யூதாவிற்குரிய நிலம்
1. யூதாவுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் அந்தக் கோத்திரத்திலிருந்த குடும்பங்களுக்கிடையில் பங்கிடப்பட்டது. அந்த நிலம் ஏதோம் எல்லையிலிருந்து தெற்காக தேமான் விளிம்பில் சீன் பாலைவனம் வரைக்கும் சென்றது.
2. யூதாவின் தெற்கு எல்லை சவக்கடலின் தெற்குக்கோடியில் துவங்கியது.
3. அந்த எல்லை தேள்கணவாயின் தெற்காக சீன் மலைப்பகுதி வரை தொடர்ந்தது. காதேஸ் பர்னேயாவிற்குத் தெற்காகத் தொடர்ந்தது. எஸ்ரோனிலிருந்து ஆதாரையும் அந்த எல்லை கடந்து சென்றது. ஆதாரிலிருந்து அந்த எல்லை கர்க்காவிற்கு தொடர்ந்தது.
4. அந்த எல்லையானது அஸ்மோன், எகிப்தின் ஆறு, பின் மத்தியதரைக் கடல் எனத் தொடர்ந்தது. இதுவே அவர்களின் தெற்கு எல்லையாயிருந்தது.
5. அத்தேசத்தின் கிழக்கு எல்லை சவக்கடலின் தென்கரையிலிருந்து யோர்தான் நதி கடலோடு சேரும் பகுதிவரைக்கும் இருந்தது. வடக்கு எல்லையானது யோர்தான் நதி சவக்கடலோடு கலந்த பகுதியில் அமைந்தது.
6. பின் அது பெத்எக்லா வரைக்கும் சென்று, பெத் அரபாவின் வடக்கே தொடர்ந்தது. போகனின் கல்வரைக்கும் அந்த எல்லை நீண்டது. (ரூபனின் மகன் போகன்)
7. வடக்கு எல்லை ஆகோர் பள்ளத்தாக்கிலிருந்து தெபீருக்குத் தொடர்ந்தது. பின் வடக்கே திரும்பி கில்காலுக்குச் சென்றது. அதும்மீமின் மலைவழியாகச் செல்லும் பாதையின் குறுக்கே அந்த எல்லை இருந்தது. அது நதியின் தெற்குப் பகுதியாகும். என்சேமேசின் தண்ணீரின் வழியாகத் தொடர்ந்தது. இந்த எல்லை என்ரொகேலில் முடிந்தது.
8. எபூசியர் நகரின் தெற்குப் பகுதிக்குப் பக்கத்திலுள்ள இன்னோம் பள்ளத்தாக்கு வழியாக அவ்வெல்லை சென்றது. (அந்த எபூசிய நகரமே எருசலேம் எனப்பட்டது.) அவ்விடத்தில் எல்லை இன்னோம் பள்ளத்தாக்கின் மேற்கேயுள்ள மலையுச்சிவரைக்கும் சென்றது. ரெப்பாயீம் பள்ளத் தாக்கின் வடக்கு மூலை வரைக்கும் அது இருந்தது.
9. அந்த இடத்திலிருந்த நெப்தோவாவின் நீரூற்று வரைக்கும் எல்லை தொடர்ந்து எப்பெரோன் மலைக்கருகேயுள்ள நகரங்களுக்குச் சென்றது. அங்கு எல்லை திரும்பி, பாலாவரைக்கும் போனது. (பாலா, கீரியாத் யெயாரீம் என்றும் அழைக்கப்படுகிறது.)
10. பாலாவில் எல்லை மேற்கே திரும்பி சேயீரின் மலை நாட்டிற்குச் சென்றது. யெயாரீம் மலையின் (கெசலோனின்) வடக்குப் பகுதிக்கு அது தொடர்ந்து பெத்ஷிமேசுக்குத் தொடர்ந்தது. அங்கிருந்து எல்லை திம்னாவைக் கடந்தது.
11. பிறகு எக்ரோனுக்கு வடக்கேயுள்ள மலையை எல்லை எட்டியது. அங்கிருந்து சிக்ரோனுக்குத் திரும்பி, பாலா மலையைத் தாண்டியது. பிறகு யாப்னியேலுக்குச் சென்று, மத்திய தரைக்கடலில் முடிவடைந்தது.
12. யூதாவுக்குரிய தேசத்தின் மேற்கெல்லையாக மத்தியதரைக் கடல் இருந்தது. இந்த நான்கு எல்லைகளுக்கும் மத்தியில் யூதாவின் தேசம் இருந்தது. யூதாவின் குடும்பங்கள் அப்பகுதியில் வாழ்ந்து வந்தார்கள்.
13. யூதாவின் தேசத்தின் ஒரு பகுதியை எப்புன்னேயின் மகன் காலேபுக்குக் கொடுக்கும்படியாக, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டார். எனவே தேவன் கட்டளையிட்டபடி அத்தேசத்தைக் காலேபுக்கு யோசுவா கொடுத்தான். கீரியாத் அர்பா (எபிரோன்) என்னும் நகரத்தை யோசுவா அவனுக்குக் கொடுத்தான். (அர்பா ஏனாக்கின் தந்தை.)
14. எபிரோனில் வாழ்ந்த சேசாய், அகீமான், தல்மாய் என்ற மூன்று ஏனாக்கிய குடும்பங்களையும் காலேப் வெளியேறும்படி செய்தான். அவை ஏனாக்கின் குடும்பத்தைச் சார்ந்தவை.
15. தெபீரில் வாழ்கின்ற ஜனங்களோடு காலேப் போர் செய்தான். (முன்பு, தெபீரைக் கீரியாத் செப்பேர் என்றும் அழைத்தார்கள்.)
16. காலேப், “நான் கீரியாத் செப்பேரைத் தாக்க வேண்டும். நகரத்தைத் தாக்கி முறியடிக்கிறவனுக்கே என் மகளாகிய அக்சாளை மணம் செய்து வைப்பேன்” என்றான்.
17. காலேபின் சகோதரனும், கேனாசின் மகனுமான ஒத்னியேல் நகரை வென்றான். எனவே, ஒத்னியேலுக்கு மனைவியாக தனது மகள் அக்சாளைக் காலேப் கொடுத்தான்.
18. ஒத்னியேலோடு வாழ்வதற்காக அக்சாள் சென்றாள். இன்னும் கொஞ்சம் நிலத்தைத் தந்தையிடம் கேட்டுப்பெறும்படி ஒத்னியேல் அக்சாளிடம் சொன்னான். அக்சாள் தந்தையிடம் பேசுவதற்காகக் கழுதையிலிருந்து இறங்கியதும், காலேப் அவளை நோக்கி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான்.
19. அக்சாள், “என்னை ஆசீர்வதியுங்கள். நெகேவில் காய்ந்த பாலைவன நிலத்தை எனக்குக் கொடுத்தீர்கள். தண்ணீருள்ள நிலத்தில் கொஞ்சம் எனக்குச் சேர்த்துக் கொடுங்கள்” என்று கூறினாள். எனவே அவள் கேட்டதைக் காலேப் கொடுத்தான். அந்நிலத்தில் மேற்ப்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் இருந்த தண்ணீர் வளமுள்ள நிலங்களைக் கொடுத்தான்.
20. தேவன் அவர்களுக்கு வாக்களித்த தேசத்தை யூதா கோத்திரத்தினர் பெற்றனர். ஒவ்வொரு யூதா கோத்திரத்தினரும் தங்களுக்குரிய பங்கு நிலத்தைப் பெற்றனர்.
21. நெகேவின் தெற்கிலுள்ள ஊர்களையெல்லாம் யூதா கோத்திரத்தினர் பெற்றனர். ஏதோமின் எல்லையருகே இந்த ஊர்கள் இருந்தன. அவ்வூர்களின் பட்டியல் இங்கே தரப்படுகிறது: கப்செயேல், ஏதேர், யாகூர்,
22. கீனா, தீமோனா, அதாதா,
23. கேதேஸ், ஆத்சோர், இத்னான்,
24. சீப், தேலெம், பெயாலோத்,
25. ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன், (ஆத்சோர்)
26. ஆமாம், சேமா, மொலாதா,
27. ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பாலேத்,
28. ஆத்சார்சுவால், பெயெர் செபா, பிஸ்யோத்யா,
29. பாலா, ஈயிம், ஆத்சேம்,
30. எல்தோ லாத், கெசீல், ஒர்மா,
31. சிக்லாக், தமன்னா, சன்சன்னா,
32. லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் ஆகிய மெர்த்தம் 29 ஊர்களும் அவற்றின் வயல்களும் இருந்தன.
33. மேற்கு மலையடிவாரத்தில் யூதா கோத்திரத்தினர் தங்கள் ஊர்களைப் பெற்றனர். அந்த ஊர்களின் பட்டியல் வருமாறு: எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
34. சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
35. யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
36. சாராயீம், அதித்தாயீம், கெதேரா, (கேதெரொத்தாயீம்) ஆகியவை ஆகும். மொத்தத்தில் 14 ஊர்களும் அவற்றின் வயல்களும் அங்கு இருந்தன.
37. யூதா கோத்திரத்தினருக்கு சேனான், அதாஷா, மிக்கதால்காத்,
38. திலியான், மிஸ்பே யோக்தெயேல்,
39. லாகீஸ், போஸ்காத், எக்லோன்,
40. காபோன், லகமாம், கித்லீஷ்.
41. கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா, ஆகியவை உட்பட மொத்தம் 16 ஊர்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் கொடுக்கப்பட்டன.
42. யூதாவின் ஜனங்கள் இந்த ஊர்களையும் பெற்றார்கள். லிப்னா, ஏத்தோர், ஆஷான்,
43. இப்தா, அஸ்னா, நெத்சீப்,
44. கேகிலா, அக்சீப், மரேஷா ஆகியவை ஆகும். மொத்தத்தில் ஒன்பது ஊர்களும் அவற்றைச் சுற்றிலுமுள்ள ஊர்களும் இருந்தன.
45. எக்ரோனும் அதைச் சார்ந்த ஊர்களும் வயல்களும் யூதாவின் ஜனங்களுக்குக் கிடைத்தன.
46. அவர்கள் எக்ரோனுக்கு மேற்கிலுள்ள பகுதியையும் அஸ்தோத்திற்கு அருகேயுள்ள ஊர்களையும் வயல்களையும் பெற்றார்கள்.
47. அஸ்தோத்தைச் சுற்றிலுமுள்ள பகுதியும் அங்குள்ள ஊர்களும் யூதாவின் நிலத்தின் பகுதிகளாயின. காசாவைச் சுற்றிலுமுள்ள பகுதிகளையும் வயல்களையும் ஊர்களையும் கூட யூதாவின் ஜனங்கள் பெற்றனர். அவர்களது நிலம் எகிப்தின் நதி மற்றும் மத்தியதரைக் கடலின் கடற்கரை வரைக்கும் தொடர்ந்தது.
48. யூதாவின் ஜனங்களுக்கு மலைநாட்டின் ஊர்களும் கொடுக்கப்பட்டன. இங்கு அவ்வூர்களின் பட்டியல் தரப்படுகிறது: சாமீர், யாத்தீர், சோக்கோ,
49. தன்னா, கீரியாத், சன்னா (தெபீர்),
50. ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,
51. கோசேன், ஓலோன், கிலொ. இவை பதினொரு ஊர்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் உள்ளடங்கிய பகுதி ஆகும்.
52. இந்த ஊர்களும் கூட யூதாவின் ஜனங்களுக்குத் தரப்பட்டன: அராப், தூமா, எஷியான்,
53. யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,
54. உம்தா, கீரீயாத்அர்பா, (எபிரோன்), சீயோர். மொத்தம் ஒன்பது ஊர்களும், அவற்றைச் சுற்றிலுமிருந்த வயல்களும் உள்ளடங்கிய பகுதி ஆகும்.
55. இன்னும் சில ஊர்களும் யூதா ஜனங்களுக்கு அளிக்கப்பட்டன: மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
56. யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,
57. காயின், கிபியா, திம்னா, ஆகிய பத்து ஊர்களும் அவற்றின் வயல்களும் உள்ளடங்கிய பகுதியாகும்.
58. யூதாவின் ஜனங்களுக்குக் கீழ்வரும் ஊர்களும் வழங்கப்பட்டன: அல்கூல், பெத்சூர், கெதோர்,
59. மகாராத், பெதானோத், எல்தெகோன், ஆகிய ஆறு ஊர்களும், அவற்றைச் சுற்றிலும் காணப்பட்ட வயல்களும் உள்ளடங்கிய பகுதி ஆகும்.
60. ரபா, கீரியாத்பாகால் (கீரியாத்யெயாரீம்) ஆகிய இரண்டு ஊர்களும் யூதாவின் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டன.
61.பாலைவனத்தின் பின்வரும் ஊர்களும் யூதாவின் ஜனங்களுக்கு அளிக்கப்பட்டன: அவ்வூர்களின் பட்டியல் இங்குத் தரப்படுகிறது: பெத்அரபா, மித்தீன், செக்காக்கா,
62. நிப்சான், உப்பு நகரம், என்கேதி ஆகிய ஆறு ஊர்களும், அவற்றைச் சுற்றியிருந்த வயல்களும் உள்ளடங்கிய பகுதி ஆகும்.
63. எருசலேமில் வாழ்ந்த எபூசியரை யூதாவின் படையால் துரத்த முடியவில்லை. எனவே இன்றும் எருசலேமில் யூதர்களோடே எபூசியர் வாழ்கின்றனர்.
யோசுவா அதிகாரங்கள்:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24