எரிகோ பிடிக்கப்படுதல்

1. எரிகோ நகரம் மூடப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்கள் அருகே இருந்ததால், நகர ஜனங்கள் அஞ்சினார்கள்.  நகரத்திற்குள் எவரும் போகவுமில்லை. நகரத்திலிருந்து யாரும் வெளியே வரவுமில்லை.

2. அப்போது கர்த்தர் யோசுவாவிடம், “பார், நீ எரிகோ நகரத்தை வீழ்த்தும்படி செய்வேன். நீ அந்நகரத்தின் அரசனையும், போர் செய்யும் ஜனங்களையும் தோற்கடிப்பாய்.

3. உனது சேனையோடு ஒவ்வொரு நாளும் நகரை ஒரு முறை சுற்றிச் செல். ஆறு நாட்கள் இவ்வாறு செய்.

4. வெள்ளாட்டுக் கடாவின் கொம்பால் செய்த எக்காளங்களை ஏழு ஆசாரியர்கள் சுமக்கும்படி சொல். பரிசுத்தப் பெட்டியையும் சுமந்து செல்லுங்கள். ஆசாரியர்களை பரிசுத்தப் பெட்டிக்கு முன் அணிவகுத்துச் செல்லும்படி கூறு. ஏழாம் நாள், ஏழுமுறை அணிவகுத்துச் செல்லும் போது ஆசாரியர்களிடம் எக்காளம் ஊதும்படி கூறு.

5. ஆசாரியர்கள் எக்காளத்தை உரத்த குரலில் ஊதும் சத்தத்தை நீ கேட்டதும், எல்லா ஜனங்களையும் உரத்த சத்தம் எழுப்பச் சொல். அவ்வாறு நீங்கள் செய்யும் போது, நகரத்தின் சுவர்கள் இடிந்து விழும். உனது ஜனங்கள் நகரத்திற்குள் நுழைவார்கள்” என்றார்.

6. நூனின் மகனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து அவர்களிடம், “கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து செல்லுங்கள். ஏழு ஆசாரியர்களிடம் எக்காளத்தைச் சுமந்துக்கொண்டு பெட்டிக்கு முன் அணிவகுத்துப் போகச்சொல்லுங்கள்” என்றான்.

7. பின் யோசுவா ஜனங்களிடம், “இப்போது புறப்பட்டுச் செல்லுங்கள்! நகரைச் சுற்றிலும் அணிவகுத்துச் செல்லுங்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக ஆயுதமேந்திய வீரர்கள் அணிவகுத்துச் செல்வார்கள்” என்றான்.

8. யோசுவா ஜனங்களிடம் பேசி முடித்த பிறகு, கர்த்தருக்கு முன்பாக அந்த ஏழு ஆசாரியர்களும் அணிவகுத்துச் சென்றார்கள். அவர்கள் ஏழு எக்காளங்களை ஏந்திக் கொண்டு, அணிவகுத்துச் சென்றபோது ஊதினார்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்தவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.

9. ஆயுதமேந்திய வீரர்கள் ஆசாரியர்களுக்கு முன்பு சென்றனர். பரிசுத்தப் பெட்டிக்குப் பின்பு சென்றோர் அணிவகுத்துச் செல்லும்போது, எக்காளம் ஊதினார்கள்.

10. போர் முழக்கம் செய்யாதபடிக்கு யோசுவா ஜனங்களுக்குக் கூறியிருந்தான். அவன், “சத்தம் போடாதீர்கள். நான் சொல்லும் நாள் வரைக்கும் எந்த வார்த்தையும் பேசாதீர்கள். அதன் பிறகு சத்தமிடலாம்!” என்றான்.

11. நகரத்தைச் சுற்றிலும் ஒருமுறை கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் சுமந்து வருமாறு யோசுவா செய்தான். பின்பு அவர்கள் முகாமிட்டிருக்கும் இடத்திற்குச் சென்று இரவைக் கழித்தனர்.

12. மறுநாள் அதிகாலையில், யோசுவா எழுந்தான். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் மீண்டும் சுமந்தனர்.

13. ஏழு ஆசாரியர்களும், ஏழு எக்காளங்களை ஏந்திச் சென்றனர். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக, அவர்கள் அணிவகுத்து எக்காளங்களை ஊதியபடியே நடந்தார்கள். ஆயுதங்களை ஏந்தியிருந்த வீரர்கள் அவர்களுக்கு முன்னால் அணிவகுத்துச் சென்றார்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்குப் பின்னால் நடந்து சென்ற மீதி ஜனங்கள் அணிவகுத்தும், தங்களது எக்காளங்களை ஊதியும் சென்றார்கள்.

14. எனவே இரண்டாம் நாளும், அவர்கள் எல்லோரும் நகரைச் சுற்றிலும் ஒருமுறை சென்றனர். பின் அவர்கள் முகாமிற்குத் திரும்பினார்கள். இவ்வாறே ஆறு நாட்கள் தொடர்ந்து செய்தனர்.

15. ஏழாவது நாள், அதிகாலையிலேயே எழுந்து நகரத்தைச் சுற்றிலும் ஏழு முறை நடந்தனர். முந்தின நாட்களில் நடந்து சென்றதுபோலவே சென்றார்கள். ஆனால், அன்றைய தினம் ஏழுமுறை நகரைச் சுற்றி வந்தனர்.

16. ஏழாவது முறை நகரைச் சுற்றி வந்தபோது, ஆசாரியர்கள் எக்காளம் ஊதினார்கள். அப்பொழுது, யோசுவா: “இப்போது, சத்தமிடுங்கள்! கர்த்தர் இந்நகரத்தை உங்களுக்குத் தருகிறார்!

17. நகரமும் அதிலுள்ளவை அனைத்தும் கர்த்தருக்குரியவை. ராகாப் என்னும் வேசியும் அவள் வீட்டினரும் மட்டுமே உயிரோடிருப்பார்கள். அவர்கள் கொல்லப்படக்கூடாது. ஏனென்றால் ராகாப் இரண்டு ஒற்றர்களுக்கும் உதவினாள்.

18. எல்லாவற்றையும் நாம் அழிக்க வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். எந்தப் பொருட்களையும் எடுக்காதீர்கள். அவற்றை எடுத்து நமது முகாமிற்குக்கொண்டு வந்தால் நீங்கள் அழிக்கப்படுவதுடன், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லலோருக்கும் தொல்லையை வரவழைப்பீர்கள்.

19. எல்லா வெள்ளியும், பொன்னும், வெண்கலம், இரும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்களும் கர்த்தருக்குரியவை. அப்பொருட்கள் கர்த்தருடைய ஆலய பொக்கிஷத்தில் சேர்க்கப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டான்.

20. ஆசாரியர்கள் எக்காளம் ஊதின சத்தத்தைக் கேட்டு ஜனங்கள் ஆரவாரம் செய்தபோது சுவர்கள் இடிந்து விழுந்தன. ஜனங்கள் நேரே நகரத்திற்குள் நுழைந்தனர். அவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் அந்நகரை வென்றனர்.

21. அங்குள்ள அனைத்தையும், அங்கு வாழ்ந்த உயிரினங்களையும் இஸ்ரவேல் ஜனங்கள் அழித்தனர். அவர்கள் இளைஞரும் முதியோருமாகிய ஆண்களையும், இளைஞரும் முதியோருமாகிய பெண்களையும், ஆடுமாடுகளையும், கழுதைகளையும் கொன்றனர்.

22. யோசுவா இரண்டு ஒற்றரோடும் பேசினான். யோசுவா, “அந்த வேசியின் வீட்டிற்குள் போங்கள். அவளையும், அவளோடு இருப்போர் அனைவரையும் வெளியே அழைத்து வாருங்கள். நீங்கள் அவளுக்கு அளித்த வாக்குறுதியின்படி இதைச் செய்யுங்கள்” என்றான்.

23. அவ்விதமே அவ்விருவரும் அவளுடைய வீட்டிற்குள் சென்று ராகாபை அழைத்து வந்தனர். அவளது தந்தை, தாய், சகோதரர், அவள் குடும்பத்தினர், அவளோடிருந்த ஜனங்கள் எல்லோரையும் வெளியே அழைத்து வந்து, இஸ்ரவேலரின் முகாமிற்கு வெளியே ஒரு பாதுகாப்பான இடத்தில் அவர்களை வைத்தனர்.

24. பின் இஸ்ரவேல் ஜனங்கள் நகரத்தை எரித்தனர். வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு ஆகியவற்றாலான பொருட்களைத் தவிர பிறவற்றை நெருப்புக்கு இரையாக்கினர். அப்பொருட்களை மட்டும் கர்த்தருடைய ஆலய பொக்கிஷத்தில் சேர்ந்தனர்.

25. ராகாப் என்னும் வேசியையும், அவளது குடும்பத்தாரையும், அவளோடிருந்தவர்களையும் யோசுவா காப்பாற்றினான். யோசுவா எரிகோவிற்கு ஒற்றர்களை அனுப்பியபோது ராகாப் அவர்களுக்கு உதவியதால் யோசுவா அவர்களை வாழவிட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் இன்னும் ராகாப் வாழ்கிறாள்.

26. அப்போது: “எரிகோவை மீண்டும் கட்டியெழுப்புகிற எவனும் கர்த்தரால் அழிவைக் காண்பான். இந்த நகரின் அஸ்திபாரத்தை இடுபவன், தன்னுடைய முதலாவதாகப் பிறந்த மகனை இழப்பான். நகரவாயிலை அமைப்பவன் தனது கடைசி மகனை இழப்பான்” என்ற சாப அறிவிப்பை யோசுவா வெளியிட்டான்.

27. கர்த்தர் யோசுவாவோடிருந்தார். நாடு முழுவதும் யோசுவாவின் புகழ் பரவியது.

யோசுவா அதிகாரங்கள்:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

(Visited 2 times, 1 visits today)