ஆயீ அழிக்கப்படுதல்
1. கர்த்தர் யோசுவாவை நோக்கி, “அஞ்சாதே, முயற்சியைக் கைவிடாதே. போர் செய்யும் ஆண்களை ஆயீக்கு வழிநடத்து. ஆயீயின் அரசனை அழிக்க நான் உதவுவேன். அவன் ஜனங்கள், நகரம், தேசம் ஆகியவற்றை உனக்குத் தருகிறேன்.
2. எரிகோவுக்கும் அதன் அரசனுக்கும் செய்தவற்றை நீ ஆயீக்கும், அதன் அரசனுக்கும் செய்வாய். இம்முறை எல்லா செல்வத்தையும், கால் நடைகளையும் உங்களுக்காக வைத்துக் கொண்டு உனது ஜனங்களோடு செல்வத்தைப் பங்கிட்டுக்கொள்வாய். இப்போது, நகரத்தின் பின்னே உன் வீரர்களில் சிலரை மறைந்துகொள்ளச் சொல்” என்றார்.
3. யோசுவா தனது சேனையை ஆயீக்கு நேராக வழி நடத்தினான். பின் 30,000 சிறந்த போர்வீரரைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரவில் அனுப்பினான்.
4. யோசுவா அவர்களுக்குப் பின் வருமாறு கட்டளையிட்டு: “நான் உங்களுக்கு சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நகரத்திற்குப் பின்னாலுள்ள பகுதியில் நீங்கள் ஒளிந்திருக்க வேண்டும். தாக்குவதற்கேற்ற நேரத்துக்காக காத்திருங்கள். நகரத்திலிருந்து வெகு தூரம் செல்லாதீர்கள். தொடர்ந்து கவனித்தபடி தயாராக இருங்கள்.
5. நகரத்திற்கு நேராக அணிவகுத்துச் செல்வதற்கு நான் என்னுடன் உள்ளவர்களை வழி நடத்துவேன். நகரத்தின் ஜனங்கள் எங்களை எதிர்த்து சண்டையிட வெளியில் வருவார்கள். நாம் முன்னர் செய்தபடியே, திரும்பி ஓடுவோம்.
6. அம்மனிதர்கள் எங்களை நகரத்திற்கு வெளியே துரத்துவார்கள். முன்பைப் போல் நாம் நகரத்திற்கு வெளியே ஓடுகிறோம் என்று அவர்கள் நினைப்பார்கள். இவ்வாறு நாங்கள் ஓடிவிடுவோர்களைப் போலக் காண்பிப்போம்.
7. அப்போது நீங்கள் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்து நகரத்தைக் கைப்பற்ற வேண்டும். வெற்றி பெறும் வல்லமையைத் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருவார்.
8. “கர்த்தர் கூறுகிறபடியே நீங்கள் செய்ய வேண்டும். என்னைக் கவனியுங்கள். நகரத்தைத் தாக்குவதற்கான கட்டளையை நான் இட்டதும் நகரத்தைக் கைப்பற்றி, அதற்குத் தீ மூட்டுங்கள்” என்றான்.
9. யோசுவா அம்மனிதர்களை மறைவிடங்களுக்கு அனுப்பியபின் காத்திருந்தான். அவர்கள் பெத்தேலுக்கும் ஆயீக்கும் மத்தியிலுள்ள ஓரிடத்திற்குச் சென்றனர். அது ஆயீக்கு மேற்கிலிருந்தது. அன்றிரவு யோசுவா தனது ஜனங்களோடு தங்கியிருந்தான்.
10. மறுநாள் அதிகாலையில் யோசுவா ஆண்களைக் கூடிவரும்படி அழைத்தான். பின் யோசுவாவும், இஸ்ரவேல் தலைவர்களும் அவர்களை ஆயீக்கு வழிநடத்தினர்.
11. யோசுவாவோடிருந்த எல்லா வீரர்களும் ஆயீக்கு நேராக அணிவகுத்துச் சென்று நகரத்திற்கு முன்னே சென்று நின்றனர். நகரத்திற்கு வடக்கே படை முகாமிட்டது. பாளையத்திற்கும் ஆயீக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
12. அப்போது யோசுவா சுமார் 5,000 ஆண்களைத் தெரிந்துகொண்டு, பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவில், நகரத்திற்கு மேற்கேயுள்ள பகுதியில் மறைந்திருக்குமாறு கூறி, அவர்களை அனுப்பினான்.
13. யோசுவா அவனது ஆட்களைப் போருக்குத் தயாராக்கினான். நகரத்திற்கு வடக்கே பெரிய முகாம் இருந்தது. மற்ற ஆட்கள் மேற்கே மறைந்திருந்தனர். இரவில் யோசுவா பள்ளத்தாக்கினுள் இறங்கிச் சென்றான்.
14. இஸ்ரவேலரின் படையைக் கண்டதும் ஆயீயின் அரசனும் அவனது ஆட்களும் எழுந்து இஸ்ரவேலரின் படையோடு போர் செய்வதற்கு விரைந்து வந்தனர். ஆயீயின் அரசன் நகரின் கிழக்குப் பகுதிக்குச் சென்றான். அதனால் நகருக்குப் பின்னே மறைந்திருந்த வீரர்களை அவன் பார்க்கவில்லை.
15. யோசுவாவும், இஸ்ரவேலின் மனிதர்களும் ஆயீயின் படையினர் தம்மைத் துரத்திவர இடம் கொடுத்தனர். யோசுவாவும் அவனது ஆட்களும் பாலைவனத்திற்கு நேராக கிழக்கே ஓட ஆரம்பித்தனர்.
16. நகரத்து ஜனங்கள் சத்தமிட்டுக் கொண்டே, யோசுவாவையும் அவனது மனிதர்களையும் துரத்த ஆரம்பித்தனர். எல்லா ஜனங்களும் நகரத்திற்கு வெளியே வந்தனர்.
17. ஆயீ, பெத்தேல் ஆகியவற்றின் எல்லா ஜனங்களும் இஸ்ரவேல் படையைத் துரத்தினார்கள். நகரம் திறந்திருந்தது. யாரும் நகரத்தைப் பாதுகாப்பதற்காகப் பின் தங்கவில்லை.
18. அப்போது கர்த்தர் யோசுவாவை நோக்கி, “உன் ஈட்டியை ஆயீ நகரத்திற்கு நேராக நீட்டு, நான் உனக்கு அந்நகரத்தைக் கொடுப்பேன்” என்றார். எனவே யோசுவா ஆயீ நகரத்திற்கெதிராக அவனது ஈட்டியை நீட்டினான்.
19. மறைந்திருந்த இஸ்ரவேலர் இதைக் கண்டனர். அவர்கள் மறைவிடங்களிலிருந்து வெளிவந்து நகரத்திற்குள் நுழைந்து அதைத் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர். பிறகு வீரர்கள் நகரத்திற்கு நெருப்பூட்டினர்.
20. ஆயீ நகர ஜனங்கள் திரும்பிப் பார்த்து, தங்கள் நகரம் எரிவதையும், வானத்திற்கு நேராகப் புகை எழும்புவதையும் கண்டனர். எனவே அவர்கள் தங்கள் வலிமையையும் துணிவையும் இழந்து, இஸ்ரவேலரைத் துரத்துவதைக் கைவிட்டனர். இஸ்ரவேலர் ஓடுவதை நிறுத்திவிட்டு திரும்பி ஆயீ நகர மக்களோடு போரிட்டனர். ஆயீ நகர ஜனங்கள் ஓடி ஒளிவதற்கு எந்த இடமும் அகப்படவில்லை.
21. யோசுவாவும் அவனது ஆட்களும், நகரம் தங்கள் வசமானதையும், நகரத்திலிருந்து புகையெழுவதையும் கண்டதும் ஓடுவதை நிறுத்தி, திரும்பிவந்து, ஆயீ நகர ஜனங்ககளை எதிர்த்தனர்.
22. அப்போது ஒளிந்திருந்த மனிதர்களும் நகரத்திலிருந்து வந்து போரில் உதவினார்கள். ஆயீ நகர ஜனங்களை இஸ்ரவேலர் இருபுறமும் சூழ்ந்து வளைந்துகொண்டனர். இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்தனர். ஆயீ நகர மனிதர்கள் தப்பி, உயிரோடிராதபடி இஸ்ரவேலர் அவர்களோடு போரிட்டு அழித்தனர்.
23. ஆனால், ஆயீ நகர அரசனை உயிரோடு பிடித்து யோசுவாவிற்கு முன்னால் வீரர்கள் கொண்டு வந்தனர்.
போரைப்பற்றிய விமர்சனம்
24. போரின்போது, இஸ்ரவேலின் படை வீரர்கள் ஆயீ நகர ஜனங்களை வயல்களுக்கும், பாலைவனத்திற்கும் துரத்தினார்கள். ஆயீயின் மனிதர்களை இஸ்ரவேல் சேனையினர் வயல்களிலும், பாலைவனத்திலும் கொன்று குவித்தனர். பின் இஸ்ரவேல் வீரர்கள் ஆயிக்குச் சென்று அங்கு உயிரோடிருந்த ஜனங்களையும் கொன்றனர்.
25. ஆயீயின் எல்லா ஜனங்களும் அன்று மரித்தனர். அவர்கள் ஆண்களும் பெண்களுமாக 12,000 பேர் இருந்தனர்.
26. தனது ஆட்கள் நகரை அழிப்பதற்கு அடையாளமாக யோசுவா அவனது ஈட்டியை ஆயீக்கு நேராக நீட்டிக்கொண்டிருந்தான். நகரத்தின் ஜனங்கள் அனைவரும் அழியும்வரைக்கும் அவ்வாறே நின்றிருந்தான்.
27. இஸ்ரவேலர் மிருகங்களையும், பிற பொருட்களையும் தங்களுக்காக நகரத்திற்கு வெளியே கொண்டு வந்தனர். அவர்கள் இவ்வாறு செய்யும்படி கர்த்தர் ஏற்கெனவே யோசுவாவிடம் கூறியிருந்தார்.
28. யோசுவா ஆயீ நகரை எரித்தான். அந்நகரம் வெறும் கற்களின் குவியலாக்கப்பட்டது. இன்று வரைக்கும் அது அப்படியே உள்ளது.
29. ஆயீயின் அரசனை யோசுவா ஒரு மரத்தில் தூக்கிலிட்டான். மாலையில், அரசனின் உடலை அப்புறப்படுத்துமாறு தனது ஆட்களுக்குக் கூறினான். அவர்கள் நகர வாசலுக்கு வெளியே அவனது உடலை வீசி, பின் அவ்வுடலைக் கற்களால் மூடினார்கள். கற்களின் குவியலும் இன்றளவும் அங்கேயே உள்ளது.
ஆசீர்வாதமும் சாபமும் பற்றி வாசித்தல்
30. அப்போது யோசுவா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை ஏபால் மலைமீது கட்டினான்.
31. இஸ்ரவேலின் ஜனங்களுக்குப் பலிபீடத்தை எப்படிக் கட்டுவதென்று கர்த்தருடைய தாசனான மோசே கூறியிருந்தான். மோசேயின் சட்ட புத்தகத்தில் விளக்கப்பட்டிருந்தபடி யோசுவா பலிபீடத்தைக் கட்டினான். வெட்டப்படாத கற்களால் பலிபீடம் கட்டப்பட்டது. அக்கற்களின் மீது எந்த கருவியும் பட்டிருக்கவில்லை. கர்த்தருக்குத் தகன பலிகளை அப்பலிபீடத்தில் செலுத்தினர். சமாதான பலிகளையும் செலுத்தினர்.
32. அவ்விடத்தில் யோசுவா மோசேயின் சட்டங்களைக் கற்களில் எழுதினான். இஸ்ரவேலின் ஜனங்கள் எல்லோரும் பார்க்கும்படியாக அவன் இதைச் செய்தான்.
33. பரிசுத்தப் பெட்டியைச் சூழ்ந்து தலைவர்களும், அதிகாரிகளும், நியாயாதிபதிகளும், இஸ்ரவேலரும் நின்றனர். கர்த்தருடைய உடன்படிக்கையுள்ள பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து வந்த லேவி கோத்திரத்தின் ஆசாரியர்களுக்கு முன்னே அவர்கள் நின்று கொண்டிருந்தனர். இஸ்ரவேலின் ஜனங்களும், பிறரும் அங்கே நின்றிருந்தனர். பாதி ஜனங்கள் கூட்டத்தினர் ஏபால் மலைக்கு முன்பும், மற்றொரு பாதியினர் கெரிசீம் மலைக்கு முன்னேயும் நின்றார்கள். கர்த்தருடைய தாசனாகிய மோசே ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக இப்படி செய்யும்படி ஜனங்களிடம் கூறியிருந்தான்.
34. சட்டங்களில் கூறப்பட்ட எல்லாவற்றையும் அப்போது யோசுவா வாசித்தான். ஆசீர்வாதங்களையும், சாபங்களையும் குறித்து வாசித்தான். சட்ட புத்தகத்தில் எழுதியிருந்த முறைப்படியே எல்லாவற்றையும் வாசித்தான்.
35. இஸ்ரவேலரோடு வாழ்ந்த அந்நியரும், எல்லாப் பெண்களும், குழந்தைகளும் அங்கிருந்தனர். மோசே கொடுத்த ஒவ்வொரு கட்டளையையும் யோசுவா வாசித்தான்.
யோசுவா அதிகாரங்கள்:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24