசத்தை ஏற்கெனவே பெற்றிருந்தார்கள். கர்த்தருடைய ஊழியனாகிய மோசே, யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள தேசத்தை அவர்களுக்குக் கொடுத்திருந்தான்.
9. ஆரோவேர் நதிக்கருகிலுள்ள அர்னோன் நதியில் அத்தேசம் ஆரம்பித்து நதியின் நடுப்பகுதியிலுள்ள ஊர்வரைக்கும் அவர்களது தேசம் இருந்தது. அது மெதபாவிலிருந்து தீபோன்வரைக்குமுள்ள சமவெளியையும் கொண்டிருந்தது.
10. அத்தேசத்தில் எமோரியரின் அரசனாகிய சீகோன் ஆண்டிருந்த எல்லா ஊர்களும் அடங்கியிருந்தன. அந்த அரசன் எஸ்போன் நகரில் ஆண்டு வந்தான். எமோரியர் வாழ்ந்த பகுதி வரைக்கும் அத்தேசம் தொடர்ந்தது.
11. கீலேயாத் என்னும் ஊரும் அத்தேசத்தில் இருந்தது. கெசூர், மாகா ஆகியவற்றின் ஜனங்கள் வாழ்ந்த பகுதியும் அத்தேசத்தில் இருந்தது. எர்மோன் மலைப்பகுதி முழுவதும் சலேகாவரைக்குமான பாசானின் பகுதியும் அந்த நிலப் பகுதியில் அடங்கி இருந்தன.
12. ஓகின் அரசுக்குட்பட்ட நாடு முழுவதும் அதில் அடங்கியிருந்தது. பாசானில் ஓக் என்ற அரசன் ஆண்டு வந்தான். முன்பு அஸ்தரோத்திலும், எத்ரேயியிலும் அவன் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான். ஓக் ரெபயத் ஜனங்கள் இனத்தவன், முன்பே மோசே இவர்களை வென்று, அவர்கள் நாட்டைக் கைப்பற்றியிருந்தான்.
13. கெசூர், மாகா ஆகியவற்றின் ஜனங்களை, இஸ்ரவேல் ஜனங்கள் துரத்தவில்லை, இன்றும் இஸ்ரவேல் ஜனங்களோடுகூட அவர்களும் வாழ்கின்றனர்.
14. லேவி கோத்திரத்திற்கு எந்த நிலப் பகுதியும் கொடுக்கப்படவில்லை. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு, தகன பலியாகக் கொடுக்கப்பட்ட மிருகங்கள் அனைத்தும் லேவி கோத்திரத்தினரைச் சார்ந்தவர்களுக்கு உரியனவாயின. கர்த்தர் அவர்களுக்கு வாக்களித்தது அதுவே.
15. ரூபனின் கோத்திரத்திலுள்ள ஒவ்வொரு கோத்திரத்திற்கும் மோசே வழங்கியிருந்த சிறிய நிலப்பகுதியை மட்டுமே அவர்கள் பெற்றிருந்தனர்:
16. அது அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேரிலிருந்து மெதெபா என்ற ஊர் வரைக்கும் உள்ள பகுதியாகும். அந்நதியின் மத்தியிலுள்ள ஊரையும், சமவெளிப் பகுதியையும் அது உள்ளடக்கியிருந்தது.
17. எஸ்போன் வரைக்கும் அத்தேசம் இருந்தது. சமவெளியின் எல்லா ஊர்களையும் அது கொண்டிருந்தது. தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால், மெயோன் ஆகியப் பகுதிகளும்,
18. யாகாசா, கொதெமோத், மேபாகாத்,
19. கீரியாத்தாயீம், சிப்மா, ஆகியவையும், பள்ளத்தாக்கைச் சார்ந்த மலைப் பகுதிகளில் உள்ள செரேத்சகார்,
20. பெத்பேயோர், பிஸ்காவின் மலைகள், பெத்யெசிமோத் ஆகிய பகுதிகளும் அந்த ஊர்களில் அடங்கியிருந்தன.
21. அத்தேசம் சமவெளியிலுள்ள எல்லா ஊர்களையும், எமோரியரின் அரசனாகிய சீகோன் அரசாண்ட எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. எஸ்போன் என்னும் ஊரில் அந்த அரசன் அரசாட்சி செய்தான். ஆனால் மோசே அவனையும், மீதியானியரின் தலைவர்களையும் தோற்கடித்தான். ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா ஆகியோர் அத்தலைவர்கள் ஆவார்கள். (இத்தலைவர்கள் எல்லோரும் சீகோனுடன் ஒன்றுசேர்ந்து மோசேயை எதிர்த்துப் போரிட்டனர்.) இத்தலைவர்கள் எல்லோரும் அந்நாட்டில் வசித்தனர்.
22. இஸ்ரவேல் ஜனங்கள் பேயோரின் மகனாகிய பாலாமைத் தோற்கடித்தனர். (எதிர்காலம் பற்றி தனது மந்திர சக்தியால் சொல்வதற்குப் பாலாம் முயன்று கொண்டிருந்தான்.) போரின்போது இஸ்ரவேல் ஜனங்கள் பலரைக் கொன்றனர்.
23. யோர்தான் நதிக்கரை ரூபனுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தின் எல்லையாக அமைந்தது. மேலே கூறப்பட்ட ஊர்களும் அவற்றின் வயல்களும் ரூபனுக்குச் சொந்தமான தேசத்தில் இருந்தன,
24. காத்தின் கோத்திரத்துக்கு அவரவர் வம்சங்களின்படி மோசே இத்தேசத்தைக் கொடுத்திருந்தான்:
25. யாசேரின் தேசமும் கீலேயாத்தின் எல்லா ஊர்களும், ராபாவின் அருகேயுள்ள ஆரோவேர் வரைக்குமான அம்மோனியரின் தேசத்தில் பாதியையும் கொடுத்தான்.
26. அத்தேசம் எஸ்போனிலிருந்து ராமாத் மிஸ்பா பெத்தோனீம் வரைக்கும் உள்ள பகுதியைக் கொண்டிருந்தது. அத்தேசம் மக்னாயீமிலிருந்து தெபீர் வரைக்குமுள்ள இடத்தைக் கொண்டது.
27. பெத்ஹராம் பள்ளத்தாக்கு, பெத்நிம்ரா, சுக்கோத், சாப்போன் ஆகியவையும் அத்தேசத்தில் இருந்தன. எஸ்போனின் அரசனாகிய சீகோன் ஆண்ட மீதி நாடும் இந்த நிலத்தில் அடங்கியிருந்தது. யோர்தான் நதியானது அந்த நிலத்தில் கிழக்குப் பகுதியாக அமைந்தது. அந்த நிலம் கலிலேயா ஏரியின் கடைசி வரைக்கும் தொடர்ந்தது.
28. மோசே காத் கோத்திரத்தாருக்குக் கொடுத்த தேசத்தில் இவையெல்லாம் இருந்தன. மேலே தரப்பட்ட எல்லா ஊர்களும் அத்தேசத்தைச் சார்ந்தன. இவற்றை காத் கோத்திரத்தின் வம்சத்தினருக்கு மோசே பிரித்துக் கொடுத்தான்.
29. மனாசேயின் கோத்திரத்துக்கு மோசே கொடுத்த நிலம் பின்வருவதாகும்: மனாசே கோத்திரத்தின் பாதிப் பகுதியினர் இதனைப் பெற்றனர்.
30. மக்னாயீமில் தேசம் ஆரம்பித்தது. பாசான் முழுவதும் பாசானின் அரசனாகிய ஓகினால் ஆளப்பட்ட நாடும், பாசானில் யாவீரின் எல்லா ஊர்களும் அத்தேசத்தில் இருந்தன. (மொத்தம் 60 நகரங்கள் இருந்தன.)
31. கீலேயாத்தின் பாதிபாகம், அஸ்தரோத், எத்ரேயி ஆகிய நகரங்களும் அத்தேசத்தில் இருந்தன. (ஓக் அரசன் வசித்த நகரங்கள் கீலேயாத், அஸ்தரோத், எத்ரேயி ஆகியவை.) மனாசேயின் மகனாகிய மாகீரின் குடும்பத்திற்கு இத்தேசங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டன. மனாசேயின் மகன்களில் பாதிக்குடும்பத்தினர் அவற்றைப் பெற்றனர்.
32. மோசே இத்தேசத்தை இந்தக் கோத்திரத்தினருக்கு கொடுத்தான். மோவாப் சம வெளியில் ஜனங்கள் பாளையமிட்டிருந்தபோது மோசே இதைச் செய்தான். எரிகோவிற்குக் கிழக்கில் யோர்தான் நதிக்குக் குறுக்காக இது இருந்தது.
33. லேவியின் கோத்திரத்தினருக்கு மோசே எந்த நிலத்தையும் கொடுக்கவில்லை. லேவி கோத்திரத்தினருக்கு, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே பங்காக அமைவதாக வாக்களித்திருந்தார்.
யோசுவா அதிகாரங்கள்:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24